புற்றுநோய் கண்டறியும் மையம்:நெல்லையில் புதிதாக துவக்கம்
புற்றுநோய் கண்டறியும் மையம்:நெல்லையில் புதிதாக துவக்கம்
புற்றுநோய் கண்டறியும் மையம்:நெல்லையில் புதிதாக துவக்கம்
ADDED : அக் 03, 2011 12:21 AM

திருநெல்வேலி:நெல்லையில், புற்றுநோய் அறிதலுக்கான மையத்தை, அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் சாந்தா துவக்கி வைத்தார்.திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், கன்னியாகுமரி உள்ளிட்ட தென்மாவட்டங்களில், புற்றுநோய்க்கான தனி சிகிச்சை மையங்கள் இல்லை. மேலும், தென்மாவட்ட மக்கள் அதிக எண்ணிக்கையில் பீடிச்சுற்றுதல் உள்ளிட்ட புகையிலை தொடர்பான பணிகளில் ஈடுபடுவதால், புற்றுநோய்க்கான வாய்ப்பும் அதிக அளவில் இருக்கிறது. எனவே, சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை, சென்னையில் செயல்படும் உதவும் உள்ளங்கள் அமைப்பு மற்றும் நெல்லையில் கிருஷ்ணா மருத்துவமனை ஆகியவை இணைந்து, புற்றுநோய் விழிப்புணர்வு மற்றும் கண்டறிதலுக்கான பரிசோதனைத் திட்டத்தை துவக்கியுள்ளன.
பாளையங்கோட்டையில் உள்ள கிருஷ்ணா மருத்துவமனையில் செயல்பட உள்ள இந்த மையத்தை, நெல்லை ஆர்யாஸ் ஓட்டலில் நடந்த விழாவில், சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் சாந்தா துவக்கி வைத்துப் பேசியதாவது: 1980களில் இருந்ததை விட, 2000ம் ஆண்டில் குறிப்பாக, 20 ஆண்டுகளில் புற்றுநோயின் பாதிப்பின் அளவும் இருமடங்கு அதிகரித்துள்ளது.
புற்றுநோய் வராமல் தடுக்க இயலும். சிறுவர், சிறுமியர்களாக இருக்கும்போதே, புகைத்தலின் பாதிப்புகளை புரியவைத்தால், புகைப்பழக்கம் பெரிய வயதில் தொற்றிக்கொள்ளாது.ஒரு காலத்தில் பெண்களுக்கு கர்ப்பப் பை வாய் புற்றுநோய் மட்டுமே ஏற்பட்டு வந்தது. ஆனால், சமீபகாலங்களில்மார்பக புற்றுநோய் அதிகரித்துள்ளது. புற்றுநோயை 60 சதவீதம் வராமல் தடுத்து விடலாம். அதிலும், 40 சதவீதம் புகையிலையைத் தவிர்த்தால் தடுத்து விடலாம் என்றார். நிகழ்ச்சியில், உதவும் உள்ளங்கள் தலைவர் சங்கரமகாதேவநல்லூர், டாக்டர் ராஜூ உள்ளிட்டோர் பங்கேற்றனர்.படவிளக்கம்நெல்லையில் புற்றுநோய் கண்டறிதல் மையத்தை, அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் சாந்தா துவக்கி வைத்தார்.


