Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ 'முதல்வர் கண்ணில் இதெல்லாம் படக்கூடாது' ராகுல் பேனரை அகற்றிய போலீசார்

'முதல்வர் கண்ணில் இதெல்லாம் படக்கூடாது' ராகுல் பேனரை அகற்றிய போலீசார்

'முதல்வர் கண்ணில் இதெல்லாம் படக்கூடாது' ராகுல் பேனரை அகற்றிய போலீசார்

'முதல்வர் கண்ணில் இதெல்லாம் படக்கூடாது' ராகுல் பேனரை அகற்றிய போலீசார்

ADDED : ஜூன் 20, 2025 04:16 AM


Google News
Latest Tamil News
'முதல்வர் ஸ்டாலின் கண்ணில் இதெல்லாம் படக்கூடாது' என கூறி, ராகுல் பிறந்த நாள் விழா பேனரை போலீசார் அகற்றியதால், அவர்களுடன் காங்கிரஸ் கட்சியினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பார்லிமென்ட் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் பிறந்த நாளை ஒட்டி, தென்சென்னை மத்திய மாவட்ட காங்கிரஸ் சார்பில், நேற்று பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

சென்னை சைதாப்பேட்டை, சின்னமலையில் அமைந்துள்ள கருணை இல்லத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கு அறுசுவை உணவு வழங்கும் நிகழ்ச்சியில், தமிழக காங்.,கின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இதேபோல, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடந்த கொண்டாட்டத்தில், 'கேக்' வெட்டி, இனிப்பு வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த காங்கிரஸ் முன்னணி தலைவர்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகளை வரவேற்றும், ராகுலுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தும், சைதாப்பேட்டை ராஜிவ் சிலை அருகில், காங்கிரஸ் கட்சியினர் பேனர் வைத்தனர்.

அதேநேரம், முதல்வர் ஸ்டாலின், நந்தம்பாக்கத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று விட்டு, அந்த வழியே வருவார் என்பதால், 'முதல்வர் கண்ணில் ராகுல் பிறந்த நாளுக்காக வைக்கப்பட்ட பேனர் படக்கூடாது' எனக்கூறி, போலீசார் பேனரை அகற்றினர்.

தகவல் அறிந்து அங்கு வந்த காங்கிரஸ் கட்சியினர், முதல்வரும், ராகுலும் அண்ணன், தம்பியாக இருக்கும் நிலையில், நீங்கள் எப்படி பேனரை அகற்றலாம் என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்கள் கூறியதை, போலீசார் ஏற்கவில்லை. வேறு வழியின்றி காங்கிரசார் வேறு இடத்தில் பேனர்களை வைத்தனர்.

இதுகுறித்து, காங்கிரஸ் நிர்வாகிகள் கூறியதாவது:


சைதாப்பேட்டை ராஜிவ் சிலை அருகில், காங்கிரசார் வைக்கும் பேனரை அகற்றுவதில் தான் போலீசார் அக்கறை காட்டினர்.

அதேசமயம், அப்பகுதியில் தி.மு.க., - த.வெ.க., கட்சிகளின் பேனர்கள் உள்ளன; அவற்றை போலீசார் அகற்றவில்லை. தி.மு.க., கூட்டணியில் காங்கிரஸ் உள்ளது. ஆனால், காங்., கொடிகளை கட்ட, போலீசார் அனுமதிப்பதில்லை. தி.மு.க., தரப்பு இதை எப்படி அனுமதிக்கிறது.

சைதாப்பேட்டை மட்டுமின்றி, கே.கே.நகர் பகுதியிலும் காங்கிரஸ் கொடி கட்ட, போலீசார் அனுமதி வழங்கவில்லை. இதெல்லாம் முதல்வருக்கு தெரிந்து நடக்க வாய்ப்பில்லை.

இருந்தாலும், தொடர்ச்சியாக இப்படிப்பட்ட கெடுபிடிகள், காங்கிரசுக்கு இருப்பதால், தி.மு.க., தலைமை மீது காங்கிரசார் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

- நமது நிருபர் -





      Our Apps Available On




      Dinamalar

      Follow us