ADDED : செப் 07, 2011 02:29 AM
திருவள்ளூர் : திருவள்ளூர் கலெக்டர் ஆஷிஷ் சட்டர்ஜி தலைமையில், நேற்று முன்தினம் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த பொதுமக்கள், தங்களின் தனிப்பட்ட கோரிக்கைகளை நிவர்த்தி செய்யவும், உதவி வழங்கக்கோரியும் மனுக்களை அளித்தனர்.இதன்படி, முதியோர் மற்றும் விதவை உதவித் தொகை வழங்கக்கோரி 54 மனுக்களும், பட்டா வழங்கக்கோரி 47 மனுக்களும், தாட்கோ வங்கி கடன் வழங்கக்கோரி 14 மனுக்களும், வேலை வாய்ப்புக்கோரி 8 மனுக்களும், குடும்ப அட்டைக்கோரி 7 மனுக்களும், ஏனைய உதவிகள் கோரி 74 மனுக்கள் என மொத்தம், 204 மனுக்கள் பெறப்பட்டன.இம்மனுக்கள் மீது, உரிய நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
நிகழ்ச்சியில் மாவட்ட பிற்பட்டோர் மற்றும் பிற்பட்டோர் நலத்துறை சார்பில், உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு, தலா 500 ரூபாய் மதிப்பில், 7 பேருக்கு கண் கண்ணாடியும், கல்வி உதவித் தொகையாக, தலா 1,500 ரூபாய் வீதம், இரண்டு பேருக்கு வழங்கப்பட்டது.
மேலும், கல்வி உதவித் தொகை ஆயிரம் மற்றும் பொறியியல் கல்வித் தொகை மூவாயிரம் ரூபாய்க்கான காசோலையையும் கலெக்டர் வழங்கினார்.இக்கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் பிருத்விராஜூ, தனித் துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) (பொறுப்பு) செல்வராஜ் மற்றும் அரசு அலுவலர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.


