கூட்டணி ஆட்சி வந்தால் நல்லதுதான்; தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா கருத்து
கூட்டணி ஆட்சி வந்தால் நல்லதுதான்; தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா கருத்து
கூட்டணி ஆட்சி வந்தால் நல்லதுதான்; தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா கருத்து
ADDED : ஜூன் 10, 2025 04:56 AM

கரூர் : “தமிழகத்தில், கூட்டணி ஆட்சி வந்தால் நல்லது தான்,” என, தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா தெரிவித்தார்.
கரூரில் நேற்று அவர் கூறியதாவது:
தி.மு.க., பொதுக்குழுவில், விஜயகாந்த் இறப்புக்கு, இரங்கல் தீர்மானம் போட்டது அரசியல் நாகரிகம். தே.மு.தி.க., ஏற்கனவே சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிட்டுள்ளது.
ஆலோசனை
வரும் காலங்களில், தனித்து போட்டியிடுவது குறித்து காலம்தான் பதில் சொல்லும். தனித்து போட்டியிடுவது, பெரிய விஷயம் இல்லை. 2026 சட்டசபை தேர்தலில், தே.மு.தி.க., வெற்றி பெற்று, பெரிய பலத்துடன் சட்டசபைக்கு செல்ல வேண்டும்; இதுதான் முக்கியம். தே.மு.தி.க.,வின் ஓட்டு வங்கி குறையவில்லை. அப்படியேதான் உள்ளது.
சென்னையில் விரைவில் நிர்வாகிகள் கூட்டம், நான்கு நாட்கள் நடைபெற உள்ளது. அதில், முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளோம்.
நடிகர் விஜயின் த.வெ.க., உடன் கூட்டணி குறித்து, அவரிடம்தான் கேட்க வேண்டும்; எங்களிடம் கேட்கக்கூடாது. நாங்கள் கட்சி துவங்கி, 20 ஆண்டுகளாகி விட்டது. வரும் ஜன., 9ல் கடலுாரில் நடக்கும் தே.மு.தி.க., மாநாட்டில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகும்.
நல்லது நடக்கும்
அது சட்டசபை தேர்தல் தொடர்பானவையாக இருக்கும்.
தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைந்தால் நல்லதுதான்; மக்களுக்கு நல்லது நடக்கும். தமிழகத்தில், 2026ல் கூட்டணி ஆட்சிக்கான சாத்தியம் உள்ளது.
தமிழகத்தில் தனியாக வசிக்கும் முதியவர்களுக்கு பாதுகாப்பு இல்லை. கரூர் மாவட்டத்தில் மணல் கொள்ளை, கனிமவள கொள்ளை அதிகமாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.