Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/உணவு தானிய சேமிப்பில் புதிய முறை : ஜனாதிபதி யோசனை

உணவு தானிய சேமிப்பில் புதிய முறை : ஜனாதிபதி யோசனை

உணவு தானிய சேமிப்பில் புதிய முறை : ஜனாதிபதி யோசனை

உணவு தானிய சேமிப்பில் புதிய முறை : ஜனாதிபதி யோசனை

ADDED : ஆக 06, 2011 08:14 PM


Google News
பெங்களூரு: 'உணவு தானியங்களை சேமிப்பதில், புதிய முறைகளை உருவாக்க வேண்டும்' என, ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் கூறியுள்ளார்.

வேளாண் அறிவியல் பல்கலைக் கழகத்தின் 45ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில், ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் கலந்து கொண்டார். அப்போது, அவர் பேசியதாவது: நாட்டில், உணவு தானியங்களை சேமித்து வைப்பதில் தற்போது பல்வேறு இடர்ப்பாடுகள் ஏற்பட்டுள்ளன. எனவே, உணவுப் பொருட்களை சேமித்து வைப்பதில் புதிய முறைகளை கையாள வேண்டும். விவசாய வளர்ச்சிக்கு மட்டுமல்லாமல், இதற்கு உதவ வேண்டிய கடமையும் பல்கலைக் கழகங்களுக்கு உள்ளது. நாட்டில் உள்ள அரசு சேமிப்புக் கிடங்குகளின் கொள்ளளவை தாண்டி, அதிக அளவில் உணவு தானியங்கள் வைக்கப்பட்டுள்ளன. இதனால், அவை வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.உணவு தானிய சேமிப்பு முறையில் புதிய முறைகளையும், அறிவியல் முறைகளையும் புகுத்த வேண்டும். கிடங்குகள் கையாள்வதற்கு எளிதாகவும், செலவு குறைவாகவும், போக்குவரத்திற்கு வசதியாகவும் அமைய வேண்டும். குறிப்பாக, உணவு தானியங்கள் வீணாகாமல் பாதுகாப்பான வகையில் அவை இருக்க வேண்டும். நாட்டிற்கு, தற்போது, இரண்டாவது பசுமைப் புரட்சி தேவையாக உள்ளது. பசி, பட்டினியால் வாடுவோர் இல்லாத நிலையை உருவாக்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது. விவசாய பல்கலைக் கழகங்களும், கல்வி நிறுவனங்களும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு போட்டியாக முன்மாதிரி திட்டங்களை உருவாக்க வேண்டும். இவ்வாறு பிரதிபா பாட்டீல் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us