Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/பழவேற்காடு வரும் பூநாரைகள் காப்பாற்றப்படுமா? : இயற்கை ஆர்வலர்கள் விருப்பம்

பழவேற்காடு வரும் பூநாரைகள் காப்பாற்றப்படுமா? : இயற்கை ஆர்வலர்கள் விருப்பம்

பழவேற்காடு வரும் பூநாரைகள் காப்பாற்றப்படுமா? : இயற்கை ஆர்வலர்கள் விருப்பம்

பழவேற்காடு வரும் பூநாரைகள் காப்பாற்றப்படுமா? : இயற்கை ஆர்வலர்கள் விருப்பம்

ADDED : அக் 05, 2011 12:50 AM


Google News

பழவேற்காடு பறவைகள் சரணாலயத்திற்கு வருகை தரும் பூநாரைகளை காப்பாற்ற, அப்பகுதியை சுற்றி பத்து கி.மீ., தூரத்திற்கு பாதுகாக்கப்பட்ட பகுதியாக, மாநில அரசு அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை இயற்கை ஆர்வலர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இனப்பெருக்கம் செய்யவும், இரையை தேடுவதற்கும் பறவைகள் நாடு விட்டு நாடு பறந்து வருகின்றன. பழவேற்காடு அண்ணாமலைசேரி பகுதி பறவைகளின் சரணாலயமாக விளங்குகிறது. குஜராத் மாநிலத்தில் இருந்து இனப்பெருக்கம் செய்யும் பூநாரை என்ற பறவைகள், உணவுக்காக இந்த பகுதிக்கு வருகின்றன. இந்த ஏரியில் காணப்படும் நுண்ணுயிர்கள், பாசி போன்றவைகளை பூநாரைகள் உண்ணுகின்றன. ஆனால், மீன்களை உண்ணுவதில்லை. முழங்கால் அளவில் உள்ள தண்ணீரில் நிற்கும்; நீந்தத் தெரியாது.



ஓடுதளத்தில் விமானம் ஓடிச்சென்று பறப்பது போல தண்ணீரில் சிறிது நேரம் ஓடிச்சென்று, பூநாரைகள் பறப்பது கண்கொள்ளா காட்சியாக இருக்கும். நவம்பர், டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி, மார்ச் ஆகிய மாதங்களில் 2,000 முதல் 10 ஆயிரம் பறவைகள் வரை வந்து செல்லும். மழைக் காலம் துவங்கும் போது வரும் பறவைகள், கோடை காலம் துவங்கும் போது, இடம் பெயர்ந்து விடுகின்றன. இந்த பறவைகளை தவிர இங்கிலாந்து, ரஷ்யா, சைபீரியா போன்ற நாடுகளிலிருந்தும் பறவைகள் வருகின்றன. வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பறவைகளின் சரணாலயம் அருகில் மீன் சேகரிப்பு மையத்தை, மீன்வளத்துறை கொண்டு வருவதற்குரிய திட்டத்தை உருவாக்கியுள்ளது. இத்திட்டத்திற்கு வனத்துறை அனுமதி வழங்க மறுத்துள்ளது. மீன்பிடி படகுகள் அந்த பகுதியில் வரும்போது, அதன் சத்தத்தினால் பறவைகள் பயந்து ஓடும் வாய்ப்பு உள்ளது. போக்குவரத்து அப்பகுதியில் அதிகரிக்கும் போது பறவைகளின் சரணாலயம் பாதிக்கும். எனவே, மீன் சேகரிப்பு மையத்தை அங்கு கொண்டு வரக்கூடாது என, இயற்கை ஆர்வலர்களின் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.



இது குறித்து இயற்கை ஆர்வலர் முருகவேல் கூறியதாவது: நீர் நிலைகளில் பறவைகள் உணவு உண்பதற்கும், இனப்பெருக்கம் செய்வதற்கும் வருகின்றன. வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் 1750ம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. அங்கு வெளிநாடு பறவைகள் இனப்பெருக்கம் செய்ய வருகின்றன. பழவேற்காடு பறவைகள் சரணாலயத்தில், குஜராத் பகுதிகளிலிருந்து பூநாரைகள் அதிக அளவில் வருகின்றன. இப்பகுதியில் மீன் சேகரிப்பு மையம் அமைத்தால், பறவைகள் சரணாலயம் பாதிக்கப்படும். அதேபோல் நீர்நிலைகளை சுற்றி ரியல் எஸ்டேட் உருவாகுவதற்கும் தடை விதிக்க வேண்டும். சரணாலயத்தை சுற்றியுள்ள பத்து கி.மீ., தூரத்திற்கு எந்த வளர்ச்சி பணிகளும் அமைக்கக் கூடாது என்றும் அந்த இடங்களை பாதுகாக்கப்பட்ட இடமாக அறிவிக்க வேண்டும் என, மத்திய சுற்றுப்புறச்சூழல் மற்றும் வனத்துறை உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசின் இந்த உத்தரவை, பறவைகளின் சரணாலயங்களுக்கு அமல்படுத்த மாநில அரசு முன் வரவேண்டும்.இவ்வாறு முருகவேல் கூறினார்.



- எஸ்.சிந்தாஞானராஜ் -







      Our Apps Available On




      Dinamalar

      Follow us