/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/"எதையும் எதிர்கொள்ளும் தைரியம் பாரதியிடம் இருந்தது'"எதையும் எதிர்கொள்ளும் தைரியம் பாரதியிடம் இருந்தது'
"எதையும் எதிர்கொள்ளும் தைரியம் பாரதியிடம் இருந்தது'
"எதையும் எதிர்கொள்ளும் தைரியம் பாரதியிடம் இருந்தது'
"எதையும் எதிர்கொள்ளும் தைரியம் பாரதியிடம் இருந்தது'
ADDED : ஆக 14, 2011 10:26 PM
திருப்பூர் : ''எதையும் எதிர்கொள்ளும் திறமையும், தைரியமும் பாரதியிடம் இருந்தது.
சிறு வயதிலேயே பல்வேறு இன்னல்களை சந்தித்தபோதும், நாட்டு விடுதலைக்காக வேகம், விவேகத்துடன் வாழ்ந்தான் பாரதி. நாம், தண்ணீர் விட்டு வளர்த்தது அல்ல சுதந்திரம்; கண்ணீர் விட்டு வளர்த்ததே சுதந்திரம்,'' என பேராசிரியர் ஞானசம்பந்தம் பேசினார்.ஷண்முகானந்த சங்கீத சபா மற்றும் கோவை ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் இணைந்து நடத்தும் 'எப்போ வருவாரோ' ஆன்மிக சொற்பொழிவை, திருப்பூரில் நடத்தின.பேராசிரியர் ஞானசம்பந்தம் பேசியதாவது: பாரதியை பற்றி பேசினால் அவனது பாடல்களை பாடினால் வேகமும், விவேமும் தானாக வரும். தாலாட்டு பாடாத ஒரே கவிஞன் பாரதி; ஏனென்றால், நாடு அடிமைப்பட்டு கிடந்தபோது, அனைவரும் தூங்கிக் கொண்டிருப்பது அவனுக்கு பிடிக்கவில்லை; தாலாட்டு பாடினால், மேலும் தூங்கி விடுவார்களோ என்றெண்ணி, வீறு கொண்ட பாடல்களை பாடினான். புரட்சி என்ற சொல்லே பாரதியால் உருவானது. தமிழ் மரபுகளை தைரியமாக உடைத்து புதுமைகளை புகுத்தியவன் பாரதி மட்டுமே. அன்னிய நாட்டில் பெண் ஒருத்தி கஷ்டப்பட்டதை குறிப்பிடும்போது, விம்மி... விம்மி... விம்மி.. என்று 'விம்மி' என்ற சொல்லை பயன்படுத்தினான். இலக்கணப்படி, இரண்டு 'விம்மி' தான் வரவேண்டும்; மூன்றாவது 'விம்மல்' பாரதியின் விம்மல். வேகம், விவேகங்களை தாண்டி, அமானுஷ்யம் நிறைந்த கவிஞன் பாரதி. குழந்தை, கடவுள், குள்ள சாமியார் என்று அனைவருக்கும் பாடல் பாடினான். ஒரு பாடலில், புதுச்சேரி வீட்டில் இருந்தபோது, குள்ள சாமியார் வந்தார்... ஆகாயத்தை காட்டினார்... குட்டிசுவரை காட்டினார்... ஏதும் பேசாமல் சென்றுவிட்டார். நான் மட்டும் அதன் அர்த்தத்தை புரிந்து கொண்டேன் என்கிறான் பாரதி. வேதாந்த விழுதுகளை கண்டவன்; ஞானம், கல்வி என அனைத்திலும் தேர்ந்தவன் பாரதி. ஒருமுறை காந்திக்கு எழுதிய கடிதத்தில், 'மிஸ்டர் காந்தி, நீங்கள் கூட்டத்தில் பேசும்போது உங்கள் தாய்மொழியில் பேசி இருக்கலாம் அல்லது இந்திய மொழி ஏதேனும் ஒன்றில் பேசியிருக்கலாம். ஏன் அன்னிய நாட்டு மொழியான ஆங்கிலத்தில் பேசினீர்கள்,' என்று கடிதம் எழுதினான்.காந்தி தனது பதிலில், 'நான் செய்தது தவறுதான். எனது மொழியில் பேசியிருக்கவேண்டும்; அதற்காக, வருந்துகிறேன். ஆனால், நீங்கள் எனக்கு எழுதிய கடிதத்தை ஏன் ஆங்கிலத்தில் எழுதினீர்கள்,' என்று கேள்வி எழுப்பினார். 'பிறரை தாக்கிப்பேசுவதற்கு எனது தாய்மொழியை பயன்படுத்த மாட்டேன்' என்று பாரதி தனது பதில் கடிதத்தில் குறிப்பிட்டார். எதையும் எதிர்கொள்ளும் திறமையும், தைரியமும் பாரதியிடம் நிறைந்திருந்தது. சிறு வயதில் தாயை இழந்து, நண்பர்கள் இன்றி தனிமை, பசி, நோயினால் துன்பப்பட்டபோதும், பாரதி தைரியத்துடனும், நகைச் சுவையோடும் வாழ்ந்தான். சமையலுக்கு வைத்திருந்த அரிசியை எடுத்து குருவிகளுக்கு போட்டுவிட்டு, அவை மகிழ்ச்சியோடு உண்பதை பார்த்து, 'காக்கை குருவி எங்கள் ஜாதி... கடலும் மலையும் எங்கள் கூட்டம்...' என்று களிப்புடன் பாடினான். நாடு அடிமைப்பட்டு கிடந்தபோது, 'ஆடுவோமே பள்ளு பாடுவோமே, ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம்....' என்று, சுதந்திரத்துக்கு முன்பே பாடிய ஞானி பாரதி மட்டுமே. தண்ணீர் விட்டு பெற்றதல்ல சுதந்திரம்; கண்ணீர் விட்டு பெற்றதே சுதந்திரம். 39 வயது வரை மட்டுமே வாழ்ந்த பாரதி, தனது வாழ்வில் அனைத்தையும் எழுதி விட்டான். தனது பாடல்கள் மூலம் இன்றும் நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கிறான். சுதந்திர தினத்தை கொண்டாடும்போது, பாரதியார் வேடம் அணிந்து குழந்தைகள் வருவதை பார்க்கும்போது, அவன் இறந்துவிட வில்லை என்பதை நாம் உணர முடிகிறது. இவ்வாறு, பேராசிரியர் ஞான சம்பந்தம் பேசினார்.


