Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/கோர்ட் உத்தரவுக்கு அவமதிப்பு; திருப்பரங்குன்றம் மலை தீபத்துாணில் தீபம் ஏற்றவில்லை!

கோர்ட் உத்தரவுக்கு அவமதிப்பு; திருப்பரங்குன்றம் மலை தீபத்துாணில் தீபம் ஏற்றவில்லை!

கோர்ட் உத்தரவுக்கு அவமதிப்பு; திருப்பரங்குன்றம் மலை தீபத்துாணில் தீபம் ஏற்றவில்லை!

கோர்ட் உத்தரவுக்கு அவமதிப்பு; திருப்பரங்குன்றம் மலை தீபத்துாணில் தீபம் ஏற்றவில்லை!

UPDATED : டிச 04, 2025 10:10 PMADDED : டிச 04, 2025 04:38 AM


Google News
Latest Tamil News
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் பகுதியில் 144 தடை உத்தரவை ரத்து செய்த ஐகோர்ட் கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், இன்று (டிச.,04) இரவு தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என உத்தரவிட்டார். தீபம் ஏற்றப்படாத நிலையில், நாளை (டிச.,5) காலை 10:30 மணிக்கு வழக்கு விசாரணை நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்துள்ளது. மனுதாரர் ராம ரவிக்குமார் தரப்பிலும் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வழக்கு விசாரணை



திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத்துாணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருந்தார். அதை அறநிலையத்துறை செய்யத்தவறிய சூழலில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நேற்று தாக்கல் செய்யப்பட்டது.

தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்த தமிழக அரசின் மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை, ஐகோர்ட் மதுரை கிளையில் இன்று டிச.,4ல் தொடங்கியது. நிர்வாக நீதிபதி ஜெயச்சந்திரன் மற்றும் நீதிபதி ராமகிருஷ்ணன் ஆகியோர் கொண்ட அமர்வு வழக்கை விசாரித்தது. அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் ரவீந்திரனிடம், '144 தடை உத்தரவு எப்போது பிறப்பிக்கப்பட்டது' என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

தடை உத்தரவுக்கான ஆவணங்களை தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். சட்டம் ஒழுங்கை நீதித்துறை கையில் எடுக்கக்கூடாது என்று அரசு தரப்பில் வாதிடப்பட்டது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முன்கூட்டியே தாக்கல் செய்யப்பட்டு விட்டதாகவும் குற்றச்சாட்டு கூறப்பட்டது. சி.ஐ.எஸ்.எப்., பாதுகாப்பு நீதிமன்றத்துக்குத்தான்; சட்டம் ஒழுங்குக்கு அவர்களை பயன்படுத்த முடியாது என்றும் அரசு தரப்பு வாதம். தொடர்ந்து பரபரப்பான வழக்கு விசாரணை நடந்தது.



பகல் 12 மணி

கோவில் நிர்வாகம் செய்யவில்லை

தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று, டிச.,1ம் தேதியே தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்து விட்டார். ஆனால், தீபம் ஏற்ற கோவில் நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை: வழக்கு விசாரணையில் மனுதாரர் ராம ரவிக்குமார் தரப்பு வக்கீல் வாதம்



அமல் செய்யவில்லை


அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் மாலை 4:30 மணியளவில் அளித்த தீர்ப்பில் நீதிபதிகள் கூறியிருப்பதாவது:

இந்த வழக்கு, அரசியலமைப்பு சட்டத்தில் உறுதி அளிக்கப்பட்டுள்ள வழிபாட்டு உரிமை மற்றும் நீதிமன்ற உத்தரவை அரசு நிர்வாகம் அமல்படுத்த வேண்டிய சட்டபூர்வமான கடமை தொடர்பானதாகும். இந்த வழக்கில், தனி நீதிபதி டிச.,1ல் அளித்த தீர்ப்பை, எதிர் மனுதாரர் (கோவில் செயல் அலுவலர்) அமல் செய்யவில்லை. அதுதனி நீதிபதியின் கவனத்துக்கு வந்தபோது, அவர், அர்த்தமுள்ள மாற்றுத்தீர்வு ஒன்றை கூறினார். ஆனால், அதையும் கூட, எதிர் மனுதாரர் அமல் செய்யவில்லை.தனி நீதிபதியின் உத்தரவை தோற்கடிப்பதற்காக, மாவட்ட கலெக்டர் தன் அதிகாரத்தை பயன்படுத்தி, பிரிவு 163ன் கீழ் (பழைய சட்டப்பிரிவு 144) தடை உத்தரவை பிறப்பித்துள்ளார்; போலீஸ் கமிஷனர், மனுதாரர்களை மலை உச்சிக்கு செல்ல விடாமல் தடுத்துள்ளார்.

தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை காட்டிலும், மாவட்ட கலெக்டரின் தடை உத்தரவு மேலானது என்று அரசின் கூடுதல் அட்வகேட் ஜெனரல் கூறுகிறார். எந்த அடிப்படையில் தடைச்சட்டம் பிறப்பிக்கப்பட்டது, எந்த நேரத்தில் பிறப்பிக்கப்பட்டது என்றும், அதற்குரிய கோப்பை காட்டும்படியும் நாங்கள் கேட்டபோது, கூடுதல் அட்வகேட் ஜெனரல் அதை காண்பித்தார்.

நன்கு திட்டமிட்டு


அந்த கோப்பில், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கின் பழைய வரலாறு குறித்த தாள்கள் இருந்தன. டிச.,3ம் தேதி மாலை 6 மணி முதல், மறு உத்தரவு வரும் வரை யாரும் திருப்பரங்குன்றம் மலை உச்சிக்கு செல்லக்கூடாது என்று கலெக்டர் பிறப்பித்த தடை உத்தரவில் குறிப்பிடப்பட்டிருந்தது.எனவே, தடை உத்தரவானது, நீதிமன்ற உத்தரவுக்கு முன் பிறப்பிக்கப்பட்டிருக்க வேண்டும் அல்லது நீதிமன்றம் உண்மை கோப்புகளை கேட்டவுடன் தயார் செய்யப்பட்டிருக்க வேண்டும்.கலெக்டரின் உத்தரவானது, மலை உச்சியில் கூடியிருந்த 100க்கும் மேற்பட்டோர் பற்றி போலீஸ் கமிஷனர் அளித்த தகவலின் அடிப்படையில் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மனுதாரரையும், 10 பேரையும் தீபம் ஏற்றுவதற்காக தீபத்துாணுக்கு செல்ல அனுமதிக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டும், தடை உத்தரவை காரணம் காட்டி எப்படி அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர் என்பதை எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. கலெக்டர் பிறப்பித்த இந்த உத்தரவானது, மத ரீதியான நிகழ்ச்சிகளுக்கு அல்லது கூடுதல்களுக்கு பொருந்தாது என்றும் அந்த உத்தரவிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த தவறிய மனுதாரர்கள், தங்கள் மீதான நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை தவிர்ப்பதற்காக, நன்கு திட்டமிட்டு மேல் முறையீடு செய்துள்ளனர் என்பது இதன் மூலம் தெரியவருகிறது.வேண்டுமென்றே உத்தரவை செயல்படுத்தாமல் இருந்தனரா, இல்லையா என்பதை சம்பந்தப்பட்ட தனி நீதிபதியே முடிவு செய்வார்.

தவறு இல்லை


அரசு நிர்வாகம் வேண்டுமென்றே நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாமல் இருக்கும் நிலையில் தான், சி.ஐ.எஸ்.எப்., படையினரை தனி நீதிபதி உதவிக்கு அழைத்துள்ளார். அதாவது, சட்டப்படியான கடமையை மாநில போலீசார் நிறைவேற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே மத்திய படையின் உதவியை பெறுவதில் எந்த தவறும் இல்லை. நான்காம் மனுதாரரான கோவில் செயல் அதிகாரியிடம் தீபம் ஏற்றும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. அதை அவர் நிறைவேற்ற தவறிய நிலையில், மனுதாரரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இது மாற்றி அமைக்கப்பட்ட உத்தரவு அல்ல. விளக்கு ஏற்றும் நபர் மட்டுமே மாற்றப்பட்டுள்ளார். எனவே, அரசு நிர்வாகம் தாக்கல் செய்துள்ள மேல் முறையீட்டு மனுவானது உள்நோக்கத்துடன் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையில் இருந்து தப்பும் நோக்கத்துடன் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.இவ்வாறு தீர்ப்பில் நீதிபதிகள் தெரிவித்துள்ளார்.

அவமதிப்பு வழக்கு விசாரணை


இதனைத் தொடர்ந்து, மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்றாத அதிகாரிகளுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதி கூறியதாவது: எனது உத்தரவால் யாருக்கும் பாதிப்பு இல்லை. நீங்கள் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளீர்கள். கோயில் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கொஞ்சம் உணர்வுப்பூர்வமாக நடந்து இருக்கலாம் எனக்கூறினார்.

அரசு தரப்பு வழக்கறிஞர் கூறுகையில், இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பிரச்னையை ஏற்படுத்தியுள்ளது. விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுபபுங்கள். சட்டப்படி 4 வாரம் அவகாசம் அளிக்க வேண்டும் என்றார்.

