ரூ.80,000 கோடியில் அமைக்கப்படும் நாட்டின் பெரிய 'வாடவண்' துறைமுகம்
ரூ.80,000 கோடியில் அமைக்கப்படும் நாட்டின் பெரிய 'வாடவண்' துறைமுகம்
ரூ.80,000 கோடியில் அமைக்கப்படும் நாட்டின் பெரிய 'வாடவண்' துறைமுகம்

சென்னை:'மஹாராஷ்டிரா மாநிலத்தில் அமைக்கப்பட்டு வரும் நாட்டின் பெரிய, 'வாடவண்' துறைமுகம் பணிகள், வரும் 2029ல் முடிக்கப்படும்' என, மத்திய கப்பல் போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாட்டில், 12 பெரிய துறைமுகங்கள் உட்பட, 200க்கும் மேற்பட்ட துறைமுகங்கள் உள்ளன.
இந்த துறைமுகங்களை நவீனமாக்கி, ஏற்றுமதி மற்றும் இறக்குமதியை அதிகரிக்க, மத்திய கப்பல் போக்குவரத்து துறை, 'சாகர்மாலா' போன்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
இருப்பினும், சீனா போன்ற நாடுகளை ஒப்பிடுகையில், இந்தியாவில் பெரிய அளவிலான துறைமுகம் இல்லாத நிலையில், மஹாராஷ்டிரா மாநிலம் தஹானு அருகில், 'வாடவண் துறைமுகம்' 80,000 கோடி ரூபாயில், பிரமாண்டமாக கட்டப்பட்டு வருகிறது.
இது குறித்து, மத்திய கப்பல் போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியதாவது:
கடந்த ஆண்டில் இதற்கான பணிகள் துவங்கப்பட்டு முழுவீச்சில் நடந்து வருகின்றன. மொத்த பணிகளையும், வரும் 2029ம் ஆண்டில் முடிக்க திட்டமிட்டுள்ளோம்; இது, உலகின் 10 முக்கிய துறைமுகங்களில் ஒன்றாக இடம் பெறுவதோடு, இந்தியாவின் கடல்சார் வர்த்தகத்தையும் இரட்டிப்பாக்கும்.
ஆண்டுக்கு, 298 மில்லியன் டன் சரக்குகளை கையாள முடியும். இங்கிருந்து ஐரோப்பா, ஆப்ரிக்க நாடுகளுக்கும், அமெரிக்காவுக்கு சரக்கு போக்குவரத்து இணைப்பை ஏற்படுத்த முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.