பிரதமர் பதவிக்கு குறிவைக்கும் நரேந்திர மோடி
பிரதமர் பதவிக்கு குறிவைக்கும் நரேந்திர மோடி
பிரதமர் பதவிக்கு குறிவைக்கும் நரேந்திர மோடி
ADDED : அக் 03, 2011 11:21 PM

பா.ஜ., கட்சியினரே விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், அந்த கட்சியின் நட்சத்திர பேச்சாளராகவும், தலைவராகவும் அடையாளம் காணப்பட்டுள்ளவர், குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தான். ஆரம்பத்தில் இரும்பு மனிதராக தன்னை அடையாளம் காட்டிக் கொண்ட மோடி, தற்போது, அந்த இமேஜை உடைக்க விரும்புகிறார். வளர்ச்சிப் பணிகளை திறமையாக மேற்கொள்ளும் ஒரு தலைவராக, தன்னை மக்களிடம் முன்நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை துவக்கியுள்ளார். சமீபத்தில் அவர் மேற்கொண்ட உண்ணாவிரதம், இதற்கான ஆரம்ப கட்ட முயற்சி.
குஜராத்தில் நடந்த மிகப் பெரிய பூகம்பத்தில், ஆமதாபாத் நகரமே முற்றிலும் சீர்குலைந்து விட்டது. பெரும்பாலான கட்டடங்கள் இடிந்து விட்டன. இந்த பேரிடரில் இருந்து, குஜராத் மாநிலம் மீள்வதற்கு பல ஆண்டுகளாகும் என அனைவரும் கூறினர். ஆனாலும், தன் நிர்வாகத் திறமையால் வளர்ச்சித் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி, முழு வீச்சில் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு, குஜராத் மாநிலத்தை வளர்ச்சிப் பாதையில் திருப்பினார் மோடி.
இதைத் தொடர்ந்து நடந்த கலவரம், நரேந்திர மோடியின் அடையாளத்தை மட்டுமல்லாமல், ஒட்டு மொத்த குஜராத் மாநிலத்தின் அடையாளத்தையும் மாற்றி விட்டது. மோடியின் பெருமைக்கு, இந்த கலவரம், மிகப் பெரிய களங்கத்தை ஏற்படுத்தியது. ஆனாலும், இந்த பிரச்னையிலும் இருந்து மாநிலத்தை மீட்டு தற்போது, தொழில் வளர்ச்சியில் நாட்டிலேயே முதன்மை இடத்துக்கு குஜராத்தை மாற்றிக் காட்டினார் மோடி. அமெரிக்க அரசாங்கமே, அவரின் நிர்வாகத் திறமையைப் பாராட்டியது.
ஆனால் மோடிக்கோ, அடுத்த கட்டமாக, பிரதமர் பதவி மீது பார்வை திரும்பி விட்டது. இதற்கான நடவடிக்கைகளை அவர் துவக்கி விட்டார். பா.ஜ.,வின் பிரதமர் பதவிக்கான வேட்பாளர்களாக, கட்சியின் மூத்த தலைவர்கள் பலர் இருந்தாலும், தன்னை அதில் முதன்மையாக்கிக் கொள்ள விரும்புகிறார் மோடி. தனக்கு தற்போது இருக்கும் பிரபலத்தாலும், மக்கள் செல்வாக்காலும், கட்சியின் மூத்த தலைவர்களிடம் இருந்து வரும் போட்டியை, எளிதாக சமாளித்து விடலாம் என அவர் நினைக்கிறார்.
நரேந்திர மோடி, இளம் வயதில் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பில் தீவிரமாக செயல்பட்டவர். அதில் பிரசாரகராக இருந்தவர். அதேசமயம், இந்து வெறி கொண்டவர் என வர்ணிக்கப்பட்டவர். அகந்தை குணம் உண்டு என்றும் கூறியதுண்டு.
ஆனால், இவரின் சுறுசுறுப்பான பணியும், வேகமும், அந்த அமைப்பின் மூத்த தலைவர்களிடம், இவருக்கு பாராட்டைப் பெற்றுத் தந்தன. கடந்த 1970களில், அப்போதைய குஜராத் ஆளும் கட்சியான காங்கிரசுக்கு எதிராக பிரசாரம் செய்வதிலும், முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டார். அவரின் இந்த தீவிரமான செயல்பாட்டுக்கு, 1986ல் பரிசு கிடைத்தது. பா.ஜ.,வின், குஜராத் மாநிலத்தின் அமைப்பு செயலர் பதவி, அவருக்குக் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, அத்வானி மேற்கொண்ட ரத யாத்திரை ஏற்பாடுகளுக்கான முக்கிய பொறுப்பு, மோடிக்கு வழங்கப்பட்டது. இதில் அவர் செயல்பட்ட வேகம், அத்வானிக்கு மிகவும் பிடித்துப் போனது. இதையடுத்து, படிப்படியாக வளர்ந்து, குஜராத் முதல்வர் பதவியை அவர் பிடித்து விட்டார். அடுத்த குறி, பிரதமர் பதவி தான். 'ஒரே நேரத்தில், இரும்பு மனிதராகவும், வளர்ச்சிப் பணிகளை முழு வீச்சில் மேற்கொள்ளும் நபராகவும், தன்னை அடையாளம் காட்டிக் கொள்வது, நரேந்திர மோடிக்கு மிகவும் சிரமமான காரியமாகவே இருக்கும்' என்கின்றனர், அரசியல் பார்வையாளர்கள்.
- நமது சிறப்பு நிருபர் -


