குற்றப் புலனாய்வுத் துறைக்கு சென்னையில் புதிய கோர்ட்
குற்றப் புலனாய்வுத் துறைக்கு சென்னையில் புதிய கோர்ட்
குற்றப் புலனாய்வுத் துறைக்கு சென்னையில் புதிய கோர்ட்
ADDED : செப் 07, 2011 11:41 PM
சென்னை: ''சென்னையில், குற்றப் புலனாய்வுத் துறைக்கு, புதிதாக கோர்ட் அமைக்கப்படும்'' என, தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழக சட்ட சபையில், நீதிநிர்வாகம் மற்றும் சிறைத்துறை மானியக்கோரிக்கையின்போது, அமைச்சர் வெளியிட்ட அறிவிப்புகள்: சென்னை ஐகோர்ட் வளாகத்தில், ஆவணங்கள் வைக்கவும், மொழி பெயர்ப்புத் துறை பயன்பாட்டுக்காகவும், 75 ஆயிரம் சதுர அடியில், 11.95 கோடி ரூபாயில், அடுக்கு மாடி கட்டடம் கட்டப்படும். சென்னை ஐகோர்ட் மதுரை கிளை வளாகத்தில், தலைமை நீதிபதி, நீதிபதிகள் தங்கும் மாளிகை, 4.79 கோடி ரூபாயில் கட்டப்படும். சென்னையில், குற்றப்பிரிவு புலனாய்வுத் துறைக்கு, 32 லட்ச ரூபாயில், புதிதாக கோர்ட் அமைக்கப்படும். புதுக்கோட்டை மாவட்ட கோர்ட் வளாகத்தில், 74.40 லட்ச ரூபாய் செலவில், வழக்கறிஞர்களுக்காக 26 அறைகள் கட்டப்படும். புதுக்கோட்டை, நீலகிரி மாவட்டம் பண்டலூரிலும் புதிதாக மாஜிஸ்திரேட் கோர்ட் அமைக்கப்படும். சிறைத்துறை அறிவிப்புகள்: சிறைகளில் பயன்படுத்தப்பட்டு வரும் நவீன தொழில்நுட்ப கருவிகளை பராமரிக்க, ஒரு இன்ஸ்பெக்டர், 10 எஸ்.ஐ., பணியிடங்கள் உருவாக்கப்படும். சிறைவாசிகளின் மனம் நலம் சார்ந்த பிரச்னைகளுக்கு, ஆலோசனை வழங்க, ஒன்பது உளவியல் நிபுணர் பணியிடங்கள் உருவாக்கப்படும். சிறைத்துறை அதிகாரிகளுக்கு, சட்ட ஆலோசனை வழங்க, ஒரு சட்ட ஆலோசகர் பணியிடம் உருவாக்கப்படும். சிறைவாசிகள் மறுவாழ்வுக்கு, சென்னை பல்கலையில், குழு ஒன்றும் அமைக்கப்படும். சிறைவாசிகள் உறவினர்களிடம் பேச வசதியாக, தொலைபேசி சேவை மையங்கள் அமைக்கப்படும். உதவி சிறை அலுவலர்கள் ஊதிய முரண்பாடு கலையப்படும். ஆண் உயர் அலுவலர்களுக்கு இணையாக, பெண் உயர் அலுவலர்கள் கொண்டு வரப்படுவர். புழல் மத்திய சிறைச்சாலை வளாகத்தில், 1.17 கோடி ரூபாயில் கூடுதல் வசதிகள் ஏற்படுத்தப்படும். இவ்வாறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.


