இந்தியா - சீனா இடையே போட்டி இருக்கலாம்; மோதல் கூடாது: ஜெய்சங்கர்
இந்தியா - சீனா இடையே போட்டி இருக்கலாம்; மோதல் கூடாது: ஜெய்சங்கர்
இந்தியா - சீனா இடையே போட்டி இருக்கலாம்; மோதல் கூடாது: ஜெய்சங்கர்
ADDED : மார் 27, 2025 03:42 AM

புதுடில்லி: “இந்தியா - சீனா இடையே பல்வேறு விஷயங்களில் போட்டி மனபான்மை இருக்கலாம்; ஆனால், அது மோதல் போக்காக மாற வேண்டிய தேவையில்லை,” என, நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
டில்லியில் உள்ள ஆசிய அமைப்பின் நிகழ்வில் நேற்று அவர் பங்கேற்று பேசியதாவது: நம் அண்டை நாடான சீனாவுடன், 1962ல் போர் நடந்தது. அது முடிந்து, 14 ஆண்டுகளுக்குபின் நம் நாட்டிற்கு சீனா துாதரை அனுப்பியது.
நம் நாட்டின் பிரதமர், சீனாவுக்கு செல்ல கூடுதலாக 12 ஆண்டுகள் தேவைப்பட்டது. 1988 முதல் 2020 வரை இரு நாட்டு எல்லைகளுக்கும் இடையே மோதல் நீடித்தது. ஆனால், ரத்தக்கறை படியவில்லை.
எனினும், 2020ல் நடந்த மோதல் இருநாடுகளுக்கு இடையேயான உறவுக்கு சிக்கலை ஏற்படுத்தியது. ஒப்பந்தங்களை மீறியதாக அமைந்தது. ஆனால், கடந்த ஆண்டு அக்டோபர் முதல் இந்தியா - சீனா இடையே உறவில் முன்னேற்றமான போக்கு நிலவி வருகிறது. இருதரப்பும் பரஸ்பரம் விருப்பத்தின்படி, உறவை மீண்டும் கட்டமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.
சீனாவுடன், நாம் பல்வேறு விஷயங்களில் வேறுபட்டு இருக்கலாம். இது, இரு நாடுகளுக்கும் இடையே போட்டி மனப்பான்மையாக இருக்கலாமே தவிர, அது மோதல் போக்காக மாற வேண்டிய தேவையில்லை. இவ்வாறு அவர் பேசினார்.