துாத்துக்குடி அனல்மின் நிலையத்தில் பயங்கர தீ விபத்து; ரூ.50 கோடி சேதம்
துாத்துக்குடி அனல்மின் நிலையத்தில் பயங்கர தீ விபத்து; ரூ.50 கோடி சேதம்
துாத்துக்குடி அனல்மின் நிலையத்தில் பயங்கர தீ விபத்து; ரூ.50 கோடி சேதம்
ADDED : மார் 17, 2025 12:52 AM

துாத்துக்குடி: துாத்துக்குடி அனல்மின் நிலையத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து காரணமாக, 50 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்துள்ளன. இதனால், மூன்று யூனிட்களிலும் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
துாத்துக்குடி துறைமுக சாலையில், தமிழக அரசுக்கு சொந்தமான அனல்மின் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு, தலா 210 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட ஐந்து யூனிட்களில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
நேற்று முன்தினம் இரவு 11:00 மணியளவில், 1வது யூனிட் பாய்லரை குளிர்விக்கும் குளிர்சாதன பகுதிக்கு செல்லும் கேபிள் ஒயரில், திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
சிறிது நேரத்தில் தீ மளமளவென பரவியது. தீயணைப்பு வீரர்கள் விரைந்தனர்.
துாத்துக்குடி மட்டுமின்றி, மதுரை மண்டலத்திற்கு உட்பட்ட 20 வாகனங்கள் வாயிலாக நுாற்றுக்கும் மேற்பட்டோர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 20 மணி நேர பெரும் போராட்டத்திற்கு பின், தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
ஆனால், முதல் மூன்று யூனிட் பகுதிக்குள் அதிகளவு புகை மண்டலமாக காட்சியளித்தது. உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாததால் தீயணைப்பு வீரர்கள் உள்ளே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அனல்மின் நிலையத்தை சுற்றி பல மணி நேரம் புகை மண்டலமானது.
தீ விபத்து காரணமாக, 1, 2, 3 ஆகிய யூனிட்களில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், 4 மற்றும் 5வது யூனிட்களில் மின்சாரம் தொடர்ந்து உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
முதல் இரு யூனிட்களிலும், 50 கோடி ரூபாய் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தீ விபத்து ஏற்பட்ட பகுதிகளை கலெக்டர் இளம்பகவத் பார்வையிட்டார். அதிகாரிகளுடன் சிறிது நேரம் ஆலோசனை நடத்திய பின் அவர் கூறியதாவது:
யூனிட் 1 மற்றும் 2ல் உள்ள கேபிள்களில் ஏற்பட்ட தீ, மற்ற யூனிட்களுக்கு பரவுவது தடுக்கப்பட்டுள்ளது. கேபிள்களில் தீ அணைக்கப்பட்ட பிறகும் புகைமூட்டம் உள்ளது. அனல்மின் நிலைய இன்ஜினியர்கள் சில இடங்களை உடைத்து, புதிதாக வழி ஏற்படுத்திக் கொடுத்து, தீயின் தாக்கத்தை குறைக்க ஏற்பாடு செய்தனர்.
தீ விபத்தால் எந்த ஆபத்தும் இல்லை; உயிர்பலி ஏதும் இல்லை. முதல் இரு யூனிட்களும் முழுமையாக மூடப்பட்டுள்ளன; 3வது யூனிட்டில் பாதுகாப்புக்காக உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது; 4 மற்றும் 5வது யூனிட்களில் மின் உற்பத்தி தொடர்ந்து நடந்து வருகிறது. தீயணைப்பு பணியில் ஈடுபட்ட இரு வீரர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். தற்போது நலமாக உள்ளனர். தற்போது தீ முற்றிலுமாக அணைக்கப்பட்டது. பாய்லர்களை குளிர்விக்கும் பகுதிக்கு செல்லும் கேபிள் ஒயர்கள் சரிசெய்யப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.