Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/தேர்தல் பிரசாரத்தில் அரசியல் கட்சியினர் பதவியை கைப்பற்ற நால்வருக்குள் போட்டி

தேர்தல் பிரசாரத்தில் அரசியல் கட்சியினர் பதவியை கைப்பற்ற நால்வருக்குள் போட்டி

தேர்தல் பிரசாரத்தில் அரசியல் கட்சியினர் பதவியை கைப்பற்ற நால்வருக்குள் போட்டி

தேர்தல் பிரசாரத்தில் அரசியல் கட்சியினர் பதவியை கைப்பற்ற நால்வருக்குள் போட்டி

ADDED : அக் 12, 2011 02:49 AM


Google News
திருப்பூர் : திருப்பூர் மாநகராட்சியில் மேயர் பதவியை கைப்பற்ற, ஏழு கட்சி வேட்பாளர்கள் உட்பட 28 பேர் போட்டியிடு கின்றனர்.

என்றாலும், அ.தி.மு.க., - தி.மு.க., - தே.மு.தி.க., - ம.தி.மு.க., வேட்பாளர்கள் மத்தியில் கடும் போட்டி நிலவுகிறது. கொளுத்தும் வெயிலையும், கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல், மின்னல் வேகத்தில் பிரசார பயணத்தில் ஈடுபட்டுள்ளனர்.அ.தி.மு.க., வேட்பாளர் விசாலாட்சிக்கு, ஆளும்கட்சி வேட்பாளர் என்ற அந்தஸ்து இருப்பதோடு, இருமுறை போட்டியிட வாய்ப்பு கிடைத்து, தவறவிட்டவர் என்ற அனுதாபமும் சாதகமாக அமைந்துள்ளது. இரண்டு அமைச்சர்கள், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் என ஆளும்கட்சி தரப்பு வரிந்துகட்டி இறங்கியுள்ளதால், எதிரணி வேட்பாளர்கள் போட்டியை சமாளிக்க முடியாமல் தடுமாறுகின்றனர்.திருப்பூர் அ.தி.மு.க., கோட்டை என்பதை மீண்டும் நிரூபிக்க வேண்டும் என்பதால், இரு அமைச்சர்களை தேர்தல் பொறுப்பாளர்களாக அறிவித்து, மண்டல பொறுப்பாளர்களையும் கட்சி தலைமை நியமித்துள்ளது. அதனால், கோஷ்டி வேறுபாடுகளை மறந்து, அந்தந்த வார்டுகளில் கட்சியினர் தீவிரமாக ஓட்டு சேகரித்து வருகின்றனர்.எனினும், 'வெற்றி உறுதி என்ற மிதப்பில் தொண்டர்கள் இருக்கக் கூடாது; தெருவில் இறங்கி பணியாற்ற வேண்டும்,' என தொண்டர்களை அரவணைத்துச் செல்கிறார், மாவட்ட செயலாளர் ஆனந்தன். அ.தி.மு.க., வேட்பாளருக்கு பக்கபலமாக இருந்து, பிரசாரம் செய்து வருவதால், தேர்தல் களத்தில் விசாலாட்சி முந்திச் செல்கிறார்.மாநகராட்சியின் முதல் மேயர் என்ற அடைமொழியுடன் பிரசாரத்தில் இறங்கியுள்ள தி.மு.க., வேட்பாளர் செல்வராஜ், தனித்து விடப்பட்ட நிலையில் பிரசாரம் செய்து வருகிறார். மாவட்ட செயலாளரான, முன்னாள் அமைச்சர் சாமிநாதன், திருப்பூரில் பிரசாரத்தை துவக்கி வைத்து விட்டு, மாவட்டம் முழுவதும் பிரசார பயணம் மேற்கொண்டுள்ளார். முன்னாள் எம்.எல்.ஏ., கோவிந்தசாமி, தனி கோஷ்டியாக தெருமுனை பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.