மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு; அமித் ஷா வருகையால் தொய்வா?
மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு; அமித் ஷா வருகையால் தொய்வா?
மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு; அமித் ஷா வருகையால் தொய்வா?
ADDED : ஜூன் 10, 2025 04:57 AM

சென்னை: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மதுரை வருகையால், முருக பக்தர்கள் மாநாட்டு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக ஹிந்து முன்னணி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான மதுரை திருப்பரங்குன்றம் மலையை, சிக்கந்தர் மலையாக மாற்ற முயற்சி நடப்பதாக, ஹிந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் கடந்த பிப்ரவரி 4ல் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடத்தின.
திடீர் அறிவிப்பு
அதன் வெற்றியைத் தொடர்ந்து, முருக பக்தர்கள் மாநாடு மதுரையில் வரும் 22ம் தேதி நடக்கவுள்ளது. இந்த மாநாட்டை ஹிந்து முன்னணி நடத்துகிறது.
ஆனாலும், பா.ஜ., - வி.ஹெச்.பி., உள்ளிட்ட சங் பரிவார் அமைப்புகள் அனைத்தும் மாநாட்டு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தன.
பா.ஜ., நிர்வாகிகள் தங்கள் கிளை, பூத் கமிட்டியில் இருந்து, முருக பக்தர்கள் மாநாட்டுக்கு தொண்டர்கள், முருக பக்தர்களை அழைத்துச் செல்ல வாகனம், உணவு ஏற்பாடுகளை செய்து வந்தனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் மதுரையில் நடந்த, பா.ஜ., மாநில, மாவட்ட, மண்டல நிர்வாகிகள் கூட்டத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்றார். இந்நிகழ்வு நான்கு நாட்களுக்கு முன், திடீரென அறிவிக்கப்பட்டது.
ஆதங்கம்
அதைத் தொடர்ந்து, தமிழகம் முழுதும் பா.ஜ.,வினர், அமித் ஷா நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளில் கவனம் செலுத்தப் போய்விட்டனர்.
இதனால், முருக பக்தர்கள் மாநாட்டு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக ஹிந்து முன்னணி நிர்வாகிகள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்திஉள்ளனர்.