வாகன முகப்பு விளக்குகளில் கறுப்பு நிறம் பூசாததால் நடவடிக்கை
வாகன முகப்பு விளக்குகளில் கறுப்பு நிறம் பூசாததால் நடவடிக்கை
வாகன முகப்பு விளக்குகளில் கறுப்பு நிறம் பூசாததால் நடவடிக்கை
ADDED : ஆக 30, 2011 12:28 AM
சென்னை : வாகனங்களின் முகப்பு விளக்குகளில் கறுப்பு நிறம் பூசாததால், கடந்த
ஐந்தாண்டுகளில் 542 வழக்குகளில் வசூலிக்கப்பட்ட தொகை, 54 ஆயிரம் ரூபாய்.
அனைத்து வாகனங்களுக்கும் முகப்பு விளக்குகளில் கறுப்பு நிறம் பூசப்பட
வேண்டும்; எந்த வாகனங்களுக்கும் விதிவிலக்கு இல்லை என, போக்குவரத்துத் துறை
உறுதிபட தெரிவித்துள்ளது. தமிழ்நாடு மோட்டார் வாகன விதிகளின்படி, இருசக்கர
வாகனங்கள், ஆட்டோக்கள், கார்கள், பஸ்கள், லாரிகளின் முகப்பு விளக்கில்,
கறுப்பு நிறம் பூச வேண்டும். பொதுவாக, வாகனங்களின் முகப்பு விளக்குகளில்
கறுப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டப்படுவதைப் பார்க்கலாம். இவ்வாறு கறுப்பு நிறம்
பூசப்படுவதால், எதிரே வரும் வாகனங்களை ஓட்டுபவர்களுக்கு விளக்கின்
வெளிச்சம் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. கறுப்பு நிறம் பூசப்படவில்லை
என்றால், அந்த வாகனத்தின் முகப்பு விளக்கில் இருந்து வெளியேறும் வெளிச்சம்,
எதிரே வாகனங்களை ஓட்டி வருபவரின் கண்களை உறுத்தும். இதனால், விபத்து
ஏற்படக் கூடும். எனவே தான், வாகனங்களின் முகப்பு விளக்குகளில் கண்டிப்பாக
கறுப்பு நிறம் பூசப்பட வேண்டும் என, விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.
இருந்தாலும், இந்த விதிமுறைகள் கண்டிப்புடன் அமல்படுத்தப்படவில்லை என்றும்,
வாகனங்கள் பலவற்றின் முகப்பு விளக்குகளில் கறுப்பு நிறம் பூசப்படாமல்
இயங்கி வருவதாகவும், குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தப் பிரச்னை குறித்து
போக்குவரத்துத் துறையிடம், ஐகோர்ட் வழக்கறிஞர் வி.எஸ்.சுரேஷ் என்பவர்,
தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பித்தார். தமிழகம் முழுவதும்
வாகனங்களின் முகப்பு விளக்குகளில் கறுப்பு நிறம் பூசாத வாகனங்கள் மீது என்ன
நடவடிக்கை எடுக்கப்பட்டது? குறிப்பிட்ட வாகனங்களுக்கு விதிவிலக்கு உள்ளதா?
