Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/கல்விக் கடன் வழங்கினால் நனவாகும் கனவு

கல்விக் கடன் வழங்கினால் நனவாகும் கனவு

கல்விக் கடன் வழங்கினால் நனவாகும் கனவு

கல்விக் கடன் வழங்கினால் நனவாகும் கனவு

ADDED : ஆக 28, 2011 12:48 AM


Google News
உடுமலை : ''மாணவர்களுக்கு கல்விக் கடன் வழங்க, வங்கி அதிகாரிகள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்,'' என, உடுமலை எம்.எல்.ஏ., தெரிவித்தார்.

உடுமலை சிண்டிகேட் வங்கி சார்பில், அனைவருக்கும் வங்கி சேவை திட்டத்தில், விவசாயிகளுக்கு 'ஸ்மார்ட் கார்டு' வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. வங்கியின் உதவி பொது மேலாளர் ரகுநாதன் வரவேற்றார். மாவட்ட கலெக்டர் மதிவாணன் தலைமை வகித்தார். துணை பொது மேலாளர் ரவீந்திரநாத் பேசுகையில், ''சிண்டிகேட் வங்கி கோவை மண்டலத்தின் கீழ் உள்ள 77 கிளைகளில், 20 கிளைகள், கிராமப்பகுதியில் செயல்பட்டு வருகின்றன. விவசாயிகள் மற்றும் கிராமப்புற மேம்பாட்டுக்காக, பல்வேறு கடன் வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. மத்திய அரசு திட்டத்தின் கீழ், கிராமப்புறங்களில் அடுத்தாண்டில் 1,493 கிளைகள் துவங்க திட்டமிடப்பட்டுள்ளது. 200 கிளைகள் ஏற்கனவே துவங்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. திருப்பூர் மாவட்டத்தில் 300 விவசாயிகளுக்கு, 2 கோடியே 50 லட்சம், கடன் சாகுபடி பணிகளுக்காக வழங்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில், 21 கிராமங்களை சேர்ந்த வாடிக்கையாளர்கள் அனைவருக்கும், 'ஸ்மார்ட் கார்டு' வழங்கப்படும். கோவை மண்டலத்தில் இயங்கி வரும் வங்கிக் கிளைகள் மூலம், கல்வி, வியாபாரம், விவசாயத்துக்கு 150 கோடி வரை கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது,'' என்றார். உடுமலை எம்.எல்.ஏ., ஜெயராமன், விவசாயிகளுக்கு கடன் உதவிக்கான சான்று வழங்கி பேசுகையில், ''கடன் பெறுவதில் செலுத்தும் ஆர்வத்தை, திருப்பி செலுத்துவதிலும் இருக்க வேண்டும். மாநிலத்தின் கல்வி வளர்ச்சிக்காக, முதல்வர் ஜெயலலிதா, பல ஆயிரம் கோடி ரூபாயை பட்ஜெட்டில் ஒதுக்கியுள்ளார். பல வங்கிகள், கல்விக்கடன் கேட்டு அணுகும் மாணவர்களை, பல்வேறு விதிமுறைகளை தெரிவித்து திருப்பி அனுப்புகின்றனர். அதிருப்தியடையும் பலர், கல்வியையும், கனவையும் கைவிட வேண்டிய அவலம் ஏற்படுகிறது. சிறிய தொழில் செய்பவர்கள், விவசாயிகள், மாணவர்களுக்கு கடன் வழங்க வங்கி அதிகாரிகள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்,'' என்றார்.ஆர்.டி.ஓ., ஜெயமணி, அ.தி.மு.க., நகர செயலாளர் சண்முகம், கண்ணாயிரம், பாஷா பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us