பாலியில் படகு மூழ்கி விபத்து 4 பேர் பலி; 30 பேர் மாயம்
பாலியில் படகு மூழ்கி விபத்து 4 பேர் பலி; 30 பேர் மாயம்
பாலியில் படகு மூழ்கி விபத்து 4 பேர் பலி; 30 பேர் மாயம்
ADDED : ஜூலை 04, 2025 12:51 AM
கிலிமாங்க்: இந்தோனேஷியாவின் பாலி தீவு அருகே, 65 பேருடன் சென்ற படகு கடலில் மூழ்கியதில் நான்கு பேர் உயிரிழந்தனர். 31 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், 30 பேரை தேடும் பணி தொடர்கிறது.
தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேசியாவில், 17,000க்கும் மேற்பட்ட தீவுகள் உள்ளன. அங்கு படகு போக்குவரத்து தான் பிரதானம். ஆனால் விதிமுறைகளை பின்பற்றாததால் படகு விபத்துகள் தொடர் கதையாக உள்ளன.
அந்த வகையில், பாலி தீவு அருகே மீண்டும் ஒரு படகு விபத்து நடந்துள்ளது. பன்யுவாங்கியில் உள்ள கெட்டபாங் துறைமுகத்திலிருந்து பாலியின் கிலிமானுக் துறைமுகத்திற்கு படகு ஒன்று நேற்று முன்தினம் சென்றது. இதில், 53 பயணியர், 12 பணியாளர்கள் இருந்தனர்.
சுமார் அரை மணி நேர பயணத்திற்கு பின் படகு மூழ்கியது. மீனவர்கள் மற்றும் கரையில் இருந்த மக்களின் உதவியுடன் ஒரு ஹெலிகாப்டர், இரண்டு இழுவைப் படகுகள் உட்பட ஒன்பது படகுகளுடன் மீட்புக்குழுவினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
இதில், நான்கு பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன. 31 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.
பயணியருடன், 14 லாரிகள் உட்பட 22 வாகனங்களை ஏற்றிச் சென்ற படகின் இயந்திர அறையில் விரிசல் ஏற்பட்டு படகு சாயத் துவங்கியதாக உயிர் தப்பியவர்கள் தெரிவித்தனர். கடலில் மூழ்கி மாயமான 30 பேரை தேடும் பணி தொடர்கிறது.