யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் குழப்பம் பிரான்ஸ் பார்லிமென்ட் தேர்தலில் திடீர் திருப்பம்
யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் குழப்பம் பிரான்ஸ் பார்லிமென்ட் தேர்தலில் திடீர் திருப்பம்
யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் குழப்பம் பிரான்ஸ் பார்லிமென்ட் தேர்தலில் திடீர் திருப்பம்
ADDED : ஜூலை 09, 2024 01:07 AM

பாரிஸ், பிரான்ஸ் பார்லிமென்ட் தேர்தலில், முதல் கட்டத்தில் தீவிர வலதுசாரியான தேசிய பேரணி கட்சி முன்னிலையில் இருந்த நிலையில், இரண்டாம் கட்டத்தில், அந்த கட்சி மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டது. எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் தொங்கு பார்லிமென்ட் உருவாகி குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
தோல்வி
ஐரோப்பிய நாடான பிரான்சில் பார்லிமென்ட் தேர்தல் சமீபத்தில் நடந்தது. இம்மாத இறுதியில் ஒலிம்பிக் போட்டிகள் அங்கு துவங்க உள்ள நிலையில், பதவிக்காலம் முடிவதற்கு முன்பாகவே பார்லிமென்டுக்கு தேர்தலை அறிவித்தார், அதிபர் இமானுவேல் மேக்ரான்.
முதல் கட்ட தேர்தலின்போது, மரைன் லீ பென்னின் தீவிர வலதுசாரி கட்சியான நேஷனல் ரேலி எனப்படும் தேசிய பேரணிக் கட்சி முன்னிலையில் இருந்தது. அந்தக் கட்சியின் ஜோர்டான் பர்டெல்லா அடுத்த பிரதமராவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் இரண்டாம் கட்ட தேர்தலுக்குப் பின், தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. இதில், பார்லிமென்டின், 577 இடங்களில், பெரும்பான்மைக்கு தேவையான, 289 இடங்களை எந்த கட்சியோ, கூட்டணியோ பெறவில்லை.
தேர்தல் முடிவுகளின்படி, கம்யூனிஸ்ட்கள், பழமைவாத கட்சிகள் அடங்கிய இடது கூட்டணியான, நியூ பாப்புலர் பிரன்ட், 182 இடங்களைப் பிடித்தது.
அதே நேரத்தில் அதிபர் இமானுவேல் மேக்ரான் தலைமையிலான என்சம்பள் அலையன்ஸ் என்ற மையவாத கூட்டணி, 168 இடங்களைப் பிடித்தது. தீவிர வலதுசாரியான தேசிய பேரணி கட்சி, 143 இடங்களில் வென்றது.
இதனால், எந்த கூட்டணியும், கட்சியும் தனிப்பெரும்பான்மையைப் பெறவில்லை. முன் கூட்டியே தேர்தலை நடத்தி, தன் கூட்டணியின் பலத்தை உயர்த்திக் கொள்ளும் அதிபர் மேக்ரானின் முயற்சி தோல்வி அடைந்தது.
அதுபோல, வலதுசாரி கூட்டணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இடதுசாரி கூட்டணி அதிக இடங்களை வென்றுள்ளது. இந்த திடீர் திருப்பம், பிரான்ஸ் அரசியலில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இது, ஐரோப்பிய யூனியனில் இரண்டாவது பெரும் பொருளாதாரமான பிரான்சின் அரசு நிர்வாகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என, அச்சம் எழுந்துள்ளது.
இதற்கிடையே மேக்ரான் கட்சியைச் சேர்ந்த பிரதமர் கேப்ரிடல் அட்டால் தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார். புதிய அரசு, பிரதமர் பதவியேற்கும் வரை, ஒலிம்பிக் போட்டிகள் முடியும் வரை, தன் பொறுப்பைத் தொடர்வதாக அவர் கூறியுள்ளார்.
மேக்ரானின் பதவிக்காலம் மேலும் மூன்று ஆண்டுகளுக்கு உள்ளது. அதே நேரத்தில் பார்லிமென்டில் அவருடைய கட்சி இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டது, அவருக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.
பேச்சு
இடதுசாரி கூட்டணி மற்றும் மேக்ரானின் கூட்டணி இணைந்து புதிய அரசு அமைப்பது தொடர்பாக பேச்சு நடந்து வருகிறது. அவ்வாறு புதிய அரசு அமைந்தாலும், மேக்ரான் தொடர்ந்து அரசியல் ரீதியில் பல சிக்கல்களை சந்திக்க நேரிடும் என, கூறப்படுகிறது.
இந்நிலையில், இடதுசாரிகள் கூட்டணியான, நியூ பாப்புலர் பிரண்ட் தலைவர்கள், ஆட்சி அமைக்க தயாராக உள்ளதாக கூறியுள்ளனர். மேலும், பிரதமர் பதவியையும் கோரியுள்ளனர். அதே நேரத்தில், இந்த கூட்டணியில் உள்ள எந்தக் கட்சியின் தலைவர் பிரதமராவார் என்பதில் கடும் போட்டி ஏற்படும் என, கணிக்கப்பட்டுள்ளது.
முதல் சுற்றில் முதலிடத்தில் இருந்து, இரண்டாவது சுற்றில் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்ட தேசிய பேரணி கட்சித் தலைவர் லே பென், இந்தத் தேர்தல் முடிவுகளை ஏற்பதாக அறிவித்துள்ளார்.
வரும், 2027ல் நடக்க உள்ள அதிபர் தேர்தலில், தன் நான்காவது முயற்சியாக அவர் போட்டியிட திட்டமிட்டுள்ளார்.
“இந்த தேர்தல் முடிவு கள் எங்களுக்கு வெற்றியே. கடந்த பார்லிமென்டில், 88 எம்.பி.,க்கள் இருந்த நிலையில், தற்போது முன்னேறியுள்ளோம். இது எதிர்காலத்துக்கான வெற்றி,” என, அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே, இந்த குழப்பமான சூழலை தொடர்ந்து பிரான்சின் பாரிஸ், லியோன் உள்ளிட்ட நகரங்களில் வன்முறை வெடித்துள்ளது. பல இடங்களில் தீ வைப்பு சம்பவங்களும் அரங்கேறின.