Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/உலகம்/நிலைமை ரொம்ப மோசமா இருக்கு, காப்பாத்துங்க; நேபாளத்தில் சிக்கிய இந்திய பெண் கண்ணீர்

நிலைமை ரொம்ப மோசமா இருக்கு, காப்பாத்துங்க; நேபாளத்தில் சிக்கிய இந்திய பெண் கண்ணீர்

நிலைமை ரொம்ப மோசமா இருக்கு, காப்பாத்துங்க; நேபாளத்தில் சிக்கிய இந்திய பெண் கண்ணீர்

நிலைமை ரொம்ப மோசமா இருக்கு, காப்பாத்துங்க; நேபாளத்தில் சிக்கிய இந்திய பெண் கண்ணீர்

UPDATED : செப் 10, 2025 02:38 PMADDED : செப் 10, 2025 01:27 PM


Google News
Latest Tamil News
பொகாரா: நேபாளத்தில் சிக்கிக் கொண்ட தங்களை மத்திய அரசு காப்பாற்ற வேண்டும் என்று இந்திய பெண் ஒருவர் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.

நேபாளத்தில் வாட்ஸாப், பேஸ்புக், யுடியூப், எக்ஸ் உள்ளிட்ட சமூக வலைதளங்களை அரசு முடக்கியதைக் கண்டித்து அந்நாட்டு இளைஞர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். தலைநகர் காத்மாண்டு, பொகாரா, பிரத்நகர், மற்றும் பரத்பூர் ஆகிய இடங்களில் கலவரம் மூண்டது. அரசு அலுவலகங்கள் சூறையாடப்பட்டன.

மேலும், பல்வேறு கட்டடங்கள், வீடுகளுக்கு போராட்டக்காரர்கள் தீவைத்து எரித்தனர். முன்னாள் பிரதமரின் மனைவியை போராட்டக்காரர்கள் தீவைத்து எரித்துக் கொன்றனர். இதனால், நேபாளத்தில் பதற்றமான சூழல் நிலவியது. வன்முறையை கட்டுப்படுத்த போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 19 பேர் கொல்லப்பட்டனர். இதனிடையே, பிரதமர் மற்றும் அதிபர்கள் பதவி விலகியுள்ளனர். நேபாளத்தில் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த வன்முறையால் நேபாளத்தில் சுற்றுலா மற்றும் பிற காரணங்களுக்காக சென்ற வெளிநாட்டவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, இந்தியர்களும் அங்கு சிக்கியுள்ளனர்.

இந்த நிலையில், வாலி பால் போட்டியை நடத்துவதற்காக நேபாளம் சென்ற உபாசனா கில் என்ற இந்தியப் பெண் ஒருவர், தங்களை உடனடியாக மீட்க வேண்டும் என்று வலியுறுத்தி மத்திய அரசுக்கு அவர் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் அந்தப் பெண் கூறியிதாவது; எங்களுக்கு உதவுமாறு இந்திய தூதரகத்தை கேட்டுக்கொள்கிறேன். நான் நேபாளத்தின் பொகாராவில் சிக்கியுள்ளேன். ஒரு வாலி பால் லீக்கை நடத்துவதற்காக நான் இங்கு வந்திருந்தேன். தற்போது, நான் தங்கியிருந்த ஹோட்டல் தீ வைத்து எரிக்கப்பட்டுவிட்டது. என்னுடைய பொருட்கள் அனைத்தும் எனது அறையில் மாட்டிக் கொண்டன. முழு ஹோட்டலும் தீ வைக்கப்பட்டது. நான் ஸ்பாவில் இருந்தேன்.போராட்டக்காரர்கள் குச்சிகளை எடுத்துக் கொண்டு என்னை துரத்தி வந்தார்கள். நான் அதிர்ஷ்டவசமாக தப்பித்துக் கொண்டேன்.

இங்கு நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது. எல்லா சாலைகளிலும் தீ வைக்கப்படுகிறது. இங்கு வந்திருக்கும் சுற்றுலாப் பயணிகளையும் அவர்கள் விட்டு வைப்பதில்லை. ஒருவர் சுற்றுலாப் பயணியா அல்லது வேலைக்காக வந்தவரா என்பதைப் பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை. யோசிக்காமல், எல்லா இடங்களிலும் தீ வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இங்குள்ள நிலைமை மிக, மிக மோசமாகிவிட்டது. இன்னொரு ஹோட்டலில் நாங்கள் எவ்வளவு காலம் தங்கியிருக்க வேண்டியிருக்கும் என்று எங்களுக்குத் தெரியவில்லை. இந்திய தூதரகத்திற்கு இந்த வீடியோவை அனுப்ப வேண்டும். கைகூப்பி கேட்டுக்கொள்கிறேன், தயவு செய்து எங்களுக்கு உதவுங்கள். என்னோடு இங்கு பலர் உள்ளனர். நாங்கள் அனைவரும் இங்கு சிக்கியுள்ளோம், இவ்வாறு கூறினார்.

இதேபோல, கேரளாவைச் சேர்ந்த 40 பேர் நேபாளத்திற்கு சுற்றுலா சென்றுள்ளனர். அங்கு ஏற்பட்ட வன்முறையால் மீண்டும் சொந்த ஊர் திரும்ப முடியாமல் காத்மாண்டு விமான நிலையத்தில் பரிதவித்து வருகின்றனர்.

கலவரத்தின் போது, பாதுகாப்பு கேட்டு கவுசாலா போலீஸ் ஸ்டேஷனுக்கு 40 பேரும் சென்றுள்ளனர். ஆனால், அங்கிருந்து அவர்களை உடனடியாக வெளியேறுமாக கூறியுள்ளனர். அவர்கள் வெளியேறிய சில நிமிடங்களிலேயே அந்த போலீஸ் ஸ்டேஷனுக்கும் போராட்டக்காரர்கள் தீவைத்ததாக சம்பவத்தை நேரில் பார்த்த இந்திய சுற்றுலாப் பயணிகள் தெரிவித்துள்ளனர்.

கர்நாடகாவைச் சேர்ந்த 30 பேர் நேபாளத்தில் சிக்கி உள்ளனர். அவர்களை பத்திரமாக மீட்கும்படி மாநில தலைமைச்செயலாளருக்கு முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டு உள்ளார்.

அதேபோல் தெலுங்கு பேசும் மக்கள் 187 பேர் அந்நாட்டில் சிக்கி உள்ளதாகவும், அவர்களை மீட்கும் பணியை மாநில அமைச்சர் நர லோகேஷ் கண்காணித்து வருவதாகவும் ஆந்திர அரசு தெரிவித்துள்ளது. மேலும், அந்நாட்டுக்கான இந்திய தூதர் நவீன் ஸ்ரீவஸ்தவாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, மீட்புப் பணிகளை அவர் கண்காணித்து வருவதாகவும் ஆந்திர அரசு தெரிவித்துள்ளது.

நேபாளத்தில் சிக்கியுள்ள இந்தியர்களை பத்திரமாக மீட்டு வர, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகமும், நேபாளத்திற்கான இந்திய தூதரகமும் முழு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us