அதற்கு நீதிபதி, 4 வாரம் பதில் கொடுத்தால் என்ன செய்வீர்கள் என கேட்க, அதற்கு சட்டப்படி உரிய பதில் அளிப்போம் என தமிழக அரசு வழக்கறிஞர் கூறினார்.

நீதிபதி கூறியதாவது: நீதிபதிகளிடம் ரவுத்திரம் பழக வேண்டாம். நீதிமன்றத்துக்கு உரிய மரியாதையை வழங்க வேண்டும். மதுரை கலெக்டர், போலீஸ் கமிஷனர் சார்பில் யார் ஆஜராகி உள்ளனர் என்றார்.

நயினார் நாகேந்திரன் தடுத்து நிறுத்தம்

தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் திருப்பரங்குன்றம் செல்வதற்காக காரில் வந்தார். வழியில், கப்பலூர் பகுதியில் அவரை தடுத்து நிறுத்திய போலீசார், திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மீறி சென்றால் கைது செய்யப்படுவீர்கள் என தெரிவித்தனர். இதனையடுத்து, அப்பகுதியில் உள்ள ஓட்டலில் நயினார் நாகேந்திரன் தங்கியுள்ளார்.



ஆஜர்


இதனையடுத்து நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு போலீஸ் கமிஷனர் லோகநாதன் ஆஜரானார். அப்போது நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து நீதிபதி கேள்வி எழுப்பினார்.

அதற்கு போலீஸ் கமிஷனர், பேரிகார்டுகளை அமைத்து மாலை 3: 30 மணி முதல் நடவடிக்கை எடுத்தோம். கூட்டம் அதிகமாகி பிரச்னை வந்ததால், சட்டம் ஒழுங்கு பிரச்னையை கருத்தில் கொண்டு கலெக்டர் 144 தடை உத்தரவு பிறப்பித்தார் என்றார்.

அதற்கு நீதிபதி எப்போது கலெக்டருக்கு பரிந்துரை செய்யப்பட்டது என கேட்க, அதற்கு போலீஸ் கமிஷனர் 5: 30 மணியளவில் பரிந்துரை செய்தோம் எனத் தெரிவித்தார்.

அரசு தரப்பில், எங்களது நோக்கம் நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தக்கூடாது. மதிக்கக்கூடாது என்பதல்ல. பதற்றமான சூழலை கருத்தில் கொண்டே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. போலீஸ் கமிஷனரை பாராட்ட வேண்டும். யாருக்கும் காயம் ஏற்படாத வகையில் அவர் செயல்பட்டார் என்றார்.

நீதிபதி கூறுகையில், மனுதாரர் சிஐஎஸ்எப் பாதுகாப்புடன் மலைக்கு செல்லும் போது போலீஸ் கமிஷனர் தடுத்துள்ளார். 144 தடை உத்தரவு இருப்பதால் மேலே செல்ல முடியாது எனக்கூறியுள்ளார். அதாவது, நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற முடியாது எனக்கூறியுள்ளார். அதனால், உத்தரவு நிறைவேற்ற முடியவில்லை. மாவட்ட கலெக்டர், நீதிமன்றத்தை விட தான் பெரியவர் என நினைத்துள்ளார், என்றார்.

இன்றே கார்த்திகை தீபம்


இதனை தொடர்ந்து திருப்பரங்குன்றத்தில் பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவை ரத்து செய்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், மலையில் தீபத்தூணில் இன்று இரவு கார்த்திகை தீபம் ஏற்ற மனுதாரருக்கு அனுமதி வழங்கியதுடன், அதற்கு போலீஸ் கமிஷனர் லோகநாதன் முழு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். இன்றே தீபத்தை ஏற்றிவிட்டு, நாளை நீதிமன்ற தீர்ப்பு அமல்படுத்தப்பட்டது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.

ஆனால் நீதிமன்றம் உத்தரவிட்டபடி தீபம் ஏற்றப்படவில்லை. இதையடுத்து நாளை டிச.,5 காலை 10:30 மணிக்கு வழக்கு விசாரணை நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சுப்ரீம் கோர்ட்டில்


இதற்கிடையே, தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்துள்ளது. மனுதாரர் ராம ரவிக்குமார் தரப்பிலும் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஆலோசனை

திருப்பரங்குன்றம் போலீஸ் ஸ்டேசனில் தென் மண்டல ஐஜி பிரேம் ஆனந்த் சின்ஹா, டிஐஜி அபிநவ், மதுரை போலீஸ் கமிஷனர் லோகநாதன் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தினர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us