எல்லையில் பதற்றத்தை குறைக்க சீனாவுக்கு ராஜ்நாத் 4 யோசனைகள்
எல்லையில் பதற்றத்தை குறைக்க சீனாவுக்கு ராஜ்நாத் 4 யோசனைகள்
எல்லையில் பதற்றத்தை குறைக்க சீனாவுக்கு ராஜ்நாத் 4 யோசனைகள்
UPDATED : ஜூன் 28, 2025 06:29 AM
ADDED : ஜூன் 28, 2025 01:34 AM

கிங்டாவ்: சீனா சென்றுள்ள மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், அந்நாட்டு ராணுவ அமைச்சர் டாங் ஜூன்னுடன் நேற்று பேசினார். அப்போது, சீன எல்லையில் நிலவும் பதற்றத்தை குறைக்கவும், உறவை மேம்படுத்தவும் நான்கு திட்டங்களை அவரிடம் விளக்கினார்.
நடவடிக்கை
நம் அண்டை நாடான சீனாவின் கிங்டாவ் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாடு நேற்று முன்தினம் நடந்தது.
இதில், இந்தியா சார்பில் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்றார். இதன் நடுவே, அந்நாட்டு ராணுவ அமைச்சர் டாங் ஜூன்னை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து அவர் பேசினார்.
டாங் ஜூன்னுக்கு, புகழ்பெற்ற பீஹாரின் மதுபானி ஓவியத்தை ராஜ்நாத் சிங் பரிசளித்தார்.
இந்த சந்திப்பு குறித்து ராணுவ அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
பாகிஸ்தானின் எல்லை தாண்டிய பயங்கரவாதம் குறித்தும், அதற்கு இந்தியாவின் பதிலடியான, 'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கை குறித்தும் சீன அமைச்சர் டாங் ஜூனிடம் ராஜ்நாத் சிங் விளக்கினார்.
சீன எல்லைகளில் பதற்றங்களை தணிப்பதற்கும், எல்லைகளை நிர்ணயிப்பதற்கான தற்போதைய வழிமுறையைப் புதுப்பிப்பதற்கும், இதற்கென கட்டமைக்கப்பட்ட திட்டத்தின் கீழ் இரு நாடுகளும் சிக்கலான பிரச்னைகளை தீர்க்க வேண்டும் என, இந்த சந்திப்பில் வலியுறுத்தப்பட்டது.
இரு அமைச்சர்களும் தற்போதுள்ள வழிமுறைகள் வாயிலாக, போர் நிறுத்தம், பதற்றத்தை தணித்தல், எல்லை மேலாண்மை மற்றும் இறுதியில் எல்லை நிர்ணயம் தொடர்பான பிரச்னைகளில் முன்னேற்றம் அடைய பல்வேறு மட்டங்களில் ஆலோசனைகளைத் தொடர ஒப்புக்கொண்டனர்.
இருதரப்பு உறவுகளில் இயல்புநிலையை மீண்டும் கொண்டுவர தேவையான நடவடிக்கைகள் இந்தியா சார்பில் மேற்கொள்ளப்படுவதாக ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான துாதரக உறவுகள் நிறுவப்பட்டு, 75 ஆண்டுகள் நிறைவடைந்ததன் முக்கிய மைல்கல் குறித்து டாங்கிடம் எடுத்துரைத்த சிங், ஆறு ஆண்டு இடைவெளிக்கு பின், கைலாஷ் மானசரோவர் யாத்திரை சீன எல்லை வழியாக மீண்டும் துவங்கப்பட்டதற்கு பாராட்டையும், நன்றியையும் தெரிவித்தார்.
புதிய செயல்முறை
இந்த சந்திப்பின் போது, இரு நாடுகளின் எல்லையில் பதற்றத்தை குறைத்து அமைதி நிலவவும், உறவை மேம்படுத்தவும் நான்கு திட்டங்களை ராஜ்நாத் விளக்கினார்.
அதன்படி, கடந்தாண்டு ஒப்புக்கொள்ளப்பட்ட படைக்குறைப்பு திட்டத்தை பின்பற்றுதல், எல்லை பதற்றத்தை குறைப்பதற்கு முயற்சிகளை மேற்கொள்ளுதல்.
எல்லை வரையறைக் கான முயற்சிகளை துரிதப்படுத்துதல், கருத்து வேறுபாடுகளை குறைப்பதற்கும், உறவுகளை மேம்படுத்துவதற்கும் புதிய செயல்முறைகளை தயாரிக்க சிறப்பு பிரதிநிதிகளை பயன்படுத்துதல் போன்றவற்றை அவர் எடுத்துரைத்தார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.