அமெரிக்க துணை அதிபர் வேட்பாளர்; ஹிந்து மனைவி குறித்து பெருமிதம்
அமெரிக்க துணை அதிபர் வேட்பாளர்; ஹிந்து மனைவி குறித்து பெருமிதம்
அமெரிக்க துணை அதிபர் வேட்பாளர்; ஹிந்து மனைவி குறித்து பெருமிதம்
UPDATED : ஜூலை 17, 2024 06:31 PM
ADDED : ஜூலை 17, 2024 03:33 AM

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தலில், குடியரசுக் கட்சியின் துணை அதிபர் வேட்பாளராக 39 வயதான ஜே.டி.வேன்ஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின் அவர் அளித்த பேட்டியில், தன் தனிப்பட்ட மற்றும் ஆன்மிக வாழ்க்கையை வடிவமைத்ததில், இந்திய வம்சாவளியான தன் மனைவி உஷா சில்குரி வேன்சுக்கு முக்கிய பங்கு இருப்பதாக குறிப்பிட்டார்.
அமெரிக்காவில், நவ., 5ல் அதிபர் தேர்தல் நடக்கிறது. ஆளும் ஜனநாயகக் கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடன், 81, மீண்டும் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து, முன்னாள் அதிபரும், குடியரசு கட்சியைச் சேர்ந்தவருமான டொனால்டு டிரம்ப், 78, களம் காண்கிறார்.
அமெரிக்காவில் அதிபர் பதவியை போன்று, துணை அதிபர் பதவியும் முக்கியத்துவம் வாய்ந்தது. தற்போது துணை அதிபராக இருக்கும் கமலா ஹாரிசையே இந்த முறையும் துணை அதிபர் வேட்பளாராக பைடன் தேர்வு செய்துள்ளார். இந்நிலையில், டிரம்ப் தன் குடியரசு கட்சி சார்பில் ஜே.டி.வேன்ஸை துணை அதிபர் வேட்பாளராக நேற்று அறிவித்தார்.
தற்போது வேன்ஸ், ஒஹியோ மாகாணத்தின் செனட்டராக உள்ளார். இவரது மனைவி இந்திய வம்சாவளியைச் சேர்ந்த உஷா சில்குரி. யேல் சட்டப்பல்கலையில் படித்த போது ஒருவொருக்கொருவர் அறிமுகமாகினர். பின் காதலித்து 2014ல் திருமணம் செய்தனர். இவர்களது திருமணம் ஹிந்து மற்றும் கிறிஸ்துவ முறைப்படி நடந்தது. இவர்களுக்கு இவான், 6, விவேக், 4, மற்றும் மிராபெல், 2, என மூன்று குழந்தைகள் உள்ளனர்.
வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின் வேன்ஸ் அளித்த பேட்டி:
நான் கிறிஸ்தவனாக வளர்க்கப்பட்டாலும், ஞானஸ்நானம் பெறவில்லை. கத்தோலிக்க நம்பிக்கைகளில் ஈடுபாடின்றி இருந்தேன். என் இந்திய வம்சாவளி மனைவியின் ஹிந்து மதம், எனக்கு சவால்களை வழிநடத்த உதவியது. மேலும், கத்தோலிக்க நம்பிக்கைகளை ஏற்பதற்கான கருவியாக இருந்தது.
இதனால் திருமணத்திற்கு பின் தான் முதன்முதலில் ஞானஸ்நானம் பெற்றேன். உஷா உண்மையில் கிறிஸ்துவர் இல்லை என்றாலும், நான் கத்தோலிக்க நம்பிக்கைகளில் மீண்டும் ஈடுபாடு காட்ட துவங்கியபோது,உஷா மிகவும் உறுதுணையாக இருந்தார்.
இவ்வாறு அவர் கூறினார்.