போதிய பஸ் வசதி இல்லாததால் ஆத்திரம்
போதிய பஸ் வசதி இல்லாததால் ஆத்திரம்
போதிய பஸ் வசதி இல்லாததால் ஆத்திரம்
ADDED : செப் 07, 2011 02:35 AM
கும்பகோணம்: கும்பகோணம் அருகே சோழபுரத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல
போதிய பஸ் இல்லாததால் நேற்று காலை மாணவர்கள் திடீர் சாலை மறியலில்
ஈடுபட்டனர். இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கும்பகோணம் அருகே சோழபுரத்தை சுற்றி மான்பாடி, ராமானுஜபுரம், மேலானமேடு,
ஆனூர், குருகூர், மகாராஜபுரம், மனமோடு, அய்யாநல்லூர், மதகரம்,
விளந்தகண்டகம், புத்தூர், துலுக்கவேலி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட
கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் உள்ள மாணவர்கள் பள்ளி,
கல்லூரிகளுக்குச் செல்வதும், அலுவல் பணியாக செல்வதாக இருந்தாலும்
சோழபுரத்திலிருந்து பஸ் மூலம் கும்பகோணம் வர வேண்டும். சோழபுரத்திலிருந்து
கும்பகோணம் வரும் வழியில் ஐந்து தனியார் மற்றும் அரசு கல்லூரிகளும், சில
பள்ளிகளும் உள்ளன. அணைக்கரையிலிருந்து சோழபுரம் வழியாக கும்பகோணம் வரும்
அனைத்து பஸ்களும் காலை நேரத்தில் பெரும் பயணிகள் கூட்டத்தோடு வருவதால்
சோழபுரத்தில் நின்று பயணிகளை ஏற்றிச் செல்லாமல் வருகிறது. அணைக்கரை,
மீன்சுருட்டி, ஜெயங்கொண்டம் பகுதிகளிலிருந்து வரும் ஆயிரக்கணக்கான பயணிகள்
அந்த பஸ்களில் பயணிப்பதால் பஸ்கள் உள்ளே இடம் இல்லாத காரணத்தால் பஸ்கள்
நிற்காமல் சென்று விடுகிறது. அதன்படி, நேற்று காலை 7.30 மணி முதல் சோழபுரம்
அரசு மருத்துவமனை பஸ் ஸ்டாப்பில் இருந்து நூற்றுக்கணக்கான மாணவர்கள்
கல்லூரி மற்றும் பள்ளிகளுக்கு செல்ல காத்திருந்தனர். அப்போது வந்த சில
பஸ்கள் பஸ் ஸ்டாப்பில் நிறுத்தாமல் வந்துவிட்டது. இதனால் ஆத்திரமடைந்த
மாணவர்கள் காலை 8.45 மணி முதல் திடீரென கும்பகோணம் அணைக்கரை மெயின்
ரோட்டில் அமர்ந்து சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில்
சாலையின் இருபுறமும் ஏராளமான வாகனங்கள் வரிசையாக நின்றது. தகவல்
கிடைத்ததும் திருவிடைமருதூர் டி.எஸ்.பி., இளங்கோவன், இன்ஸ்பெக்டர்
செந்தில்குமார் ஆகியோர் மறியல் நடந்த இடத்திற்கு சென்று மாணவர்களுடன்
பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மாணவர்கள், கும்பகோணத்திலிருந்து
சோழபுரம் வரை காலை, மாலை நேரத்தில் இரண்டு அரசு பஸ்கள் இயக்க வேண்டும் என
கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகளும்
மறியல் நடந்த இடத்திற்கு வந்தனர். மாணவர்களும், பொதுமக்களும் அதிகாரிகளிடம்
தங்களுடைய கோரிக்கையை விளக்கி கூறினர். உரிய நடவடிக்கை எடுப்பதாக அளித்த
உத்திரவாதத்தை அடுத்து போராட்டம் விலக்கி கொள்ளப்பட்டது.
சாலை மறியலால் கும்பகோணம் அணைக்கரை சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


