ADDED : ஜூன் 14, 2026 11:38 PM

- நமது நிருபர் -
'கிரஹலட்சுமி' திட்டத்தின் நிதியுதவியை, பெண்கள் பலரும் நல்ல முறையில் பயன்படுத்துகின்றனர். பெண்கள் சொந்த தேவைக்கு மட்டுமின்றி, பொதுப் பணிகளுக்கும் செலவிட்டு, அரசின் திட்டத்துக்கு, அர்த்தம் கிடைக்க செய்கின்றனர்.
காங்கிரஸ் அரசு செயல்படுத்திய, வாக்குறுதி திட்டங்களில் கிரஹலட்சுமி திட்டமும் ஒன்றாகும். இத்திட்டத்தின் கீழ், குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும், 2,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த பணத்தை பெண்கள், தங்கள் குடும்ப தேவைக்கு, பிள்ளைகளின் கல்விக்கு பயன்படுத்துகின்றனர்.
பணத்தை சேமித்து வைத்து, வீட்டுக்கு தேவையான மிக்சி, கிரைண்டர், வாஷிங்மெஷின் என, பல பொருட்களை வாங்குகின்றனர். சிலர் சுய தொழில் துவக்கினர்.
பெண் ஒருவர் தன் மருமகளுக்கு பேன்சி ஸ்டோர் வைத்து கொடுத்தார். மற்றொரு பெண் கிரஹ லட்சுமி பணத்தை செலவிட்டு, ஊரில் சாலையை சீரமைத்தார்.
மூதாட்டி ஒருவர், ஊராருக்கு விருந்து கொடுத்தார். இவ்வாறு பலரும், பொது நோக்கத்துக்கு அந்த மாதாந்திர பணத்தை பயன்படுத்துகின்றனர்.
உத்தர கன்னடா மாவட்டம், அங்கோலா தாலுகாவின், அம்புகோனா கிராமத்தில் அரசு தொடக்க பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் மாணவர்களுக்கு உணவு தயாரிக்கும் சமையல் அறை, மிகவும் மோசமான நிலையில் இருந்தது; சுகாதாரமும் இல்லை.
இதை பற்றி அரசுக்கு பல முறை, வேண்டுகோள் விடுத்தும் பயன் இல்லை. அம்புகோனா கிராமத்தில், 49 வீடுகள் உள்ளன.
இங்குள்ள அரசு தொடக்க பள்ளியில், 30 மாணவர்கள் படிக்கின்றனர். மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், பள்ளிக்கு அரசிடம் இருந்து நிதியுதவி வரவில்லை. இதனால் சமையல் அறையை பழுது பார்க்க முடியவில்லை.
மாணவர்கள் அமர்ந்து உணவருந்தும் அறை, நல்ல நிலையில் இல்லை. இந்நிலை நீடித்தால் பள்ளியை மூடும் நிலை ஏற்படலாம் என, கிராமத்தினர் அஞ்சினர்.
எனவே, கிராமத்தின் பெண்கள் ஒன்று சேர்ந்து, பள்ளியை மேம்படுத்த முடிவு செய்தனர்.
தங்களூக்கு அரசு வழங்கும், ஒரு மாத கிரஹ லட்சுமி உதவித்தொகையை, பள்ளிக்காக வழங்க முன் வந்தனர்.
அனைத்து பெண்களும் நிதி வழங்கியதில், 98,000 ரூபாய் சேர்ந்தது. இந்த தொகையை செலவிட்டு பள்ளியின் சமையல் அறை, மாணவர்கள் உணவருந்தும் அறையை புதுப்பித்தனர்.
அரசின் நிதியுதவியை, சமூக நலனுக்காக செலவிட்டு, முன் மாதிரியாக திகழ்கின்றனர், இந்த கிராம மக்கள். ஒவ்வொன்றுக்கும் அரசின் நிதியுதவியை எதிர்பார்த்து காத்திராமல், தாங்களே செய்து கொள்ளலாம் என்பதற்கு, அம்புகோனா கிராமத்து பெண்கள் எடுத்துக்காட்டாக மாறியுள்ளனர்.
