அசோக்லேலேண்டில் தொழிற்சங்க தேர்தல்
அசோக்லேலேண்டில் தொழிற்சங்க தேர்தல்
அசோக்லேலேண்டில் தொழிற்சங்க தேர்தல்
ADDED : ஆக 12, 2011 10:56 PM
ஓசூர்:ஓசூர் அசோக்லேலேண்ட் யூனிட்-2ல் வரும் 18ம் தேதி தொழிற் சங்க தேர்தல்
நடக்கிறது.ஓசூர் அசோக்லேலேண்ட் யூனிட்-2 தொழிற் சாலையில் தொழிற்ச்சங்க
தலைவராக குலேசன் இருந்து வருகிறார். இந்த தொழிற்சாலையை பொறுத்தவரையில்
ஆண்டுதோறும் தொழிற் சங்க தேர்தல் நடத்தி நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பது
வழக்கம். ஆனால், யூனிட்-2 தொழிற்சாலையில் கடந்த நான்கு ஆண்டாக தொழிற் சங்க
தேர்தல் நடத்தவில்லை.அதிருப்தியடைந்த தொழிலாளர்கள் உண்ணாவிரதம்,
ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணி உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுப்பட்டனர்.கடந்த
சில நாட்களுக்கு முன் தேர்தல் நடத்த கோரி யூனிட்-2 தொழிற்சாலை
தொழிலாளர்களுடன் அண்ணா தொழிற் சங்கம், சி.ஐ.டி.யூ., - ஏ.ஐ.டி.யூ.சி.,
உள்ளிட்ட அ.தி.மு.க., கூட்டணி கட்சி தொழிற் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு
கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.அண்ணா தொழிற்ச்சங்க தலைவர் மாதேவா,
''தொழிற்சாலை நிர்வாகம் தேர்தல் நடத்தாவிட்டால் தொழிலாளர்களே தேர்தலை
நடத்தி போட்டி தலைவரை தேர்வு நடவடிக்கை எடுக்கப்படும், '' என, எச்சரிக்கை
விடுத்தார்.
போராட்டத்தை ஆளும்கட்சி கூட்டணி கையில் எடுத்ததால் தொழிற்சாலை
நிர்வாகம் வேறு வழியின்றி தற்போது தொழிற் சங்க தேர்தல் நடத்த அறிவிப்பு
வெளியிட்டுள்ளது. தொழிற் சங்க தேர்தல் வரும் 18ம் தேதி நடப்பதாகவும்,
வேட்புமனு தாக்கல் வரும் 11ம் தேதி துவங்கி 13ம் தேதி மாலை 6 மணி வரை
நடப்பதாகவும் அறிவித்துள்ளது. வேட்புமனுக்களை வாபஸ் பெற 14ம் தேதி கடைசி
நாளாகவும், 17 செயற்குழு உறுப்பினர்கள் உட்பட மொத்தம் 30 நிர்வாகிகள் இந்த
தேர்தல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.நான்கு ஆண்டுக்கு பின் தற்போது,
தொழிற் சங்க தேர்தல் நடப்பதால் அசோக்லேலேண்ட் யூனிட்-2 தொழிலாளர்கள்
மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