விதிமுறை மீறல்கள் தொடர்பாக எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டன? என்ற
விவரங்களை அதில் கோரியிருந்தார். இதற்கு போக்குவரத்துத் துறை சார்பில்
அளிக்கப்பட்ட பதில்: அனைத்து வாகனங்களின் முகப்பு விளக்குகளிலும் கறுப்பு
நிறம் பூசப்பட்டுள்ளதா என தணிக்கை மேற்கொள்ளப்படுகிறது. கறுப்பு நிறம்
பூசப்படாத வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை வழங்கப்படுகிறது. அனைத்து வாகனங்களின்
முகப்பு விளக்குகளிலும் கறுப்பு நிறம் பூசப்பட வேண்டும்; எந்த
வாகனங்களுக்கும் விதிவிலக்கு அளிக்கப்படவில்லை. கறுப்பு நிறம் பூசாத
வாகனங்களுக்கு தணிக்கை அறிக்கை வழங்கப்பட்டு, நடவடிக்கை
மேற்கொள்ளப்படுகிறது. 2006ம் ஆண்டு முதல் இதுநாள் வரை, 542 தணிக்கை
அறிக்கைகள் வழங்கப்பட்டு, 54 ஆயிரத்து 200 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து அலுவலகங்களுக்கு தகுதிச் சான்று புதுப்பிக்க வரும்
வாகனங்களுக்கு, முகப்பு விளக்குகளில் கறுப்பு நிறம் பூசப்பட்டுள்ளதா என
ஆய்வு செய்யப்பட்ட பின்பே, தகுதிச் சான்று வழங்கப்பட்டு வருகிறது. புதிய
ஓட்டுனர் உரிமம் பெற வருபவர்கள், உரிமம் புதுப்பிக்க வருபவர்களிடம்,
முகப்பு விளக்குகளில் கறுப்பு நிறம் பூச அறிவுரை வழங்கப்படுகிறது. சாலை
பாதுகாப்பு வார விழா, வாகன தணிக்கையின் போதும் இந்த அறிவுரை
வழங்கப்படுகிறது. இவ்வாறு போக்குவரத்துத் துறை பதிலளித்துள்ளது.
இதுகுறித்து வழக்கறிஞர் வி.எஸ்.சுரேஷ் கூறும் போது, 'மோட்டார் வாகன சட்ட
விதிகளை கண்டிப்புடன் அதிகாரிகள் அமல்படுத்த வேண்டும். வெறும் அறிவுரை
மட்டுமே பலன் தராது. வாகனங்களில் பயன்படுத்தப்படும் விளக்குகளையும்
அதிகாரிகள் சரிபார்க்க வேண்டும். அதிக வெளிச்சம் தரும் விளக்குகளை
பயன்படுத்துவது, விபத்துகளுக்கு காரணமாகிறது. அரசு கண்டிப்புடன் விதிகளை
அமல்படுத்தினால், விபத்துகள் குறையும்' என்றார்.
'ஹெட்லைட்' அளவு? வாகனங்களின், 'ஹெட்லைட்' அனுமதி குறித்து மோட்டார் வாகன
அதிகாரி ஒருவர் கூறியதாவது: வாகனங்களில் பொருத்தப்படும் பேட்டரியின் அளவைப்
பொறுத்தே, பல்புகளின், 'வாட்ஸ்' அளவு கணக்கிடப்படுகிறது. 24 வோல்ட்
பேட்டரிகள் பயன்படுத்தும் பஸ், லாரி மற்றும் கனரக வாகனங்களில், 85 முதல் 95
வாட்ஸ் பல்புகளை பயன்படுத்தலாம். கார், வேன் உள்ளிட்ட இலகு ரக
வாகனங்களில், 12 வோல்ட் பேட்டரி பயன்படுத்தப்படுகிறது. இதில், 55 முதல் 65
வாட்ஸ் பல்புகளும், 6 வோல்ட் பேட்டரி பயன்படுத்தும் டூவீலர்களில், 30 முதல்
35 வாட்ஸ் பல்புகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இந்த அளவீடுகளை மீறி,
கூடுதல் வாட்ஸ் பல்புகள் பயன்படுத்தினால், மோட்டார் வாகனச் சட்டம்
177ன்படி, 100 ரூபாய் அபராதம் விதிக்கலாம். சில இடங்களில் அரிதாக, பல்புகளை
மாற்றிய பின், வாகனத்தை எடுத்துச் செல்ல அனுமதிப்பதும் உண்டு. கூடுதல்
வாட்ஸ் பல்புகளால், எதிரே டூவீலர், வாகனங்களில் வருவோருக்கு கண் கூசுவதால்,
தடுமாறி விபத்துக்குள்ளாக வாய்ப்புள்ளது. தற்போது, நாகரிக
வளர்ச்சிக்கேற்ப, 'ஹாலஜன், அல்ட்ரா வைலட்' போன்ற கண்ணைப் பறிக்கும்,
பல்புகளை வாகனங்களில் பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. இதனால் விபத்து
மட்டுமின்றி, உயிரிழப்புக்கும் வழிவகுத்து விடுவது தான் வேதனை. இவ்வாறு
அதிகாரி கூறினார்.


