Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/7 கோடி ரூபாய் மதிப்பிலான நிலம் அபகரிப்பு

7 கோடி ரூபாய் மதிப்பிலான நிலம் அபகரிப்பு

7 கோடி ரூபாய் மதிப்பிலான நிலம் அபகரிப்பு

7 கோடி ரூபாய் மதிப்பிலான நிலம் அபகரிப்பு

ADDED : செப் 08, 2011 02:13 AM


Google News
சேலம்: சேலம் அருகே, 7 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை அபகரித்ததாக, தி.மு.க.,- பா.ம.க., பிரமுகர்கள், ஐந்து பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சேலம் மாவட்டம், இடைப்பாடி வட்டம், கொங்கணாபுரம் அடுத்த கச்சுப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சடையன் (70). இவருக்கு, அங்குள்ள மூலப்பாதை இடத்தில், 4.58 ஏக்கர் நிலம் உள்ளது. இந்நிலத்தை மகன்கள் முருகேசன் (50), சின்னுசாமி ஆகியோருக்கு தலா, 2.29 ஏக்கர் வீதம், 2000 ஜூலை 12ல், சடையன் தானசெட்டில்மென்ட் செய்துள்ளார்.இந்நிலையில், 2வது மகன் சின்னுசாமி இறந்து விட்டதால், அவரது பெயரில் இருந்த, 2.29 ஏக்கர் நிலமும், 2006 ஏப்ரல் 26ல், முருகேசன் பெயருக்கு தானசெட்டில்மென்ட் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக, சின்னுசாமியின் மனைவி பேபி, 2007 செப்.,5ல், கொங்கணாபுரம் ஒன்றிய, தி.மு.க., செயலாளர் பரமசிவம் வசம் முறையிட்டுள்ளார்.அவரது தூண்டுதலின் பேரில், அதே நாளில், நம்பியாம்பட்டி தமிழ்செல்வன், சங்ககிரி புதூர் கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணன் ஆகிய இருவரும் சென்று, சடையனை கடத்தி வந்து, அவரை கொலை செய்வதாக மிரட்டி, முருகேசன் பெயரில் இருந்த, 2.29 ஏக்கருக்கான தானசெட்டில் மென்டை ரத்து செய்துவிட்டு, தங்களுடைய பெயரில் இருவரும் கிரயம் செய்து கொண்டனர்.

பின்னர், அந்த நிலத்தை, அக்., 3ல், மகுடஞ்சாவடியை சேர்ந்த, தி.மு.க., பிரமுகர் தங்கவேல், பா.ம.க., கிளை செயலாளர் கோவிந்தராஜ், தி.மு.க., கவுன்சிலர் கணபதி ஆகிய மூவருக்கும் கிரயம் செய்து கொடுத்துள்ளனர்.இதுகுறித்து, மகுடஞ்சாவடி போலீஸில், அக்.,20ல், சடையன் புகார் செய்தார். அதோடு, சங்ககிரி நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தார். விசாரணையில், சடையனுக்கு சொந்தமான நிலத்தில், அத்துமீறி நுழைய தடை விதித்து, 2009 மே.,26ல் நீதிமன்றம் உத்தரவிட்டது.நீதிமன்ற உத்தரவை ஏற்கமறுத்து, தங்கவேல், கோவிந்தராஜ், கணபதி ஆகிய மூவரும் தங்கள் பெயரில் இருந்த, 2.29 ஏக்கர் நிலத்தை, நவம்பர் 13ந் தேதி, வடுகப்பட்டி கிராமத்தை சேர்ந்த ஒன்றிய, தி.மு.க., செயலாளர் பரமசிவம் பெயருக்கு கிரயம் செய்து வைத்துவிட்டனர். அதையடுத்து, முருகேசன் பெயரில் மீதமிருந்த, 2.29 ஏக்கர் நிலத்தையும் அபகரிக்க பரமசிவம் திட்டமிட்டார்.அவருடைய அடியாட்களான, சுப்ரமணி, பாண்டியன், வைத்தி, பச்சமுத்து, கணபதி ஆகியோர் சடையனை மிரட்டி, 2.29 ஏக்கர் நிலத்தை மணி பெயரில், நவ.,24ல் கிரயம் செய்து வைக்கப்பட்டது. அதே நாளில், மணி, அந்த நிலத்தை, பரமசிவம், பச்சமுத்து, வைத்தி, அருணாசலம் ஆகியோர் பெயரில் கிரயம் செய்யப்பட்டது. அந்நிலத்தில் இருந்த தார்சு வீடு, கொட்டகையை சேதப்படுத்தி, மரங்களையும் வெட்டி விட்டனர். நிலத்தின் மொத்த மதிப்பு, 7 கோடி ரூபாய் இருக்கும்.பாதிக்கப்பட்ட சடையன் கடந்த 6ம் தேதி மாவட்ட நிலஅபகரிப்பு மீட்டுக்குழுவில் புகார் செய்தார்.

டி.எஸ்.பி., ஸ்ரீதரன் தலைமையில், இன்ஸ்பெக்டர் ராஜு தீவிர விசாரணை நடத்தினார். விசாரணையில், கொலை மிரட்டல் விடுத்து, போலி ஆவணம் மூலம் நிலத்தை அபகரித்தது தெரியவந்தது.இது தொடர்பாக, மிரட்டி ஆவணங்களை பறித்தது, போலி ஆவணங்கள் தயாரித்தது, போலி ஆவணங்கள் வைத்திருந்தது, நில மோசடி செய்தது, கூட்டு சதியில் ஈடுபட்டது, பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல் ஆகிய ஆறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, மகுடஞ்சாவடி, தி.மு.க., கவுன்சிலர் கணபதி, தி.மு.க., பிரமுகர் தங்கவேல், கொங்கணாபுரம் ஒன்றிய, பா.ம.க., இளைஞரணி செயலாளர் கோவிந்தராஜ், ஒன்றிய, தி.மு.க., கிளை செயலாளர் வைத்தி, தி.மு.க., பிரமுகர் பச்சமுத்து ஆகிய ஐந்து வேரை நேற்று கைது செய்தனர்.ஏற்கனவே, வேறொரு நில அபகரிப்பு சம்பவத்தில் நீதிமன்றத்தில் சரணடைந்து ஒன்றிய, தி.மு.க., செயலாளர் பரமசிவம், சேலம் ஜெயிலில் கம்பி எண்ணி வருகிறார் என்பது குறிப்பிடதக்கது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us