Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ கனகசபை மண்டபத்தில் தரிசனம் செய்ய யார் யாருக்கு அனுமதி : ஐகோர்ட் கேள்வி

கனகசபை மண்டபத்தில் தரிசனம் செய்ய யார் யாருக்கு அனுமதி : ஐகோர்ட் கேள்வி

கனகசபை மண்டபத்தில் தரிசனம் செய்ய யார் யாருக்கு அனுமதி : ஐகோர்ட் கேள்வி

கனகசபை மண்டபத்தில் தரிசனம் செய்ய யார் யாருக்கு அனுமதி : ஐகோர்ட் கேள்வி

ADDED : செப் 12, 2025 02:17 AM


Google News
Latest Tamil News
சென்னை: சிதம்பரம் நடராஜர் கோவிலில், கனகசபை மண்டபத்தில் தரிசனம் செய்ய யார் யாருக்கு அனுமதி வழங்கப்படும் என்பது குறித்த விபரத்தை மனுவாக தாக்கல் செய்யும்படி, பொது தீட்சிதர்கள் தரப்புக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடலூர் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவிலில், கனகசபை மண்டபத்தில் மீது ஏறி, பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு அனுமதி அளித்து, தமிழக அரசு, கடந்த 2022 மே 15ல் அரசாணை பிறப்பித்தது. இதை எதிர்த்து, சபாநாயகர் கோவில் செயலர் சிவராம தீட்சிதர் உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், எஸ்.சவுந்தர் அடங்கிய சிறப்பு அமர்வு முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, பொது தீட்சிதர்கள் தரப்பில், மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன், வழக்கறிஞர் கே.ஹரிசங்கர் ஆஜராகி, ஹிந்து அறநிலையத் துறை அறிக்கையில் சுட்டிக்காட்டிய குறைபாடுகளுக்கான உரிய விளக்கங்கள் இடம்பெற்ற அறிக்கையை தாக்கல் செய்தனர்.

அதையடுத்து, ''கனகசபை மீது ஏறி தரிசனம் செய்ய, தீட்சிதர்களுக்கும், முக்கிய பிரமுகர்களுக்கும், அரசியல் சாசன பதவி வகிப்பவர்களுக்கும் மட்டுமே அனுமதி வழங்கப்படும்,'' என, மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன் தெரிவித்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த, அறிநிலையத் துறை சிறப்பு பிளீடர் அருண் நடராஜன், ''கனகசபை மண்டபத்தில் ஏறி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி அளித்து, நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது. அதை பொது தீட்சிதர்களும் ஏற்றுக் கொண்டுள்ளனர்; தற்போது, அதை மாற்ற முடியாது,'' என்றார்.

பக்தர் ராதா தரப்பில் வழக்கறிஞர் சி.கனகராஜ் ஆஜராகி, ''கடந்த 3ம் தேதி, சிதம்பரம் கோவிலில் நேரில் ஆய்வு செய்தேன். கோவிலில் பொருத்தப்பட்ட, 55 கண்காணிப்பு கேமராக்களில், 25 மட்டுமே இயங்குகின்றன. கடந்த 2016 மே 1 முதல், சிதம்பர ரகசிய வழிபாடு நிறுத்தப்பட்டு உள்ளது. ஆய்வு செய்ததில், 16க்கும் மேற்பட்ட குறைபாடுகள் உள்ளன. இவற்றை பட்டியலிட்டு, அறிக்கையாக தாக்கல் செய்துள்ளேன்,'' என்றார்.

அப்போது குறுக்கிட்ட பொது தீட்சிதர்கள் தரப்பு வழக்கறிஞர், 'அறிக்கையில் கூறப்பட்ட விபரங்களின் நகல் வழங்கப்படவில்லை. பக்தர் என கூறி கொண்டு, அறநிலையத் துறைக்கு ஆதரவாகவே செயல்படுகிறார்' என, குற்றம்சாட்டினர்.

இதையடுத்து நீதிபதிகள், 'கனகசபை மண்டபத்தில் ஏறி தரிசனம் செய்ய, யார் யாருக்கு அனுமதி வழங்கப்படும் என்பது குறித்து மனுவாக, பொது தீட்சிதர்கள் தரப்பு தாக்கல் செய்ய வேண்டும். பக்தர் ராதா தரப்பில் தாக்கல் செய்த அறிக்கைக்கும் பதிலளிக்க வேண்டும்' என உத்தரவிட்டு, விசாரணையை அக்., 9ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us