ஸ்டாலினுக்கு கருப்புக்கொடி காட்டுவோம்: அ.தி.மு.க., அறிவிப்பு
ஸ்டாலினுக்கு கருப்புக்கொடி காட்டுவோம்: அ.தி.மு.க., அறிவிப்பு
ஸ்டாலினுக்கு கருப்புக்கொடி காட்டுவோம்: அ.தி.மு.க., அறிவிப்பு
ADDED : ஜூன் 13, 2025 05:20 AM
மதுரை: அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் உதயகுமார் அளித்த பேட்டி:
2021 தேர்தலில், 'மதுரை வேளாண்மை கல்லுாரி, பல்கலையாக மாற்றப்படும்' என தி.மு.க., வாக்குறுதி அளித்தது. ஆனால், நான்கரை ஆண்டு தி.மு.க., ஆட்சியில் துரும்பைக்கூட எடுத்துப்போடவில்லை. விவசாயிகள் பாதுகாவலர் எனக் கூறிக்கொள்ளும் முதல்வர் ஸ்டாலின், முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவோம் என கேரளா கூறியபோதும், மேகதாது குறுக்கே அணையை கட்டுவோம் என கர்நாடகா கூறியபோதும், பாலாறு குறுக்கே அணை கட்டுவோம் என ஆந்திரா கூறியபோதும் மவுனமாக இருந்து, தமிழக விவசாயிகளின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கியது நினைவு இருக்கிறதா?
மீத்தேன் திட்டத்திற்கு கையெழுத்து போட்டு விவசாயிகளுக்கு பச்சை துரோகம் செய்தது தி.மு.க.,; ஆனால், காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக உருவாக்கியவர் பழனிசாமி.
அவரை விவசாயிகள் பாதுகாவலர் என சொன்னால், அவர் பச்சைத்துண்டு போட்டால் உங்களுக்கு ஏன் கோபம் வருகிறது. நீங்கள் கரும்பு தோட்டத்தில் சிமென்ட் ரோடு அமைத்து, அதில் 'ஷூ' அணிந்து நடந்து சென்றதை யாரும் மறக்கவில்லை.
அரசு விழாக்களில் அ.தி.மு.க.,வையும், பொதுச்செயலர் பழனிசாமியையும், இனியும் விமர்சித்தால், நீங்கள் எங்கு சென்றாலும், கருப்புக்கொடி காட்டும் போராட்டத்தை துவக்குவோம்.
இவ்வாறு தெரிவித்தார்.