Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/உள்ளாட்சி தேர்தலில் பிரச்னை செய்தால்மிக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்

உள்ளாட்சி தேர்தலில் பிரச்னை செய்தால்மிக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்

உள்ளாட்சி தேர்தலில் பிரச்னை செய்தால்மிக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்

உள்ளாட்சி தேர்தலில் பிரச்னை செய்தால்மிக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்

ADDED : அக் 11, 2011 02:13 AM


Google News
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் யார் பிரச்னை செய்ய நினைத்தாலும் அவர்கள் மீது மிக கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தேர்தல் பார்வையாளர் மதிவாணன் தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கு தேர்தல் பார்வையாளராக சீனியர் ஐ.ஏ.எஸ் அதிகாரி மதிவாணன் நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று தான் அவர் தூத்துக்குடிக்கு வருவதாக இருந்தது. ஆனால் அதற்கு முன்பாக நேற்று முன்தினமே திடீரென தேர்தல் பார்வையாளர் விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார். கலெக்டர் ஆஷீஷ்குமார் மற்றும் அதிகாரிகளுடன் தேர்தல் சம்பந்தமாக ஆலோசனை மேற்கொண்டார். மாநகராட்சி அலுவலகத்தில் தேர்தல் பணிகள் எப்படி நடந்துள்ளது என்பது குறித்து மாநகராட்சி தேர்தல் அதிகாரி தினேஷ் பொன்ராஜ் ஆலிவருடன் ஆலோசனை மேற்கொண்டார். உதவி தேர்தல் அதிகாரிகள் இன்ஜினியர் ராஜகோபாலன், இளநிலை பொறியாளர்கள் சரவணன், பிரின்ஸ் மற்றும் உதவி தேர்தல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.மாநகராட்சி பகுதியில் தேர்தல் ஏற்பாடுகள் எந்த அளவிற்கு நடந்துள்ளது. தேர்தல் நன்னடத்தை விதிகள் எப்படி பாலோவ் பண்ணப்பட்டு வருகிறது உள்ளிட்ட அனைத்தையும் தேர்தல் பார்வையாளர் ஆய்வு செய்தார். நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் பார்வையாளர் மதிவாணன், கலெக்டர் ஆஷீஷ்குமார், மாவட்ட போலீஸ் எஸ்.பி நரேந்திரநாயர் ஆகியோர் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டியளித்தனர்.

