சிரியாவின் வரலாறு மாறிய தருணம் கிளர்ச்சி தளபதி ஐ.நா.,வில் அதிபராக உரை
சிரியாவின் வரலாறு மாறிய தருணம் கிளர்ச்சி தளபதி ஐ.நா.,வில் அதிபராக உரை
சிரியாவின் வரலாறு மாறிய தருணம் கிளர்ச்சி தளபதி ஐ.நா.,வில் அதிபராக உரை
ADDED : செப் 25, 2025 11:25 PM

நியூயார்க்:ஒரு காலத்தில், தேடப்பட்ட பயங்கரவாத அமைப்பின் தளபதியாக இருந்தவர் தற்போது சிரியாவின் அதிபராக மாறி ஐ.நா., பொது சபையில் முதல் உரையை நிகழ்த்தி இருப்பது, உலக அரங்கில் கவனத்தை ஈர்த்துள்ளது.
மேற்காசிய நாடுகளில் ஒன்றான சிரியா, பலதரப்பட்ட பயங்கரவாத அமைப்புகளை சந்தித்துள்ளது.
சிரியா முழுதும் பல தாக்குதல்களை நடத்தியதற்காக ஒரு காலத்தில், தலைக்கு 88 கோடி ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டவர், அல் - குவைதா பயங்கரவாத அமைப்பின் முக்கிய தளபதியான அஹ்மத் அல் ஷாரா.
சிரியா முன்னாள் அதிபர் பஷார் அல் ஆசாத்தை எதிர்த்துப் போராடுவதற்காக, அல் நுஸ்ரா முன்னணி என்ற அமைப்பை அல் ஷாரா 2012ல் நிறுவி உள்நாட்டு கிளர்ச்சியில் ஈடுபட்டு வந்தார்.
சிரியாவில் நடந்த 14 ஆண்டு உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டு வந்து, ஆசாத்தின் ஆட்சியை வீழ்த்தி, கடந்தாண்டு அதிகாரத்திற்கு வந்தார் அல் ஷாரா. அதன் பின்னர், அவரது அரசு சர்வதேச உறவுகளை மீண்டும் கட்டியெழுப்புவதிலும், உள்நாட்டில் சிறுபான்மையினருக்கு நம்பிக்கையளிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறது.
இந்நிலையில், அமெரிக்காவில் நடைபெற்ற ஐ.நா., பொது சபை கூட்டத்தில் சிரியா சார்பில் பங்கேற்று உரையாற்றினார். 60 ஆண்டுக்குப் பின், முதல் முறையாக சிரியாவின் அதிபர் ஒருவர் ஐ.நா.,வில் உரையாற்றியது உலக அரங்கில் கவனம் பெற்றது.
கிளர்ச்சியாளராக இருந்தபோது தன்னை சிறைபிடித்த முன்னாள் அமெரிக்க போலீஸ் அதிகாரி டேவிட் பெட்ரீயஸ் உடன், அவர் மேடையை பகிர்ந்து கொண்டார்.
“ஒரு காலத்தில் நாம் போரில் ஈடுபட்டோம், இப்போது பேச்சில் ஈடுபட்டுள்ளோம்,” என்று அல் ஷாரா சிரித்தபடி கூறினார்.
ஐ.நா., பொது சபைக்கு வெளியேயும், அல் ஷாரா தங்கியிருந்த ஹோட்டலுக்கு வெளியேயும் சிரியா தேசியக் கொடிகளை அசைத்து மக்கள் அவரை உற்சாகப்படுத்தினர்.
அவர் தன் உரையில், “நாட்டின் கடந்தகால துயரமான சகாப்தத்திலிருந்து விடுபட்டு, ஒரு புதிய சிரியாவை உருவாக்குவோம். முரண்பாடுகளின் தாயகமாக இருந்த சிரியா, இன்று அமைதிக்கான வாய்ப்புகளை வழங்கும் நாடாக மாறியுள்ளது,” என்று குறிப்பிட்டார்.