பிரிட்டனில் வன்முறை; வாகனங்களுக்கு தீ வைப்பு
பிரிட்டனில் வன்முறை; வாகனங்களுக்கு தீ வைப்பு
பிரிட்டனில் வன்முறை; வாகனங்களுக்கு தீ வைப்பு
ADDED : ஜூலை 20, 2024 02:12 AM

லண்டன்: பிரிட்டனின் லீட்ஸ் நகரில் வசிக்கும் ஒரு குடும்பத்தில் இருந்து ஐந்து குழந்தைகளை, போலீசார் அழைத்து சென்ற விவகாரத்தால், வன்முறை சம்பவம் அரங்கேறியது. இதில், வாகனங்கள், வர்த்தக நிறுவனங்களுக்கு தீ வைக்கப்பட்டதால் பதற்றம் நிலவுகிறது.
ஐரோப்பிய நாடான பிரிட்டனில் லீட்ஸ் நகரின் ஹரேஹில்ஸ் பகுதியில் வசிக்கும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து குழந்தைகளில், ஒருவருக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. இதற்காக, அங்குள்ள மருத்துவமனைக்கு அவரது பெற்றோர் அழைத்து சென்றனர்.
இது சமூக சேவைத்துறை சார்ந்த பிரச்னை எனக்கூறி, அங்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனை நிர்வாகம் மறுத்து திருப்பி அனுப்பி உள்ளது.
தகவலறிந்து சமூக சேவைத்துறை அதிகாரிகள், போலீசாரின் உதவியுடன் அக்குடும்பத்தில் வசிக்கும் குழந்தைகளை அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த அக்குடும்பத்தார் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த தகவல், சமூக வலைதளங்களில் வேகமாக பரவியதால், அப்பகுதியில் ஏராளமானோர் கூடினர். அப்போது, அரசின் நடவடிக்கைக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். இதனால், அங்கு போலீசார் குவிக்கப்பட்டதால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்ட சிலர், போலீசார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.
இதனால் போராட்டக்காரர்கள் ஆத்திரமடைந்து, பஸ்சை தீயிட்டு எரித்ததுடன், அங்கு நிறுத்தப்பட்ட போலீஸ் வாகனத்தை கவிழ்த்து சேதப்படுத்தினர்.
இந்த விவகாரம் குறித்து பிரிட்டன் உள்துறை அமைச்சர் கூப்பர் கூறுகையில், “லீட்ஸ் நகரில் நடந்த வன்முறைக்கு, ஒரு குடும்பத்தில் எழுந்த பிரச்னை தான் காரணம் என தெரியவந்துள்ளது.
“இந்த விவகாரம், தவறாக புரிந்து கொள்ளப்பட்டதால் தான் இத்தகைய வன்முறை அரங்கேற காரணமாக அமைந்தது. இதற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.