
தமிழக காங்., தலைவர் தங்கபாலு: உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க., எங்ளை வெளியேற்றவில்லை.
டவுட் தனபாலு: இவ்ளோ வலுவான கூட்டணியை இதுக்கு முன்னயும் பார்த்தது இல்லை; இதுக்கப்புறம் வருமான்னும் தெரியலை... கூட்டணியில இருக்கோமா, இல்லையாங்கிறதே, தி.மு.க., தலைவரின் அறிக்கை வெளியாகிற வரை தெரியாது... ஆனா, கூட்டணி மட்டும் வலுவா இருக்குதாக்கும்...!
இந்திய கம்யூ., மூத்த தலைவர் நல்லகண்ணு: உள்ளாட்சித் தேர்தலில், இந்திய கம்யூ., அ.தி.மு.க.,வுடன் கூட்டணியைத் தொடர்கிறது. இதில், எங்களுக்குரிய மாநகராட்சிகள், நகராட்சிகள் குறித்துப் பேச, கட்சியின் துணைச் செயலர் பழனிச்சாமி தலைமையில், ஏழு பேர் குழு அமைத்துள்ளோம். அக்குழுவினர், விரைவில் பேச்சுவார்த்தையைத் துவக்குவர்.
டவுட் தனபாலு: சுத்தம்... அ.தி.மு.க., மாநகராட்சி மேயர் வேட்பாளர்களையே அறிவிச்சுடுச்சு... நீங்க, இனிமே தான் பேசவே போறோம்கிறீங்க... ஒருவேளை அவங்க, உள்ளாட்சி மன்றங்கள் பட்டியல்ல, மாநகராட்சிகளைச் சேர்க்கலையோ, என்னவோ...!
பிரதமர் மன்மோகன் சிங்: நாட்டின் பாதுகாப்புக்கு பயங்கரவாதம் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. அந்த பயங்கரவாத சவால்களை நினைவுபடுத்தும் விதமாக, மும்பை மற்றும் டில்லியில் சமீபத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல்கள் நிகழ்த்தினர்.
டவுட் தனபாலு: என்னது...? 'நினைவுபடுத்தும் விதமா' தாக்குதல் நடந்திருக்கா...? அப்போ, இப்படியொரு அச்சுறுத்தல் இருக்குங்கிறதை மறந்தே போய்ட்டீங்களா...?
திராவிடர் கழகத் தலைவர் வீரமணி: நமது விழி திறந்த வித்தகர், மான உணர்வை மறந்து, துறந்து, அடிமைகளாகி, காலம் காலமாக கால்நடைகளை விட கேவலமான வாழ்வு வாழ்ந்த திராவிட மக்களாகிய நமக்கு, மானமும், அறிவும், போதித்த நம் அறிவுப் பேராசான், பெரியாரின், 133வது பிறந்த நாள் விழா கொண்டாடப்படுகிறது.
டவுட் தனபாலு: யாரு... 'தமிழ் ஒரு காட்டுமிராண்டி பாஷை... இங்கிலீஷ் படிக்கலைன்னா நாசமாப் போயிடுவோம்'னு திட்டிட்டே இருந்தாரே... அவரோட பிறந்த நாள் தானே... கொண்டாடுங்க; கொண்டாடுங்க...!
மாநில தேர்தல் கமிஷனர் அய்யர்: வேட்பு மனு தாக்கலுக்கான கடைசி நாள் வரை, உரிய திருத்தப் பட்டியலில் இடம்பெறும் வாக்காளர்கள் அனைவரும், உள்ளாட்சித் தேர்தலில் ஓட்டுப் போடும் உரிமையைப் பெறுகின்றனர். உள்ளாட்சித் தேர்தலில், ஒருவரும் ஓட்டுப் போட முடியாத நிலை இருக்கக் கூடாது என, மாநில தேர்தல் கமிஷன் கருதுகிறது.
டவுட் தனபாலு: நாலு பேர் ஓட்டுப் போட முடியாட்டா கூட பரவாயில்லை... ஒருவரே நாலு ஓட்டுப் போடற நிலைமை மட்டும் வந்துடாம பார்த்துக்கோங்க...!
புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி: கடந்த கால வரலாறுகளைப் பார்க்கும்போது, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழுவின் அறிக்கைகள், சம்பவங்களை மூடி மறைப்பதாகவும், காவல் துறை நடவடிக்கைகளுக்கு துணை போவதாகவும் அமைந்துள்ளன. எனவே, பரமக்குடி துப்பாக்கிச்சூடு பற்றி, பணியில் இருக்கும் ஐகோர்ட்டின் இரு நீதிபதிகளைக் கொண்டு விசாரணை செய்ய வேண்டும்.
டவுட் தனபாலு: 'பணியில இருக்கும் நீதிபதிகளை ஐகோர்ட்ல கேட்டா கூட, அவங்க தர்றதில்லை; ஓய்வு பெற்ற நீதிபதிகளைத் தான் பரிந்துரைக்கிறாங்க'ன்னு சட்டசபையிலயே முதல்வர் ஜெயலலிதா தெளிவா சொன்னாங்களே... அப்போ, தூங்கிட்டீங்களா...?