Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/அவ்வையாரே கள் குடித்தவர் தான்; அடித்து விடுகிறார் சீமான்

அவ்வையாரே கள் குடித்தவர் தான்; அடித்து விடுகிறார் சீமான்

அவ்வையாரே கள் குடித்தவர் தான்; அடித்து விடுகிறார் சீமான்

அவ்வையாரே கள் குடித்தவர் தான்; அடித்து விடுகிறார் சீமான்

ADDED : ஜூன் 13, 2025 08:34 AM


Google News
Latest Tamil News
சென்னை: ''கள் குடித்து விதவைகள் உருவாகவில்லை; டாஸ்மாக் மதுவால் தான் விதவைகள் உருவாகின்றனர்,'' என, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.

துாத்துக்குடி மாவட்டம், பெரியதாழை, குலசேகரப்பட்டினம், திருச்செந்துார் ஆகிய இடங்களில், வரும் 15ம் தேதி கள் இறக்க அனுமதி கேட்டு, பனை மரம் ஏறும் போராட்டம் நடத்தப் போவதாக, சீமான் அறிவித்துள்ளார். அதற்காக, அவர் பனை ஏறுவதற்கு பயிற்சி எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து, சீமான் கூறியதாவது: முதல் கட்டமாக, பெரியதாழையில் பனை ஏறும் போராட்டத்தில் பங்கேற்கிறேன். மீன் குஞ்சுக்கு கடலில் நீந்த சொல்லி கொடுக்க தேவையில்லை. பனை ஏற எனக்கு நன்கு தெரியும். இருந்தாலும், வெகு காலம் ஆகி விட்டதால், சின்ன பயிற்சி தேவை.

தமிழகத்தில், 15 கோடிகள் பனை மரங்கள் இருந்தன. தற்போது, 5 கோடி மரங்களாக குறைந்து விட்டன. அதனால் தான், 'பல கோடி பனை திட்டம், பத்தாண்டுகளில் பசுமை திட்டம்' என்பதை உருவாக்கினோம். லட்சக்கணக்கான விவசாய தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்கு ஆதரமாக இருக்கின்றன.

தன் உடலில் எல்லா பாகத்தையும் பயன்பாட்டிற்கு தரும் மரமான பனையில் இருந்து, 840 பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. அப்படி சிறப்பு வாய்ந்த பனை மரத்திலிருந்து கிடைக்கும் கள் குடித்து, யாரும் இறந்ததில்லை. 'டாஸ்மாக்' கடைகள் இருந்தும் கள்ளச்சாராய சாவுகள் தான் தொடருகின்றன.

சங்க இலக்கியங்களில் கள், மூலிகை சாறாக போற்றப்படுகிறது. அதியமானும், அவ்வையும் கள் உண்டு பேசியுள்ளனர். பானையில் சுண்ணாம்பு தடவி வைத்தால் பதநீர்; சுண்ணாம்பு தடவாமல் இறக்கினால் கள். அதை குடித்து விதவைகள் உருவாகவில்லை. டாஸ்மாக் மது குடித்து தான் விதவைகள் உள்ளனர்.

இந்தியாவில் பல மாநிலங்களில் கள் இறக்கப்படுகிறது. ஆனால், தமிழகத்தில் மட்டும் அனுமதில்லை. காரணம், டாஸ்மாக் கடைகளுக்கு மது அனுப்புகிற தொழிற்சாலை அதிபர்கள் எல்லாரும் ஆட்சியாளர்களுக்கு நெருக்கமாக உள்ளனர். அவர்களுக்கு வரக்கூடிய வருமானம் பாதித்துவிடும்.

வருங்கால சந்ததியரும் பனை பொருட்களையும், அதன் நன்மைகளையும் பயன்படுத்த வேண்டும் என்பதற்காக, அதை பாதுகாக்கும் வகையில் போராட்டத்தை நடத்துகிறேன். இவ்வாறு சீமான் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us