Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ 'மக்களிடையே குழப்பத்தை உண்டாக்கும் கவர்னரை எதிர்த்து தமிழகம் போராடும்': ஸ்டாலின்

'மக்களிடையே குழப்பத்தை உண்டாக்கும் கவர்னரை எதிர்த்து தமிழகம் போராடும்': ஸ்டாலின்

'மக்களிடையே குழப்பத்தை உண்டாக்கும் கவர்னரை எதிர்த்து தமிழகம் போராடும்': ஸ்டாலின்

'மக்களிடையே குழப்பத்தை உண்டாக்கும் கவர்னரை எதிர்த்து தமிழகம் போராடும்': ஸ்டாலின்

ADDED : அக் 06, 2025 12:21 AM


Google News
Latest Tamil News
சென்னை: 'மக்களிடையே குழப்பத்தை உண்டாக்க மட்டுமே பணியாற்றும் கவர்னருக்கு எதிராக, தமிழகம் போராடும்' என, முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:

'தமிழகம் யாருடன் போராடும்' என, கவர்னர் ரவி கேட்டுள்ளார். ஹிந்தி மொழியை ஏற்றுக் கொண்டால் தான், கல்வி நிதியை கொடுப்போம் என இருக்கும் ஆணவத் திமிருக்கு எதிராகப் போராடும்.

அறிவியல் மனப்பான்மையை விதைக்கும் கல்வி நிலையங்களுக்குள் சென்று, மூடநம்பிக்கைகளையும், புரட்டுக் கதைகளையும் சொல்லி, இளம் தலைமுறையை நுாற்றாண்டு பின்னோக்கி இழுக்கும் சதிக்கு எதிராகப் போராடும்.

உச்சி மண்டை வரை மதவெறியை ஏற்றிக்கொண்டு, எதற்கெடுத்தாலும் மதத்தைப் பிடித்துக் கொண்டு, நாட்டின் வளர்ச்சியைத் தடுக்கும் தந்திர கும்பல்கள் தலையெடுக்காமல் இருக்க போராடும்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை, மக்களின் விருப்பத்திற்கு மாறாக நெருக்கும் ஜனநாயக விரோதிகளுக்கு எதிராகப் போராடும்.

கவர்னரின் அதிகார அத்துமீறல்களுக்கு எதிராக, ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்துக்குச் சென்று, மாநில உரிமைகளை நிலைநாட்டுகிறோம். அரசியல் சட்டத்தின் மாண்பை சிறுமைப்படுத்தும் எண்ணம் கொண்டவர்களுக்கு எதிராக தொடர்ந்து போராடும்.

தமிழகத்துக்கு வரவேண்டிய தொழிற்சாலைகளை, தொழில் வளர்ச்சியை, வேலைவாய்ப்புகளை, மிரட்டி அடுத்த மாநிலத்துக்கு அழைத்துச் செல்லும் சதிகாரர்களுக்கு எதிராகப் போராடும். ஆர்.எஸ்.எஸ்., ஆசியுடன், இந்திய மக்களின் ஒற்றுமையை சீர்குலைத்து, மீண்டும் மனுதர்மத்தை நிலைநாட்டத் துடிக்கும் ஆதிக்க வெறியர்களுக்கு எதிராகப் போராடும்.

உலகத்துக்கே பொதுவான வள்ளுவருக்குக் காவிக்கறை பூசுவது முதல், கீழடியின் உண்மைகள் நிலத்துக்கடியிலேயே புதைந்து போக வேண்டும் என்று நினைப்பது வரையிலான வன்மம் இருக்கிறதே, அதற்கு எதிராகப் போராடும்.

லோக்சபா தொகுதிகள் மறுவரையறை வாயிலாக, தமிழகத்தின் வலிமையைக் குறைக்கும் சதிக்கு எதிராகப் போராடும். ஏகலைவனின் கட்டை விரலைக் கேட்டதுபோல் திணித்திருக்கும், 'நீட்' எனும் பலிபீடத்துக்கு எதிராகப் போராடும். நாட்டையே நாசப்படுத்தினாலும், தமிழகம் மட்டும், 11.19 சதவீதம் வளர்ச்சி பெற்று பிற மாநிலங்களுக்கு ஒளி காட்டுகிறதே என்று, நாள்தோறும் அவதுாறுகளைப் பரப்பி, கலவரம் நடக்காதா என ஏங்கிக் கிடக்கும் நரிகளுக்கு எதிராகப் போராடும்.

நாகாலாந்து மக்கள் புறக்கணித்து அனுப்பிய பின்னும் திருந்தாமல், தமிழக மக்களிடையே குழப்பத்தை உண்டாக்க மட்டுமே பணியாற்றும் கவர்னருக்கு எதிராகவும் போராடும்.

இறுதியில் தமிழகம் வெல்லும்; ஒட்டு மொத்த இந்தியாவையும் காக்கும்.

இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us