இறந்தவர் உடலை எடுத்து செல்ல சாலை வசதியில்லை
இறந்தவர் உடலை எடுத்து செல்ல சாலை வசதியில்லை
இறந்தவர் உடலை எடுத்து செல்ல சாலை வசதியில்லை
ADDED : செப் 26, 2025 03:14 AM
சென்னை:'சிவகங்கை மாவட்டம், சின்ன கண்ணுார் கிராமத்தில், மரணமடையும் பட்டியலின சமூக மக்களின் உடலை, சுடுகாட்டுக்கு எடுத்து செல்ல, சாலை வசதி இல்லை என்ற புகார் குறித்து விசாரித்து, சிவகங்கை மாவட்ட கலெக்டர், எஸ்.பி., ஆகியோர், அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என, மாநில எஸ்.சி., எஸ்.டி., ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம், சின்ன கண்ணுார் கிராமத்தில், பட்டியலினத்தை சேர்ந்த யாரேனும் உயிரிழந்தால், அவரது உடலை சுடுகாட்டுக்கு எடுத்து செல்ல சாலை வசதி இல்லை.
இதனால், பட்டியலினத்தை சேர்ந்தவர்கள் அவதிப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக, சமூக ஆர்வலர் நாயகம் என்பவர், தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், மாநில ஆணையத்தில் புகார் மனு அளித்தார்.
மனுவில், 'பல ஆண்டுகளாக சமூக அநீதி நடந்து வருவதாகவும், சமீபத்தில் பட்டியலினத்தை சேர்ந்த வேலு என்பவரின் உடலை, சுடுகாட்டுக்கு எடுத்து செல்ல முடியாமல், அந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் மிகுந்த அவதிப்பட்டனர்' என குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை ஆணைய தலைவர் நீதிபதி தமிழ்வாணன், உறுப்பினர் ஆனந்தராஜா ஆகியோர் விசாரித்தனர். பின், இது தொடர்பாக சிவகங்கை கலெக்டர், மாவட்ட எஸ்.பி., ஆகியோர் விசாரணை நடத்தி, நவ.14ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என, உத்தரவிட்டனர்.