நீதிபதி ஓய்வுக்கு பின் வெளியான தீர்ப்பு ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவு
நீதிபதி ஓய்வுக்கு பின் வெளியான தீர்ப்பு ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவு
நீதிபதி ஓய்வுக்கு பின் வெளியான தீர்ப்பு ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவு
ADDED : பிப் 25, 2024 01:03 AM
சென்னை:சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியின் பணி ஓய்வுக்கு பின், வெளியான முழு தீர்ப்பையும் உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. அந்த வழக்கை மீண்டும் விசாரிக்க, உயர் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்தவர் டி.மதிவாணன்; கீழமை நீதிமன்ற நீதிபதியாக இருந்தவர், பின், உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார்.
குற்றப்பத்திரிகை
சென்னையைச் சேர்ந்த தொழில் அதிபர் நரேஷ் பிரசாத் அகர்வால் என்பவருக்கு எதிரான, 113 கோடி ரூபாய் மோசடி வழக்கை, சி.பி.ஐ., விசாரித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி, நரேஷ் பிரசாத் அகர்வால் தாக்கல் செய்த மனுவை, நீதிபதி மதிவாணன் விசாரித்தார்.
தொழில் அதிபருக்கு எதிரான வழக்கை ரத்து செய்து, 2017 ஏப்ரலில் நீதிபதி மதிவாணன் உத்தரவிட்டார். நரேஷ் பிரசாத் மகன் கணேஷ் அகர்வாலையும் வழக்கில் இருந்து விடுவித்து உத்தரவிட்டார்.
ஒரே வரி உத்தரவாக, நீதிமன்றத்தில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. உத்தரவு பிறப்பித்த அடுத்த மாதத்தில், மே 26ல் நீதிபதி ஓய்வும் பெற்றார்.
ஐந்து மாதங்களுக்கு பின், 114 பக்கங்கள் அடங்கிய தீர்ப்பின் முழு விபரங்கள் வெளியாகின.
உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் சி.பி.ஐ., மேல்முறையீடு செய்தது. மனு, நீதிபதிகள் அபய் ஓகா, உஜல் புயான் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
உத்தரவின் ஒரு பகுதியை, ஒரே வரியில் நீதிபதி பிறப்பித்ததாகவும், பணி ஓய்வுக்குப் பின் விரிவான தீர்ப்பு கிடைத்ததாகவும், சி.பி.ஐ., தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, ஓய்வு பெற்ற பின், இவ்வளவு காலமாக எப்படி வழக்கு ஆவணங்களை வைத்திருக்க முடியும் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
முறையற்றது
ஒரு வரியில் ஏப்ரலில் உத்தரவு பிறப்பித்திருந்தாலும், பணி ஓய்வுக்கு முன் உள்ள இடைப்பட்ட மூன்று வாரங்களுக்குள் விரிவான தீர்ப்பை வெளியிட்டிருக்கலாம்; பணி ஓய்வுக்குப் பின், ஐந்து மாதங்கள் வழக்கு ஆவணங்களை வைத்திருந்தது முறையற்றது; ஏற்க முடியாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
பின், நீதிபதி மதிவாணன் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, மீண்டும் உயர் நீதிமன்றம் விசாரிக்க, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இந்திரா பானர்ஜி இருந்த போது, பல வழக்குகளின் ஆவணங்கள் காணாமல் போனதாக, வழக்கறிஞர்கள் புகார் தெரிவித்தனர். அவற்றில் பெரும்பாலானவை, சி.பி.ஐ., விசாரணை தொடர்பானவை. சி.பி.ஐ., வழக்குகளை, நீதிபதி மதிவாணன் அப்போது விசாரித்து வந்தார். காணாமல் போன வழக்கு ஆவணங்களை மீண்டும் தயார் செய்து, விசாரணைக்கு பட்டியலிடவும், தலைமை நீதிபதி அறிவுறுத்தினார்.
அவ்வாறு, காணாமல் போன ஆவணங்கள் தொடர்பான சில வழக்குகள், நீதிபதி ஜெயச்சந்திரன் முன், விசாரணைக்கு வந்தன.
வழக்கு ஆவணங்கள் மாயமானது குறித்து, நீதிபதியிடம் வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து, வழக்கு ஆவணங்கள் மாயமானது குறித்து, சி.பி.ஐ., விசாரணைக்கு, நீதிபதி ஜெயச்சந்திரன், 2018 ஜூலையில் உத்தரவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.