Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/கவனிப்பாரற்று கிடக்கும் தமிழக காங்கிரஸ்

கவனிப்பாரற்று கிடக்கும் தமிழக காங்கிரஸ்

கவனிப்பாரற்று கிடக்கும் தமிழக காங்கிரஸ்

கவனிப்பாரற்று கிடக்கும் தமிழக காங்கிரஸ்

UPDATED : செப் 26, 2011 03:45 AMADDED : செப் 24, 2011 11:17 PM


Google News
Latest Tamil News
தமிழக காங்கிரசுக்கு, புதிய தலைவர் நியமிப்பது குறித்து எந்தவொரு அறிகுறியும் தற்போதைக்கு இல்லை என்று தெரியவந்துள்ளது.

மேலிடப்பொறுப்பாளராக இருக்கும் குலாம்நபி ஆசாத் வெளிநாட்டு சுற்றுப்பயணத்திலேயே இருக்கிறார். இதனால், புதிய தலைவர் நியமனம் இல்லை, பிற முக்கிய விஷயங்களைக் கூட ஆலோசிப்பதற்கு உரிய வழிகள் இல்லாத நிலை, தமிழக காங்கிரசுக்கு ஏற்பட்டுள்ளது. தமிழக சட்டசபைத் தேர்தலில், தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்தது. மாநில தலைவர் தங்கபாலு மீது, சுமத்தப்பட்ட சரமாரியான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அவருக்கு நெருக்கடி உருவானது. இதை உணர்ந்ததால் தங்கபாலுவும் வேறு வழியின்றி, தனது பதவியை ராஜினாமா செய்வதாக கூறி மேலிடத்திற்கு கடிதம் அனுப்பினார்.

இதையடுத்து, தமிழக காங்கிரஸ் தலைவர் பதவிக்கு வேறு யாராவது நியமிக்கப்படுவார்களா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால், துரதிஷ்டவசமாக அதுபோன்ற எந்த முடிவையும் எடுக்காமல் மேலிடம் காலம் தாழ்த்தியது. தங்கபாலுவின் ராஜினாமா கடிதம் என்ன ஆனது என்பது பற்றியோ, அந்த கடிதம் மீது என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது பற்றியோ கூட எந்த தகவலையும், வெளிப்படையாக அறிவிக்காமலேயே இருந்தது.

இந்நிலையில், புதிய தலைமை பற்றி அறிவிப்பு வரும் வரை தன்னையே தலைவராக தொடரும்படி கேட்டிருப்பதாக தங்கபாலு கூறி, அதன்படி தமிழக காங்கிரசின் பணிகளை மேற்கொண்டும் வருகிறார். இந்த சூழ்நிலையில், உள்ளாட்சித் தேர்தல் குறித்த பரபரப்பும் தமிழகத்தை நெருங்க ஆரம்பித்தது. தி.மு.க.,வுடனான கூட்டணி தொடருமா, தொடராதா என்ற கேள்வி, தமிழக காங்கிரசாரிடையே ஏற்பட்டது. இதற்கு உரிய பதிலைச் சொல்லும் நிலையில், காங்கிரஸ் மேலிடமே இல்லாத நிலையில் தங்கபாலுவால் ஒன்றும் செய்ய முடியவில்லை. மாறாக, டில்லிக்கு வந்து அவர் உள்ளாட்சித் தேர்தல் குறித்து ஆலோசனை மேற்கொள்ள இருப்பதாக கூறினார்.

இதற்காக சில எம்.பி.,க்களிடம் மட்டுமே அவர் பேசியதாக தெரிகிறது. உள்ளாட்சிச் தேர்தலில், தமிழக காங்கிரஸ் என்ன நிலைப்பாட்டை எடுப்பது என்பதை மேலிடத்தில் ஆலோசிக்க முடியாத சூழ்நிலை இருந்ததால் குழப்பம் நீடித்தது. உடல்நலக்குறைவு காரணமாக கட்சியின் தலைவர் சோனியாவும் ஓய்வில் இருந்ததால், தி.மு.க., வுடன்

கூட்டணி பேச்சுவார்த்தை துவங்குவதில் மர்மம் நீடித்தது. இந்த சூழ்நிலையில் தான் யாருமே எதிர்பார்க்காத வகையில் தடாலடியாக தனித்துக் கூட்டணி என்று தி.மு.க., அறிவித்தது. தமிழக காங்கிரசின் நிலைமை இதனால்

