திருட்டு புகாரில் சிக்கிய செயல் அலுவலருக்கு ஸ்ரீரங்கம் கோவிலில் கண்காணிப்பாளர் பொறுப்பு
திருட்டு புகாரில் சிக்கிய செயல் அலுவலருக்கு ஸ்ரீரங்கம் கோவிலில் கண்காணிப்பாளர் பொறுப்பு
திருட்டு புகாரில் சிக்கிய செயல் அலுவலருக்கு ஸ்ரீரங்கம் கோவிலில் கண்காணிப்பாளர் பொறுப்பு

திருச்சி:திண்டுக்கல், காளகஸ்தீஸ்வரர் கோவில் திருப்பணியின் போது, குற்றச்சாட்டுக்கு உள்ளான நபருக்கு, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கண்காணிப்பாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதை கண்டித்து, ஹிந்து தமிழர் கட்சி சார்பில், ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, ஹிந்து தமிழர் கட்சி தலைவர் ரவிக்குமார் கூறியதாவது:
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கண்காணிப்பாளராக பணிபுரியும் வேல்முருகன் என்பவர், 2013 -- 14ம் ஆண்டுகளில், திண்டுக்கல், காளகஸ்தீஸ்வரர் கோவிலில், செயல் அலுவலராக பணிபுரிந்தார். அப்போது, பழமையான அந்த கோவிலில் திருப்பணிகள் நடைபெற்றன.
அப்போது, பழமையான சிலைகள், மயில் மண்டப துாண்கள், தெய்வத்திருமேனிகள் களவாடப்பட்டு, அந்தக் கோவிலின் அடையாளங்களை முற்றிலுமாக அழிப்பதற்கு காரணமாக இருந்தவர் தான் வேல்முருகன். இது தொடர்பான வழக்கு, திண்டுக்கல் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.
குற்றச்சாட்டுக்கு உள்ளான ஒருவரை, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், நகைகளை பராமரிக்கும் பொறுப்பாளராக நியமித்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது; கண்காணிக்கப்பட வேண்டும்.
ஆண்டவனின் அடையாளத்தை அழித்து துரோகம் செய்தவர், திருக்கோவில் பணியில் இருக்கக் கூடாது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.