ADDED : ஜூலை 13, 2011 03:25 AM
நாயகிராம்: இனிமேலும் வன்முறையை பொறுத்துக்கொள்ள முடியாது, ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு பேச்சுவார்த்தைக்கு வந்தால், இந்த அரசு உங்களுக்கு தேவையான அனைத்து இழப்பீடுகளையும் செய்யும் , உங்கள் குடும்பத்தினரையும் பாதுகாக்கும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேசினார்.
மேற்குவங்க மாநில முதல்வராக பொறுப்பேற்ற பின் மம்தா பானர்ஜி நேற்று நக்சலைட்டுகள் பாதிப்பிற்குள்ளான பகுதிகளான ஜங்கிள் மகால் என கூறப்படும் , மேற்குமிட்னாபூர், பங்கூரா, புருலியா உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று நேரில் மக்களை சந்தித்து பேசினார்.பின்னர் மேற்கு மிட்னாபூரில் நடந்த பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: மேற்குமிட்னாபூர் பகுதியில் மேலும் மூன்று கல்லூரிகள் துவங்கப்படவுள்ளன. இங்கு கல்வியின் தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். நீங்கள் (நக்சலைட்டுகள்) ஆயுதங்களை கீழே போட்டால் தான் அமைதிக்கான வழி பிறக்கும் , இப்பகுதியிலிருந்து சுமார் 10 ஆயிரம் பேரை , தேசிய தன்னார்வப்படை, ஹோம்கார்டு, போலீஸ் ஆகிய பணிகளுக்கு நியமனம் செய்யும் புதிய திட்டம் கொண்டு வரப்படும். எனவே இனிமேலும் வன்முறையை இந்த அரசு வேடிக்கை பார்த்து கொண்டிருக்காது. மனம் திருந்தினால் உங்களுக்கு தேவையான அனைத்து இழப்பீடுகளையும் எனது அரசு நிறைவேற்ற தயாராக உள்ளது. உங்கள் குடும்பத்தின் எதிர்காலத்தையும் கவனத்தில் கொள்ளும். இங்குள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பிற்கான பயிற்சி முறையும், சமூக, கலாச்சார , விளையாட்டு அகாடமியும் துவங்கும் திட்டமும் அரசின் தீவிர பரிசீலனையில் உள்ளது இவ்வாறு அவர் பேசினார்.


