நான்கு பிணைக்கைதிகளை மீட்டது இஸ்ரேல் ராணுவம்
நான்கு பிணைக்கைதிகளை மீட்டது இஸ்ரேல் ராணுவம்
நான்கு பிணைக்கைதிகளை மீட்டது இஸ்ரேல் ராணுவம்
UPDATED : ஜூன் 09, 2024 04:11 PM
ADDED : ஜூன் 09, 2024 12:20 AM

ரபா: இஸ்ரேல் ராணுவ வீரர்கள் அதிரடியாக தாக்குதல் நடத்தி, ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினர் பிடித்து வைத்திருந்த நான்கு பிணைக்கைதிகளை பத்திரமாக மீட்டனர்.
பாலஸ்தீனத்தை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு, மேற்காசிய நாடான இஸ்ரேலில் கடந்த ஆண்டு அக்., 7ம் தேதி தாக்குதல் நடத்தியது.
இதில், 1,200 பேரை கொன்றதுடன், அங்கு நடந்த இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற 250க்கும் மேற்பட்டோரையும் கடத்தி சென்றது.
கடத்தி சென்றவர்களில் பல வெளிநாட்டினர் உள்ள நிலையில், அவர்களை பிணைக்கைதிகளாக ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு பிடித்து வைத்து மிரட்டியது.
இதையடுத்து, அவர்களை மீட்கும் நோக்கில், ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினரை குறிவைத்து, இஸ்ரேல் ராணுவம் போர் தொடுத்தது.
இதனால், பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் வசித்த அப்பாவி மக்கள் 36,700 பேர் உயிரிழந்தனர்.
ஆயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்தனர். இந்த போரை நிறுத்தும்படி உலக நாடுகளும், ஐ.நா., அமைப்பும் வலியுறுத்தி வருகின்றன.
எனினும், ஹமாஸ் பயங்கரவாத அமைப்பை முற்றிலும் ஒழிக்கும் வரை இந்த போர் நீடிக்கும் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்து வருகிறார்.
இதற்கிடையே, கடத்தி செல்லப்பட்ட பிணைக்கைதிகளில் நான்கு பேரை, இஸ்ரேல் ராணுவம் நேற்று பத்திரமாக மீட்டது.
காசாவின் நுஜெய்ரத் அருகே இருவேறு இடங்களில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலின் வாயிலாக, நான்கு பேர் மீட்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹமாஸ் பயங்கரவாதிகளின் வசம், மேலும் 130 பிணைக்கைதிகள் இருப்பதாகவும், அதில் பலர் இறந்திருக்கலாம் எனவும் இஸ்ரேல் ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.