ADDED : அக் 05, 2011 12:46 AM
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு
பஞ்சாயத்து தலைவர்கள் 11 பேர் உட்பட 1,292 பேர் போட்டியின்றி
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். தேர்தல் களத்தில் தற்போது காலியாக உள்ள 3,453
பதவியிடங்களுக்கு 11 ஆயிரத்து 455 வேட்பாளர்கள்
போட்டியிடுகின்றனர்.புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலை
மொத்தமுள்ள நான்காயிரத்து 750 பதவியிடங்களுக்கு 16 ஆயிரத்து 795 பேர்
வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இவற்றில் 303 வேட்புமனுக்கள் தள்ளுபடி
செய்யப்பட்டது. மீதமுள்ள வேட்புமனுக்களில் 3,745 வேட்பாளர்களின் மனுக்கள்
வாபஸ் பெறப்பட்டது.இவர்களைத் தவிர பஞ்சாயத்து தலைவர்கள் 11 பேர்,
பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள் ஆயிரத்து 272 பேர், பஞ்சாயத்து யூனியன்
கவுன்சிலர்கள் நான்குபேர், டவுன் பஞ்சாயத்து கவுன்சிலர்கள் ஐந்துபேர் என
1,292 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். கிராமப்
பஞ்சாயத்துகளில் ஐந்து வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட யாரும்
வேட்புமனு தாக்கல் செய்யாததால் அந்த இடங்கள் காலியாக உள்ளது.தேர்தல்
களத்தில் தற்போது காலியாகவுள்ள 3,453 பதவியிடங்களுக்கு 11 ஆயிரத்து 455
பேர் போட்டியிடுகின்றனர்.மாவட்டத்தில் இருகட்டங்களாக நடைபெறவுள்ள உள்ளாட்சி
தேர்தலில் ஊரகப்பகுதிகளில் ஓட்டுச் சீட்டுகளும், நகர்ப்புற பகுதிகளில்
எலக்ட்ரானிக்ஸ் ஓட்டுப்பதிவு இயந்திரங்களும் பயன்படுத்தப்படுகிறது.ஓட்டுச்
சீட்டுகளை வாக்காளர்கள் எளிதில் இனம்காணும் விதமாக தனித்தனி நிறங்களில் இவை
அச்சடிக்கப்படுகிறது.
மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர்களுக்கு 'மஞ்சள்'
நிறம், பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலர்களுக்கு 'பச்சை' நிறம், பஞ்சாயத்து
தலைவர்களுக்கு 'இளஞ்சிவப்பு(பிங்)' நிறம், பஞ்சாயத்து வார்டு
உறுப்பினர்களுக்கு 'வெள்ளை' நிறங்களில் ஓட்டுச் சீட்டுகள்
அச்சடிக்கப்படுகிறது.ஒரு ஓட்டுச் சாவடியில் இரண்டு பஞ்சாயத்து வார்டு
உறுப்பினர் இருப்பின் ஒன்று 'வெள்ளை' நிறம், மற்றொன்று 'இளம் நீலம்'
நிறத்தில் ஓட்டுச் சீட்டுகள் அச்சிடப்படுகிறது. ஓட்டுச் சீட்டுகளுக்கான
பேப்பர்கள் மாநில தேர்தல் ஆணையத்திடமிருந்து பெறப்பட்டுள்ளது.கிராமப் பஞ்சாயத்துகளை பொறுத்தமட்டில் ஏற்கனவே இருந்த பல உறுப்பினர்
வார்டுகளுக்கு பதிலாக ஒரு உறுப்பினர் வார்டு முறை கொண்டுவரப்பட்டு இதன்படி
புதிய வார்டுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்காரணமாக புதிய வார்டுகளில் எல்லை
எவை?, வாக்காளர்கள் தான் சார்ந்திருக்கும் வார்டு எவை?, ஓட்டு போட எந்த
ஓட்டுச் சாவடிக்கு செல்லவேண்டும் என்ற சந்தேகங்கள் எழலாம்.இதுபோன்று
பஞ்சாயத்து யூனியன் வார்டுகளின் எல்கை மறுநிர்ணயம் செய்திருந்தால் அதற்கான
எல்கை விபரம் மற்றும் ஓட்டுச் சாவடிகள் குறித்தும் சந்தேகங்கள் எழலாம்.
இவற்றை வாக்காளர்கள் எளிதில் தெரிந்துகொண்டு ஓட்டுபோடும் விதமாக இதுகுறித்த
பட்டியல் கிராமங்கள் தோறும் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்படும்.


