Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/கூடன்குளம் அணுமின் நிலைய பிரச்னை பிரதமருடன் இன்று போராட்ட குழுவினர் சந்திப்பு

கூடன்குளம் அணுமின் நிலைய பிரச்னை பிரதமருடன் இன்று போராட்ட குழுவினர் சந்திப்பு

கூடன்குளம் அணுமின் நிலைய பிரச்னை பிரதமருடன் இன்று போராட்ட குழுவினர் சந்திப்பு

கூடன்குளம் அணுமின் நிலைய பிரச்னை பிரதமருடன் இன்று போராட்ட குழுவினர் சந்திப்பு

ADDED : அக் 07, 2011 02:17 AM


Google News

வள்ளியூர் : கூடன்குளம் அணுமின் நிலைய பிரச்னை குறித்து போராட்டக் குழுவினர் டில்லியில் பிரதமரை இன்று (7ம் தேதி) சந்தித்து பேச இருக்கின்றனர்.

கூடன்குளத்தில் ரஷ்ய நாட்டு உதவியுடன் 13 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தலா ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்தி திறன் கொண்ட இரண்டு அணு உலைகள் அமைக்கப்பட்டு வருகிறது. இதில் முதல் அணுஉலையின் கட்டுமான பணிகள் முடிவடைந்து வரும் டிசம்பர் மாதம் இறுதிக்குள் மின் உற்பத்தி தொடங்கப்பட இருக்கிறது. இந்நிலையில் கூடன்குளம் அணுமின் நிலையத்தால் ஆபத்து என்றும் பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என பொதுமக்கள் அஞ்சி கூடன்குளம் அணுமின் நிலையத்தை மூட வேண்டுமென இப்பகுதி பொதுமக்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.



அதன் ஒரு கட்டமாக கடந்த மாதம் 11ம் தேதி இடிந்தகரையில் அணுமின் நிலையத்தை மூட வலியுறுத்தி 127 பேர் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தனர். உண்ணாவிரத போராட்த்திற்கு ஆதரவு தெரிவித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், சமூக அமைப்பினரும் மற்றும் பொதுமக்கள் தினமும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.



இந்நிலையில் போராட்டக்காரர்களை மத்திய அமைச்சர் நாராயணசாமி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்பின் தமிழக முதல்வர் ஜெயலலிதா போராட்டக்காரர்களிடம் இருந்து 10 பேர் கொண்ட குழு அமைத்து சென்னைக்கு வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது போராட்டக்காரர்கள் கூடன்குளம் அணுமின் நிலையத்தை மூட அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமெனவும், இப்பிரச்சனை குறித்து பிரதமரிடம் எடுத்துக்கூற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டனர்.



அதன்படி ஏற்பாடு செய்வதாக தமிழக முதல்வர் அறிவித்ததை தொடர்ந்து உண்ணாவிரதத்தை தற்காலிகமாக கைவிட்டனர். அதன்பின் தமிழக அமைச்சரவை முதல்வர் ஜெயலலிதா தலைமையில் கூடி கூடன்குளம் அணுமின் நிலைய பணிகளை நிறுத்த மத்திய அரசை கேட்டுக் கொண்டு தீர்மானம் நிறைவேற்றினர். பின் அமைச்சர் பன்னீர்செல்வம் தலைமையில் போராட்டக் குழுவினர் பிரதமர் மன்மோகன்சிங்கை சந்திக்க ஏற்பாடு செய்வதாகவும் தெரிவித்தார்.



ஆனால் நாட்கள் பலவாகியும் பிரதமரை சந்திக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இதனை கண்டித்து போராட்டக் குழுவினர் காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2ம் தேதி இடிந்தகரையில் கருத்தரங்கம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். கருத்தரங்கில் வரும் 7ம் தேதிக்குள் கூடன்குளம் அணுமின் நிலைய பணிகளை மத்திய அரசு நிறுத்தாவிட்டால் வரும் 9ம் தேதி மீண்டும் இடிந்தகரையில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப் போவதாகவும், பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்து அணுமின் நிலைய பிரச்னை குறித்து எடுத்துரைக்க போராட்டக் குழுவினருக்கு ஏற்பாடு செய்ய தவறிய மாநில அரசை கண்டித்தும் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி விவாதிக்கப்பட்டது.



இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் மாவட்ட நிர்வாகத்தின் பேரில் 10 பேர் கொண்ட குழுவை அமைத்து பிரதமரை சந்திக்க வருமாறு போராட்டக் குழுவினருக்கு அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. அந்த குழுவில் ராதாபுரம் எம்.எல்.ஏ., மைக்கேல்ராயப்பன், போராட்டக்குழு அமைப்பாளர் உதயகுமார், கூடன்குளம் சிவசுப்பிரமணியன், இடிந்தகரை பங்குதந்தை ஜெயக்குமார், கூத்தன்குழி பங்குதந்தை ரட்சகநாதன், சேரன்மகாதேவி பங்குதந்தை மைப்பால்ஜேசுராஜ், கடலோர மக்கள் கூட்டமைப்பு அமைப்பாளர் புஷ்பராயன், தேசிய மீனவர் சங்க தலைவர் அன்டன்கோமஸ், தமிழக பெண்கள் இணைப்புக்குழு உறுப்பினர் லிட்வின், ஸ்ரீரெங்கநாதபுரத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் ஆகியோர் கொண்ட குழு பிரதமரை சந்திக்க முடிவு செய்யப்பட்டது.



அதன்படி நேற்று முன்தினம் அந்தக்குழு சென்னைக்கு புறப்பட்டு சென்றது. ஆனால் அந்த குழுவில் இடம்பெற்றிருந்த மைக்கேல் ராயப்பன் சென்னைக்கு செல்லவில்லை. இதுகுறித்து அவரிடம் கேட்டபோது :- ''தமிழக அரசோ, மாவட்ட நிர்வாகத்திடம் இருந்தோ தமக்கு முறையாக அழைப்பு வரவில்லை. கடந்த முறை குழுவில் இடம் பெற்றிருந்த எனது பெயர் அரசால் நிராகரிக்கப்பட்டிருந்தது. எனவே முறையான அறிவிப்பு இல்லாமல் போராட்டக்காரர்கள் அழைத்தால் மட்டும் போவதில்லை என்று முடிவு செய்து சென்னைக்கு செல்லவில்லை'' என்றார். இந்நிலையில் நேற்று அந்தக்குழு தலைமை செயலாளரை சந்தித்து டில்லி செல்வது குறித்து திட்டமிட்டனர்.



பின் நேற்று மாலை மீண்டும் தமிழக அரசு சார்பில் 10 பேர் கொண்ட குழுவினர் 13 பேர் கொண்ட குழுவாக மாற்றப்பட்டது. அதில் மறைமாவட்ட ஆயர்கள் தூத்துக்குடி இவான் அம்புரோஸ், கோட்டார் பீட்டர்ரெமிஜூஸ், நெல்லை சிஎஸ்ஐ பிஷப் கிறிஸ்துதாஸ், கன்னியாகுமரி பங்குதந்தை லியோன்டென்சன் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்பேரில் அவர்களில் கோட்டார் பிஷப் பீட்டர்ரெமிஜூஸ் தவிர மற்ற மூன்று பேரும் விமானம் மூலம் சென்னைக்கு வந்தனர். அவர்களுடன் சேரன்மகாதேவி ஆர்டிஓ கிருபாகரனும் சென்றிருந்தார்.



இதில் கோட்டார் பிஷப் பீட்டர் ரெமிஜூஸ் தான் டில்லிக்கு நேரடியாக வருவதாக தெரிவித்ததையடுத்து போராட்டக் குழுவை சேர்ந்த 12 பேரும் நேற்று விமானத்தில் டில்லிக்கு சென்றனர். அவர்கள் இன்று (7ம் தேதி) மதியம் 12.30 மணியளவில் பிரதமரை சந்திக்க தமிழக அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போராட்டக் குழுவை தவிர அரசு சார்பில் அமைச்சர் பன்னீர்செல்வம் தலைமையில் பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த தங்கபாலு, சரத்குமார், சரவணபெருமாள், ராஜா உட்பட 10 பேர் கொண்ட குழுவும் டில்லிக்கு சென்றுள்ளது.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us