Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ரோட்டுக்கு நடுவே, "பணம் காய்க்கும் மரங்கள்!' "மீட்டர்' ஓட்டிய அதிகாரிகள் மேட்டர்' அம்பலம்

ரோட்டுக்கு நடுவே, "பணம் காய்க்கும் மரங்கள்!' "மீட்டர்' ஓட்டிய அதிகாரிகள் மேட்டர்' அம்பலம்

ரோட்டுக்கு நடுவே, "பணம் காய்க்கும் மரங்கள்!' "மீட்டர்' ஓட்டிய அதிகாரிகள் மேட்டர்' அம்பலம்

ரோட்டுக்கு நடுவே, "பணம் காய்க்கும் மரங்கள்!' "மீட்டர்' ஓட்டிய அதிகாரிகள் மேட்டர்' அம்பலம்

UPDATED : ஜூலை 26, 2011 02:12 AMADDED : ஜூலை 25, 2011 09:45 PM


Google News
கோவை : விதிகளை மீறி நடுரோட்டில் விளம்பரங்களை வைக்க அனுமதித்த அதிகாரிகள் மீது விசாரணை நடத்த வேண்டுமென்ற கோரிக்கை வலுத்துள்ளது.

வாகன ஓட்டிகளின் கவனத்தைத் திசை திருப்பும் எந்த விளம்பரத்தையும் அனுமதிக்கக் கூடாது என்று சுப்ரீம் கோர்ட், பல உத்தரவுகளில் தெளிவுபடுத்தியுள்ளது. இந்திய சாலை விதிகளும் இதை வலியுறுத்துவதாகவே உள்ளன. இதற்கு எதிராக செயல்படும் மாநில அரசுகளுக்கு சாலை மேம்பாட்டுக்கான நிதியும் குறைக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது. ஆனால், தமிழகத்தில் கடந்த தி.மு.க., ஆட்சியின்போது, இந்த உத்தரவுகள் அனைத்தும் ஆழக்குழி தோண்டி புதைக்கப்பட்டன. அப்போதைய 'மாஜி' அமைச்சரின் பினாமிகளும், உறவினர்களும், விளம்பரத் தொழிலில் ஆதிக்கம் செலுத்தி வந்ததால், முக்கிய நகரங்கள் அனைத்திலும் விளம்பரப் பலகைகள், தாறுமாறாக வைக்கப்பட்டன. கோவை மாவட்டமே இந்த விதிமீறலில் முதலிடம் பெற்றது. அதிலும் கோவை நகரில் திரும்பிய திசையிலெல்லாம் எல்லா ரோடுகளிலும், 'சென்டர் மீடியன்' அமைக்கப்பட்டு, அவற்றின் நடுவில் 'ஸ்பான்சர்' என்ற பெயரில் விளம்பர விளக்குகள் (ஷைன் போர்டு) வைக்கப்பட்டு, இன்று வரையும் அவை ஒளி வீசுகின்றன. ஒரு குறிப்பிட்ட பகுதியில் 'சென்டர் மீடியன்' அமைக்கும் நிறுவனம், அதில் ஓராண்டு காலம் வரையிலும் விளம்பரங்களை வைத்துக் கொள்ளலாம் என்ற அடிப்படையில்தான் முதலில் இதற்கு அனுமதி தரப்பட்டது. ஆனால், நாளடைவில் அதே 'சென்டர் மீடியன்'கள், பணம் காய்க்கும் மரங்களாக அதிகாரிகளுக்கு மாறி, ஆண்டுக்கணக்கில் அனுமதிக்கப்பட்டது. மற்ற ரோடுகளில் 'ஸ்பான்சர்' மற்றும் 'பிபிபி' (தனியார்-பொது மக்கள் பங்களிப்பு) என்ற பெயர்களில் தேசிய நெடுஞ்சாலைகளிலும் 'சென்டர் மீடியன்' அமைத்து, விளம்பரங்கள் வைக்கப்பட்டன. தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்குச் சொந்தமான ரோடுகளிலும் மத்திய அரசு எச்சரிக்கைக்கு எதிராக இவை அமைக்கப்பட்டன. சாலையை மேம்படுத்துவதற்காகத் தற்காலிகமாக இந்த ரோடுகளை தன் வசம் எடுத்த தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், அந்த ரோடுகளில் இஷ்டத்துக்கு விளம்பரங் களை வைக்க அனுமதித்தனர். அவற்றால், அவர்களுக்கு ஒவ்வொரு நாளும் 'மீட்டர்' கணக்கில் வருமானம் கொட்டியது. சுப்ரீம் கோர்ட் உத்தரவு, சாலை பாதுகாப்பு என எதையும் இவர்கள் மதிக்காமல், இவற்றை அனுமதித்ததற்குக் காரணம் இதுவே. முக்கிய பொறுப்பில் இருந்த அதிகாரிகள் சிலர், இந்த விளம்பரத் தொழிலுக்கு 'காட்பாதர்' ஆக இருந்து, அமோக ஆதரவு அளித்து வந்தனர். ஆட்சி மாற்றத்துக்குப் பின், இந்த விதிமீறல்களின் மீது அரசின் கவனம் திரும்பியது; இது தொடர்பாக விசாரணையும் துவங்கியது. விசாரணையில், விளம்பர நிறுவனங்களுக்கு ஆதரவாக முந்தைய ஆட்சியில் விதிமுறைகள் எப்படி வளைக்கப்பட்டன என்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. உதாரணமாக, ஒரு 'சென்டர் மீடியன்' பகுதியில் ஆறு ஆண்டுகளுக்கு விளம்பரங்களை வைத்துக் கொள்ள ஒரு விளம்பர நிறுவனத்துக்கு முந்தைய கலெக்டர் அனுமதி வழங்கியது தெரியவந்துள்ளது. இதனால், இந்த விதிமீறலுக்குக் காரணமான அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்தி, உரிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று முதல்வருக்கு, 'கோயம்புத்தூர் கன்ஸ்யூமர் காஸ்' செயலர் கதிர்மதியோன் கடிதம் எழுதியுள்ளார். லஞ்ச ஒழிப்புத்துறைக்கும் நிறைய புகார்கள் வருவதால், அத்துறையும் ரகசியமாக களத்தில் இறங்கி விசாரித்து வருகிறது. கடந்த ஆட்சியின்போது 'மீட்டர்' ஓட்டிய அதிகாரிகளின் 'மேட்டர்' விரைவில் வெளியில் வருமென்று எதிர்பார்க்கலாம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us