பரிதாபத்துக்குள்ளானது. மேலிடமும் போதிய அக்கறை எடுக்காமல், தி.மு.க.,வும் ஒரு வார்த்தைகூட சொல்லாமலும் கூட்டணி முறிந்து போனது. புதிய தலைவர் நியமனம் குறித்தும், பல மாதங்களாக எந்தவொரு ஆலோசனையும் மேற்கொள்ளப்படவில்லை. பிற மாநிலங்கள் எல்லாவற்றுக்குமே தலைவர்களை நியமித்து முடித்துவிட்ட மேலிடம், தமிழகத்துக்கு மட்டும் தலைவரை நியமனம் செய்யவில்லை. தமிழக காங்கிரசின் மேலிடப்பொறுப்பாளராக இருக்கும் குலாம்நபி ஆசாத், இவ்விஷயத்தில் போதிய அக்கறையும் காட்ட மறுப்பதாக தெரிகிறது. தனது ஆதரவாளரான தங்கபாலுவை முடிந்தவரைக்கும், தலைவர் பதவியில் இருந்துவிட்டுப் போகட்டும் என நினைக்கிறாரோ என, சந்தேகப்படும் அளவுக்கு அவரது ஆர்வம் இருந்தது. குலாம்நபி ஆசாத் சமீபகாலமாக வெளிநாட்டு சுற்றுப்பயணங்களிலேயே தொடர்ச்சியாக இருக்கிறார். தற்போது கூட அவர் அமெரிக்க சுற்றுப்பயணத்தில் இருப்பதாக

தெரிகிறது. தமிழகத்துக்கு மட்டுமல்லாது, ஆந்திர காங்கிரசுக்கும் அவர் தான் மேலிடத் தலைவர். ஆந்திராவில்

சமீபகாலமாக அரசியல் நிலவரங்கள் எல்லாமே பற்றியெரிகின்ற அளவுக்கு தீவிரமாக உள்ளது. உள்ளாட்சித் தேர்தலில் டில்லி மேலிடத்திற்கு பெரிய பணிகள் இருக்காது என்று கூறப்பட்டாலும், தமிழகத்தில் மாநிலத் தலைவரே இல்லாமல் தேர்தலை சந்திப்பது இதுதான் முதல்முறை என்று கூறப்படுகிறது. தேர்தல் செலவுகளுக்கு நிதி, தேர்தல் பொருட்கள் மற்றும் வழிகாட்டுதல்கள் எதுவுமே மேலிடத்தில் இருந்து இம்முறை தமிழகத்துக்கு முறையாக கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதுவும் ரொம்ப காலத்துக்கு பிறகு, தமிழகத்தில் ஒரு தேர்தலை தனித்தே சந்திக்கப் போகும் நிலையில் அந்த கட்சி உள்ளது. ஆனால், வழிகாட்ட வேண்டிய தேசிய தலைவர் சோனியாவோ ஓய்வில் உள்ளார். மேலிடப்பொறுப்பாளர் குலாம்நபி ஆசாத்தோ அமெரிக்காவில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போதைக்கு கிடையாது : தங்கபாலுவுக்கு பிறகு, புதிய தலைவர் யார் என்பது குறித்து ஆரம்பத்தில் முக்கிய ஆலோசனைகள் நடத்தப்பட்டன. அந்த ஆலோசனைகள் அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் எல்லாமே அப்படியே அந்தரத்தில் உள்ளன. சோனியாவின் உடல்நலக்குறைவு, அடுத்தடுத்த அரசியல் பணிகள் காரணமாக, தமிழக காங்கிரசுக்கு புதிய தலைவர் யார் என்ற கேள்விக்கு பதில் கிடப்பில் கிடக்கிறது. இருப்பினும், கடைசியாக எடுக்கப்பட்ட முடிவுகளின் படி புதிய தலைவர் பதவிக்கு சுதர்சனநாச்சியப்பன், ஞானதேசிகன், கார்வேந்தன், இளங்கோவன் ஆகியோரது பெயர்கள் இருக்கின்றன. இதில் சிதம்பரம் தரப்பில் கடலூர் அழகிரியின் பெயரை பரிந்துரை செய்திருப்பதாக கூறப்பட்டாலும், உண்மையில் காஞ்சிபுரம் விஸ்வநாதனின் பெயர்தான் உள்ளது என, மேலிடத்தின் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் உள்ளாட்சித் தேர்தலுக்கு பிறகே தமிழக தலைவர் நியமனம் குறித்து, மீண்டும் காங்கிரஸ் மேலிடம் சுறுசுறுப்பை காட்டலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- நமது டில்லி நிருபர் -





      Our Apps Available On




      Dinamalar

      Follow us