UPDATED : ஜூன் 16, 2024 05:40 AM
ADDED : ஜூன் 16, 2024 01:32 AM

டோக்கியோ, 'குரூப் ஏ ஸ்ட்ரெப்டோகாக்கஸ்' எனப்படும் சதையை உண்ணும் அரிதான பாக்டீரியா ஜப்பானில் பரவி வருகிறது. இந்த பாக்டீரியா தொற்றை கவனிக்காமல் விட்டால், இரண்டு நாட்களில் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
எளிதில் பாதிப்பு
குரூப் ஏ ஸ்ட்ரெப்டோகாக்கஸ் எனும் பாக்டீரியா 1999ல் ஜப்பானில் கண்டறியப்பட்டது.
இந்த வகை தொற்று பாதிக்கப்பட்ட நபருடன் நெருங்கி பழகுபவர்களுக்கும், அவர்களுடன் உணவு மற்றும் பானங்களை பகிர்ந்து உண்பவர்களுக்கும் எளிதில் பாதிப்பு ஏற்படுவதாக ஜப்பான் தொற்று நோயியல் மையம் தெரிவித்துள்ளது.
இந்த வகை பாக்டீரியா தொற்று பொதுவாக வீக்கம் மற்றும் தொண்டை வலியை ஏற்படுத்துகிறது; மூட்டு வலி, வீக்கம், காய்ச்சல், குறைந்த ரத்த அழுத்தம், சுவாசப் பிரச்னைகள், உறுப்பு செயலிழப்பு மற்றும் உயிரிழப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளதாக டாக்டர்கள் கூறுகின்றனர்.
குறிப்பாக, 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் இந்த தொற்றால் பாதிக்கப்படுகின்றனர்.
தற்போது ஜப்பானில் பாக்டீரியா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,000த்தை நெருங்கியுள்ளதாகவும், இது கடந்த ஆண்டை விட அதிகம் என அந்நாட்டு தேசிய தொற்று நோயியல் மையம் தெரிவித்துஉள்ளது.
சதை உண்ணும் பாக்டீரியா குறித்து, டோக்கியோ மருத்துவ பல்கலைக் கழகத்தின் தொற்று நோயியல் பேராசிரியர் கென்கிகுச்சி கூறியதாவது:
இந்த பாக்டீரியா தொற்றுக்கு ஆளாகும் நபர்களில் பெரும்பாலானோரின் இறப்பு, 48 மணி நேரத்திற்குள் நிகழ்கிறது. நோயாளிகளுக்கு முதலில் காலில் வீக்கம் காணப்படுகிறது; சில மணி நேரங்களில் அது முழங்கால் வரை விரிவடைகிறது. 48 மணி நேரத்திற்குள் அவர்கள் இறக்கின்றனர்.
அதிர்ச்சி
ஜப்பானில் தற்போதைய தொற்று நோய் விகிதப்படி, இந்த பாக்டீரியாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 2,500ஐ எட்டக்கூடும். அதிர்ச்சியூட்டும் வகையில் அவர்களில் 30 சதவீதம் பேர் இறக்க வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.