பின்லேடனின் நெருங்கிய கூட்டாளி பாக்.,கில் கைது
பின்லேடனின் நெருங்கிய கூட்டாளி பாக்.,கில் கைது
பின்லேடனின் நெருங்கிய கூட்டாளி பாக்.,கில் கைது
ADDED : ஜூலை 20, 2024 02:34 AM

லாகூர்: பயங்கரவாத அமைப்பான அல் - குவைதாவின் மூத்த தலைவரும், ஒசாமா பின்லேடனின் நெருங்கிய கூட்டாளியுமான அமீன் உல் ஹக் என்பவரை பாகிஸ்தான் பயங்கரவாத தடுப்பு போலீசார் கைது செய்தனர்.
நம் அண்டை நாடான பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாணத்தின் சாராய் ஆலம்கீர் நகரில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பயங்கரவாத தடுப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதன்படி, அந்த பகுதியை சுற்றிவளைத்த போலீசார், அங்கு பதுங்கி இருந்து சதி திட்டங்கள் தீட்டி வந்த பயங்கரவாத அமைப்பான அல் - குவைதாவைச் சேர்ந்த அமீன் உல் ஹக் என்பவரை கைது செய்தனர்.
இவர், ஐ.நா.,வின் பாதுகாப்பு கவுன்சிலால், தேடப்படும் பயங்கரவாதி என, 2021ல் அறிவிக்கப்பட்டவர்.
இதுதவிர, கடந்த 1996ம் ஆண்டு முதல் அல் - குவைதா பயங்கரவாத அமைப்பின் முன்னாள் தலைவர் மறைந்த ஒசாமா பின்லேடனின் நெருங்கிய கூட்டாளியாக வலம் வந்தவர் என்பதையும் கண்டறிந்து உள்ளனர்.
பாகிஸ்தான் மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளில் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதற்காக அமீன் உல் ஹக், சதித்திட்டம் தீட்டியதும் தெரியவந்துள்ளது.
இதையடுத்து கைதான அந்நபரை, ரகசிய இடத்தில் வைத்து பாகிஸ்தான் பயங்கரவாத தடுப்புப் போலீசார் விசாரித்து வருகின்றனர்.