/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/கல்குவாரிகள் டெண்டர் விடப்படாததால் இழப்புகல்குவாரிகள் டெண்டர் விடப்படாததால் இழப்பு
கல்குவாரிகள் டெண்டர் விடப்படாததால் இழப்பு
கல்குவாரிகள் டெண்டர் விடப்படாததால் இழப்பு
கல்குவாரிகள் டெண்டர் விடப்படாததால் இழப்பு
ADDED : ஆக 29, 2011 11:09 PM
திருத்தணி : திருவள்ளூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் உள்ள கல்குவாரிகள், ஏழு மாதங்களுக்கு மேலாக, டெண்டர் விடப்படாததால், அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் கனிமவள அதிகாரிகளுக்கு முறைப்படி கவனிப்பதால், அரசு அனுமதியின்றி கல்குவாரிகள் தொடர்ந்து இயங்குகின்றன.திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி ஒன்றியத்திற்கு உட்பட்ட கார்த்திகேயபுரம் பகுதியில், ஐந்தாண்டுகளாக, 20 ஏக்கர் பரப்பளவில் (மலைப்பகுதியில்) பத்து கல்குவாரிகள் நடந்து வந்தது. அதே போல் கிருஷ்ணசமுத்திரம் பகுதியில் ஒரு கல்குவாரி இயங்கி வந்தது.மேற்கண்ட கல்குவாரிகளுக்கு, மாவட்ட கனிமவளத்துறையினர் அப்போது, 25 லட்சம் ரூபாய் மதிப்பிற்கு டெண்டர் விடப்பட்டது. இந்நிலையில் இக்கல்குவாரிகளின் டெண்டர் காலம், கடந்த பிப்ரவரி மாதம் 15ம் தேதியுடன் முடிவடைந்தது.தேர்தல் காரணமா?பின்னர் மாவட்ட நிர்வாகம் முறையாக டெண்டர் விடவேண்டும். ஆனால் சட்டசபைத் தேர்தல் வந்ததால், கல்குவாரிகளுக்கு டெண்டர் விடப்படவில்லை. மேலும், தேர்தல் முடிந்து, புதிய ஆட்சி அமைத்து மூன்றரை மாதங்கள் ஓடியது. ஆனாலும் கல்குவாரிகளுக்கு டெண்டர் விடப்படவில்லை. இதனால் அரசுக்கு, பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.உதாரணமாக, கார்த்திகேயாபுரம் மற்றும் கிருஷ்ணசமுத்திரம் ஆகிய இடங்களில், தற்போது கல்குவாரிகளுக்கு டெண்டர் விட்டால், மூன்று கோடி ரூபாய்க்கு மேல் போகும். அந்த பணத்தை கொடுக்க ஒப்பந்ததாரர்களும் தயாராக இருக்கின்றனர். ஆனால், கனிமவளத்துறையினர், டெண்டர் விடுவதற்கு எந்த முயற்சியும் எடுக்காமல் மெத்தனம் காட்டி வருகின்றனர்.
அனுமதியின்றி இயக்கம்:அதே நேரத்தில், அரசு அனுமதியின்றி கார்த்திகேயபுரம் பகுதியில், ஐந்துக்கும் மேற்பட்ட கல்குவாரிகள் இயங்கி வருகிறது. இதற்காக ஒப்பந்ததாரர்கள் மாதா மாதம், மாவட்ட கனிம வளத்துறை மற்றும் வருவாய் துறையினருக்கு தனியாக, 'கவனித்து' வருகின்றனர். இதனால் அதிகாரிகளும் கண்டு கொள்ளவில்லை.தற்போது கூட ஒரு நாளைக்கு, பத்துக்கும் மேற்பட்ட லாரிகளில் கற்கள் மற்றும் கட்டுக்கல் எடுத்து செல்கின்றனர். மலையில் அவ்வப்போது வெடி வைத்து பாறைகளை தகர்ப்பதால், அருகில் உள்ள கிராம பொது மக்களும் பயப்படுகின்றனர். கிராமம் அருகில் உள்ள மலைகளில் பாறைகளை வெடி வைத்து தகர்க்கக் கூடாது என, கிராம பொதுமக்கள் வருவாய் துறையினரிடம் பலமுறை மனு கொடுத்துள்ளனர். இதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை.இதுகுறித்து, கனிமவளத்துறை அதிகாரி ஒருவர் கூறும் போது, ''கல்குவாரி ஒப்பந்தம் முடிந்ததும், டெண்டர் விடுவதற்கு தயாராக இருந்தோம். சட்டசபைத் தேர்தல் வந்ததால் தள்ளிப் போனது. புதிய அரசு வந்தவுடன் டெண்டர் விடுவதற்கு மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கேட்டுள்ளோம். அனுமதி வந்தவுடன் விரைவில் டெண்டர் விடப்படும். தற்போது அனுமதியில்லாமல் இயங்கும் கல்குவாரிகள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
பி.நாராயணன்