கலெக்டர் கூறியதாவது; தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடுகள் அனைத்தும் நல்ல முறையில் நடந்து வருகிறது. 2 ஆயிரத்து 385 வாக்குச்சாவடிகளில் பணிகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வாக்குச்சாவடி அமைந்துள்ள 200 இடங்களில் உள்ள 400 வாக்குச்சாவடிகள் பதட்டம் நிறைந்த வாக்குச்சாவடியாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்படும். இந்த வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு அனைத்தும் வீடியோவில் பதிவு செய்யப்படுகிறது. இது தவிர மிகவும் பதட்டம் நிறைந்த வாக்குச்சாவடிகளில் மைக்ரோ அப்சர்வர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இந்த வாக்குச்சாவடிகளில் வெப்கேமரா பொறுத்தப்பட உள்ளது. முக்கிய தலைவர்கள் பிரசாரம் போன்றவை தேர்தல் அலுவலர்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. அந்த கூட்டங்களில் தேர்தல் நன்னடத்தை விதிகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்ய மொத்தம் 16 பறக்கும்படைகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. தற்போது கூடுதலாக 5 பறக்கும்படை அமைக்கப்பட்டுள்ளது. இதில் 2 பறக்கும்படை தூத்துக்குடி மாநகராட்சி பகுதியிலும், சாத்தான்குளம், கடம்பூர், விளாத்திகுளம் ஆகிய இடங்களில் தலா ஒரு பறக்கும்படையும் பணிகளை மேற்கொள்ளும். தூத்துக்குடி மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கை மொத்தம் 21 மையங்களில் நடக்கிறது. வாக்கு எண்ணிக்கையின் போது ஏதாவது பிரச்னை செய்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது மிக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். எந்த கட்சியாக இருந்தாலும் எந்த வித பாகுபாடும் இல்லாமல் இதுவரை இல்லாத அளவிற்கு மிக கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வாக்கு எண்ணிக்கை மையங்களில் போலீஸ் பாதுகாப்பு அதிக அளவில் செய்யப்படும்.கிராமப்புறங்களிலும் அரசியல் கட்சிகள் சுவர் விளம்பரம், போஸ்டர், டிஜிட்டல் போர்டுகளை இன்றுக்குள் அழிக்கவில்லை என்றால் தேர்தல் அலுவலர்கள் சார்பில் அவை அழிக்கப்படும். அதற்கான செலவு தொகை சம்பந்தப்பட்ட வேட்பாளர் கணக்கில் சேர்க்கப்படும். தேர்தல் பணிகள் அனைத்தும் ஏறக்குறைய முடிவு பெற்று விட்டது. வாக்குச்சாவடியில் தேர்தல் நாள் அன்று பணியாற்றக் கூடிய ஊழியர்களுக்குரிய ஆர்டர் வரும் 16 மற்றும் 18ம் தேதிகளில் வழங்கப்படும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார். மாவட்ட போலீஸ் எஸ்.பி நரேந்திரநாயர் கூறியதாவது; தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் வேட்பாளர்கள் நன்னடத்தை விதிகள் முறையாக பின்பற்றுகிறார்களா என்பது குறித்து தீவிரமாக கண்காணித்து வருகிறோம். கடந்த சில தேர்தல்களில் தேர்தல் நேரத்தில் பிரச்னை செய்த 400 பேர் விபரம் சேகரிக்கப்பட்டு அவர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டு அவர்களிடம் ஆர்.டி.ஓ முன்பாக எழுதி வாங்கப்பட்டுள்ளது. தேர்தல் சம்பந்தமாக மொத்தம் 40 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. கலெக்டர் அலுவலகம், எஸ்.பி அலுவலகம் ஆகிய இடங்களில் தேர்தல் செல் செயல்பட்டு கொண்டிருக்கிறது. இதில் அதிக புகார்கள் வந்து கொண்டிருக்கிறது. புகார்கள் வந்தவுடன் உடனுக்குடன் போலீசார் மற்றும் வருவாய்துறையினர் சென்று நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.17ம் தேதி தேர்தல் பாதுகாப்பு பணியில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் உட்பட 2 ஆயிரத்து 30 பேரும், 19ம் தேதி தேர்தல் பாதுகாப்பு பணியில் ஆயிரத்து 810 போலீசாரும் ஈடுபட உள்ளனர். இது தவிர முன்னாள் ராணுவத்தினர், என்.சி.சி, என்.எஸ்.எஸ் மாணவர்கள் 300 பேர் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர். அதிவேக விரைப்படையில் 10 போலீசார் எப்போதும் தயார் நிலையில் இருப்பர். பிரச்னை ஏற்படும் இடங்களுக்கு இவர்கள் உடனடியாக செல்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் பரிசு பொருளாக கத்திரிகோல், பிரியாணி கொடுத்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வாகனங்களில் இதுவரை பணம் எதுவும் பிடிபடவில்லை. இவ்வாறு எஸ்.பி தெரிவித்தார். தேர்தல் பார்வையாளர் சீனியர் ஐ.ஏ.எஸ் அதிகாரி மதிவாணன் கூறியதாவது;தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் 11 லட்சத்து 2 ஆயிரத்து 441 வாக்காளர்கள் 2 ஆயிரத்து 385 வாக்குச்சாவடிகளில் வாக்களிப்பதற்கு வேண்டிய அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பான முறையில் மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது. மாவட்ட நிர்வாகத்தின் தேர்தல் பணி திருப்தியாக உள்ளது. அமைதியாகவும், நேர்மையாகவும் தேர்தல் நடப்பதற்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. தேர்தல் வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கையில் பிரச்னை செய்தால் அவர்கள் மீது மிக கடுமையான நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us