Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/இலங்கை மீது தடை ம.தி.மு.க. கோரிக்கை

இலங்கை மீது தடை ம.தி.மு.க. கோரிக்கை

இலங்கை மீது தடை ம.தி.மு.க. கோரிக்கை

இலங்கை மீது தடை ம.தி.மு.க. கோரிக்கை

UPDATED : ஜூலை 28, 2011 02:09 AMADDED : ஜூலை 28, 2011 01:07 AM


Google News
Latest Tamil News
இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வலியுறுத்தும் தீர்மானத்தை, பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடரில் நிறைவேற்ற வேண்டும் என, கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

பார்லிமென்டின் மழைக்கால கூட்டத்தொடர் ஆகஸ்ட் 1ம் தேதி துவங்கவுள்ளது. இதையொட்டி, டில்லியில் பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் பவன்குமார் பன்சால் தலைமையில் நேற்று, அனைத்து கட்சி கொறடாக்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், மழைக்கால கூட்டத்தொடரின் போது நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்கள், மசோதாக்கள் உள்ளிட்ட விஷயங்கள் பற்றி விரிவாக ஆலோசிக்கப்பட்டது. பல்வேறு கட்சிகளும் பல்வேறு விஷயங்களை குறிப்பிட்டு பேசின.

அப்போது, தமிழகத்தைச் சேர்ந்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஒரு கோரிக்கை வைக்கப்பட்டது. அந்த கட்சியின் எம்.பி.,யான ஈரோடு கணேசமூர்த்தி இது பற்றி கூறியதாவது: உலகம் முழுவதும் மிக முக்கிய பிரச்னையாக இலங்கைத் தமிழர் பிரச்னை உருவெடுத்து வருகிறது. உலகத் தமிழர்களின் உணர்வுகளுடன் கலந்து நிற்கும் அது, துயரப் பிரச்னையாகக் காணப்படுகிறது. ஆரம்பத்தில் உலக நாடுகளின் கண்களை தந்திரமாக இலங்கை அரசாங்கம் மறைத்துவிட்டது.

ஆனால், அந்நாட்டு அரசாங்கம் செய்த போர்க் குற்றங்களை உலகமே தற்போது கண்டு மனம் பதறித் துடிக்கிறது. தமிழ் மக்கள் மீது ராணுவம் நடத்திய கோரத் தாண்டவத்தைப் பார்த்து, உலக நாடுகள் கண் கலங்கி நிற்கின்றன.இலங்கையின் இந்தக் கொடுமையை, உலக நாடுகள் பலவும் கண்டிக்க ஆரம்பித்துவிட்டன; இலங்கைக்கு தங்களால் இயன்ற நெருக்கடியை அளித்தும் வருகின்றன. ஏற்கனவே ஐரோப்பிய நாடுகள் இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரிச் சலுகைகளை ரத்து செய்துவிட்டன. இலங்கைக்கு அளித்து வந்த உதவிகளை நிறுத்தவும் அமெரிக்கா முடிவெடுத்துள்ளது. இந்த சூழ்நிலையில், இலங்கை மீது பொருளாதார தடையை விதிக்க இந்தியாவும் முன்வர வேண்டும். அதற்கான தீர்மானத்தை வரும் மழைக்கால கூட்டத்தொடரிலேயே நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு கணேசமூர்த்தி பேசினார்.

-நமது டில்லி நிருபர்-







      Our Apps Available On




      Dinamalar

      Follow us