மாநகராட்சியோடு புதிதாக இணைந்த பகுதிகளுக்கு புதிய முகம் என்பதால், ஒன்றிய செயலா ளரை சில நேரங்களில் அழைத்துச் செல்கிறார் செல்வராஜ். கட்சியினர் அதிகமாக வராவிட்டாலும், கவுன்சிலர் வேட்பாளர்களுடன் சென்று ஆதரவு திரட்டுகிறார்.மாநிலம் முழுவதும் மா.கம்யூ.,வினருடன் தே.மு.தி.க., கூட்டணி என்றாலும், திருப்பூரில் கூட்டணி இல்லை. கம்யூ., கட்சியினர், தே.மு. தி.க., வேட்பாளருக்கு முழு ஆதரவு கொடுப்பதில் சந்தேகம் தொடர்கிறது. 2001 நகராட்சி தேர்தலில், மா.கம்யூ., போட்டியிட்டு இரண்டாவது இடத்தை பெற்றிருந்தும், மேயர் வேட்பாளரை நிறுத்தும் வாய்ப்பை தவறவிட்டு மிகுந்த வருத்தத்தில் உள்ளனர். இதனால், தே.மு.தி.க.,வினருக்கு ஆதரவு கிடைப்பதில் சிக்கல் நீடிக்கிறது.கட்சியினர் ஆதரவு இல்லாவிட்டாலும், மக்கள் ஆதரவு இருப்பதாக கூறி, தே.மு.தி.க., வேட்பாளர்கள் பிரசாரம் செய்து வருகின்றனர். கடந்த உள்ளாட்சி தேர்தலில் 52 வார்டுகளில் போட்டியிட்டு, ஒரு கவுன்சிலரை கூட பெற முடியவில்லை. இத்தேர்தலில், மேயர் பதவி கிடைக்காவிட்டாலும் கவுன்சிலர் பதவிகளை பிடிக்க வேண்டும் என்ற வேகத்தில் பிரசாரம் நடக்கிறது.கம்யூ., கட்சிகளின் ஆதரவு பரிபூரணமாக கிடைக்கும்போது, தே.மு.தி.க., மேயர் வேட்பாளர் இரண்டாம் இடத்தை பிடிக்க வாய்ப்புள் ளது. மேயராக இருந்த தி.மு.க., வேட்பாளரும், அதே நோக்கத்துடன், தன்னுடைய பாணியில் மறைமுகமாக ஆதரவு திரட்டி வருகிறார்.'தி.மு.க., தனியாக நிற்பதால், மக்களுக்கு உண்மையான சொரூபம் தெரிந்து விடும். கம்யூ., கட்சி ஆதரவை பெற்றால், தி.மு.க.,வை புறம்தள்ளி இரண்டாவது அல்லது மூன்றாவது இடத்தை பிடிக்கலாம்,' என, ம.தி.மு.க.,வினரும் புது வியூகம் அமைத்துள்ளனர். வைகோ, தமிழருவி மணியன் உள்ளிட்டோர் ஆதரவாக பிரசாரம் செய்ததால், உத்வேகத்துடன் ம.தி. மு.க., வேட்பாளர் நாகராஜ் பிரசாரம் செய்கிறார்.கட்சிகளின் எதிர்கால அரசியல் வாழ்வை தீர்மானிக்கும் சந்தர்ப்பம் என்பதால், ஒவ்வொரு கட்சியினரும் அதிகப்படியான முயற்சியுடன் பந்தயத்தில் ஓடிக்கொண்டிருக்கின்றனர். இரண்டாமிடத்தை பிடிக்கும் குறிக்கோளுடன் தி.மு.க., மற்றும் தே.மு.தி.க.,வினர் விறுவிறுப் பாக ஓடிக்கொண்டிருந்தாலும், அதிக ஓட்டு வித்தி யாசத்தில் முதலிடத்தை பிடிக்க, விசாலாட்சி ஓடிக்கொண்டிருக்கிறார். இருப்பினும், வரும் 17ல் திருப்பூர் மக்கள் அளிக்கும் தீர்ப்பை பொறுத்தே, தேர்தல் பந்தயத்தில் ஒட்டுமொத்த சாம்பியன் பெறுவது யார் என்பது தெரியவரும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us