ஜே.சி.பி., இயந்திரம் பட்டு படுகாயம் : 10 அடி நீள மலைபாம்புக்கு அவசர சிகிச்சை
ஜே.சி.பி., இயந்திரம் பட்டு படுகாயம் : 10 அடி நீள மலைபாம்புக்கு அவசர சிகிச்சை
ஜே.சி.பி., இயந்திரம் பட்டு படுகாயம் : 10 அடி நீள மலைபாம்புக்கு அவசர சிகிச்சை
ADDED : அக் 08, 2011 11:03 PM
திருச்சூர்: வயலில் பணியில் இருந்த ஜே.சி.பி., இயந்திரத்தில் பட்டு, மலைபாம்பின் வயிறு கிழிந்தது. அதற்கு கால்நடை மருத்துவமனையில், ஒரு மணி நேரத்திற்கும் மேலாக, அவசர அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. கேரளா திருச்சூர் மாவட்டம் காரளம் வெள்ளானி பகுதியைச் சேர்ந்தவர் அஜித்குமார். இவரது வயலில், 6ம் தேதி பிற்பகல் ஜே.சி.பி.,இயந்திரம் கொண்டு நிலத்தை தூர்வாரும் பணி நடந்தது. அப்போது யாரும் எதிர்பாராத விதமாக அங்கு ஊர்ந்து வந்த மலைபாம்பு மீது, ஜே.சி.பி., இயந்திரம் பட்டது. இதனால், அதன் வயிற்றுப்பகுதி கிழிந்து வெளியே வந்தது. இதை அடுத்து மலைப்பாம்பை கிராம மக்கள் உதவியோடு தூக்கிச் சென்று, மரமொன்றில் கட்டிப்போட்டனர். இதுகுறித்து காட்டூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசாரும், வனத்துறையினரும், வன விலங்குகளை பாதுகாக்கும் அமைப்பைச் சேர்ந்தவர்களும் விரைந்து வந்து, மலைப்பாம்பை கால்நடை மருத்துவமனையில் சேர்த்தனர்.
விஜயதசமி விடுமுறை தினத்தில், அவசர சிகிச்சைக்காக அழைக்கப்பட்ட டாக்டர்கள் விரைந்து வந்து, அறுவை சிகிச்சை அரங்கில் கிடந்த உருவத்தை பார்த்து திகைத்தனர். பின்னர் மலைபாம்புக்கு மயக்க மருந்து செலுத்தப்பட்டு ஒரு மணிநேரத்திற்கும் மேலாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சையின்போதே மயக்கம் தெளிந்த மலைபாம்பின், தலை மற்றும் வால் பகுதியை, சிலர் பிடித்துக் கொள்ள அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்தது.பின்னர் 10 அடி நீளமும், 36 செ.மீட்டர் தடிமனும், 18 கிலோ எடையும் கொண்ட அந்த மலைப்பாம்பை வனத்தில் கொண்டு சென்று விடுவதற்கு வசதியாக, வனத் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.


