சீனா - பிலிப்பைன்ஸ் கப்பல்கள் மோதிக்கொண்டதால் பதற்றம்
சீனா - பிலிப்பைன்ஸ் கப்பல்கள் மோதிக்கொண்டதால் பதற்றம்
சீனா - பிலிப்பைன்ஸ் கப்பல்கள் மோதிக்கொண்டதால் பதற்றம்
ADDED : செப் 17, 2025 02:11 AM
பீஜிங்:தென்சீன கடல் பகுதியில் உள்ள சர்ச்சைக்குரிய பவள தீவான, 'ஸ்கார்பரோ ஷோல்' அருகே சீனா மற்றும் பிலிப்பைன்ஸ் கப்பல்கள் மோதிக் கொண்டதால், பதற்றம் அதிகரித்துள்ளது.
தென்சீன கடல் பகுதியில் உள்ள ஸ்கார்பரோ ஷோல் தீவு வளமான மீன்பிடி தளமாகும். இது பிலிப்பைன்சின் முக்கிய தீவான லுசோனுக்கு மேற்கே 220 கி.மீ., தொலைவிலும், ஹாங்காங்கிலிருந்து தென்கிழக்கே 880 கி.மீ., தொலைவிலும் உள்ளது.
இத்தீவுக்கான உரிமம் தொடர்பாக, நம் அண்டை நாடான சீனா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்ஸ் இடையே அடிக்கடி மோதல் நிலவி வருகிறது. அண்மையில் சீனா ஸ்கார்பரோ ஷோலின் ஒரு பகுதியை தேசிய இயற்கை இருப்பு பகுதியாக அறிவித்தது.
இதற்கு பிலிப்பைன்ஸ் கடும் கண்டனத்தை தெரிவித்திருந்தது. மேலும், இத்தகைய அறிவிப்பு தங்கள் உரிமைகள் மற்றும் அதிகார வரம்பை மீறுவதாக கூறி, சீனாவிற்கு தன் எதிர்ப்பை தெரிவித்தது.
இந்நிலையில், ஸ்கார்பரோ ஷோல் பகுதி அருகே, சீன கடலோரக் காவல்படை கப்பலும், பிலிப்பைன்ஸ் கப்பல் ஒன்றும் மோதிக் கொண்டன. ஆனால், வேண்டுமென்றே பிலிப்பைன்ஸ் கப்பல் ஒன்று தங்கள் கப்பலுடன் மோதியதாக சீனா குற்றஞ்சாட்டியுள்ளது. இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.