ஓடாத ஆட்டோவுக்கு மாதம் ரூ.5,000 வாடகை மகளிர் சுய உதவி குழுவினர் புலம்பல்
ஓடாத ஆட்டோவுக்கு மாதம் ரூ.5,000 வாடகை மகளிர் சுய உதவி குழுவினர் புலம்பல்
ஓடாத ஆட்டோவுக்கு மாதம் ரூ.5,000 வாடகை மகளிர் சுய உதவி குழுவினர் புலம்பல்
ADDED : ஜூன் 16, 2025 03:00 AM

சென்னை: மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் வழங்கப்பட்டு, சார்ஜிங் வசதி இல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மின் ஆட்டோக்களுக்கு, மாதம் 5,000 ரூபாய் வாடகை செலுத்த வேண்டும் என, அதிகாரிகள் நெருக்கடி தருவதாக, மகளிர் சுய உதவிக் குழுவினர் புலம்புகின்றனர்.
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில், இந்தாண்டு மார்ச்சில், மகளிர் சுய உதவிக் குழுக்களை சேர்ந்த 50 பெண்களுக்கு, 'காலநிலை வீரர்கள்' என்ற திட்டத்தின் கீழ், 3 கோடி ரூபாய் செலவில் மின் ஆட்டோக்கள் வழங்கப்பட்டன. இயற்கை பொருட்களை காட்சிப்படுத்தி, விற்பனை செய்வதே திட்டத்தின் நோக்கம்.
ஆனால், ஆட்டோக்களை சார்ஜிங் செய்வதற்கான இடவசதியை அரசு செய்து தராததால், இரண்டு மாதங்களாக ஆட்டோக்கள் சாலையோரமாக நிறுத்தப் பட்டுள்ளன.
இருப்பினும், ஆட்டோவிற்கு தினமும் 100 ரூபாய் என, வாடகை வசூலிக்கப்பட்டது. இந்நிலையில், ஒரு ஆட்டோவின் மதிப்பு, 4.80 லட்சம் ரூபாய் என்பதால், மாதம் 5,000 ரூபாய் வாடகை செலுத்துமாறு, மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் நெருக்கடி தரப்படுவதாக மகளிர் சுய உதவிக் குழுவினர் புலம்புகின்றனர்.
இதுகுறித்து, பாதிக்கப்பட்ட பெண்கள் சிலர் கூறியதாவது:
அரசு தரப்பில் ஆட்டோக்கள், மகளிர் குழுவின் பெயரில் வழங்கப்பட்டுள்ளன. இதனால், குழு நிர்வாகம் கூறுவதை கட்டாயம் பின்பற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஆட்டோ வழங்கிய போது, வாடகை பற்றி எதுவும் கூறவில்லை. திடீரென தினசரி, 100 ரூபாய் வாடகை என்று வசூலித்தனர். இந்த மாதம் முதல், மாதந்தோறும், 5,000 ரூபாய் வாடகை வசூலிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சார்ஜ் செய்யும் வசதி இல்லாததால், ஆட்டோக்களை ஓட்டாமல் ஆங்காங்கே நிறுத்தி வைத்துள்ளோம். ஓடாத ஆட்டோவிற்கு மாதம் 5,000 ரூபாய் வாடகை என்பது வேதனையாக உள்ளது. இதை எதிர்த்து கேட்டால், 'ஆட்டோவை திரும்ப ஒப்படையுங்கள்' என்கின்றனர். எனவே, வாடகை வசூலிக்கப்படுவதை நிறுத்தி விட்டு, உரிய சார்ஜிங் வசதி வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.